Subscribe Us

header ads

இலவச கல்வியின் கறுப்புச் சந்தை

-ஷேக்ராஜா -

தனது பாடசாலைக்கு வர்ணம் பூசுவதற்காக ஆசிரியர்களால் கோரப்பட்டிருந்த கட்டணத்தை வழங்குவதற்காக, தனியார் தோட்டமொன்றில் தேங்காய் திருடி விற்ற மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
 
அதேபோல், தன்னுடைய பிள்ளையை தரம் 1 இற்கு பாடசாலையில் அனுமதிப்பதற்காக பாடசாலை நிர்வாகத்தினால் கேட்கப்பட்டிருந்த அன்பளிப்புத் தொகையான 4 ஆயிரம் ரூபாவை செலுத்த வழியின்றி தனது வாழ்வாதாரமான மீன்பிடி வள்ளங்களை விற்பனை செய்த ஒரு ஏழைத் தந்தையின் கண்ணீர் இலவசக் கல்வியை வெட்கித் தலைகுனிய வைத்துவிட்டது.
 
கெட்டு குட்டிச் சுவராகி
 
இலவசக் கல்வி இன்னும் அமுலில் இருக்கின்ற விரல்விட்டு எண்ணக்கூடிய நாடுகளில் இலங்கையும் இருக்கின்றது என்பது நமக்கெல்லாம் பெருமைதான். ஆனால், அந்த இலவசக் கல்விக்காக நாம் செலவிட்டுக் கொண்டிருக்கின்ற பணமும் நமது பெற்றோரிடமிருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டுக் கொண்டிருக்கும் அன்பளிப்புக்களும் இலவசக் கல்வியின் கறுப்புச் சந்தை வியாபாரத்திற்கு கொடுக்கப்படும் விலையாக உணரப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
 
கல்வியே உலகில் மிகச் சிறந்த, அழியாச் செல்வம் என்பார்கள். அதற்காகத்தான் எப்பாடுபட்டாவது தமது பிள்ளைகளை படிக்க வைக்கவேண்டும் என்பதில் பெற்றோர்கள் மிகவும் விழிப்பாக இருக்கின்றனர். கல்வியை புகட்டுகின்றார்கள் என்ற ஒரேயொரு காரணத்திற்காகவே ஆசிரியர்களும் கல்விச் சமூகமும் தாம் வாழும் சமூகத்தால் போற்றப்படுகின்றார்கள். தம்முடைய தனிப்பட்ட திறமைக்காகவோ அன்றேல் வேறெந்த காரணத்திற்காகவோ அவர்கள் அடையாளப்படுத்தப்படுவது கிடையாது.
 
இலங்கையில் பணக்கார பிள்ளைகளுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய ஒரு வாய்ப்பாகவே முற்காலத்தில் பாடசாலைக் கல்வி இருந்தது. சமூகத்தின் கடைநிலையில் உள்ள ஏழைச் சிறுவனுக்கும் அக்கல்வி கிடைக்க வேண்டுமென்ற ஒரு நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே இலவசக் கல்வி முறையை சி.டபள்யூ. டபள்யூ. கன்னங்கரா அறிமுகப்படுத்தி வைத்தார். அதன்பின்னர் பொதுக் கல்வித் துறையில் பாரிய பல மாற்றங்கள் ஏற்பட்டன. இலவசப் புத்தகங்கள், இலவச மதிய உணவு, இலவச சீருடை… என பல்வேறு முன்மாதிரி வரப்பிரசாதங்கள் நமக்கும் நமது தம்பிமாருக்கும் கிடைத்தன.
 
மாணவர்களுக்கு இவ்வாறான வெகுமதிகளை வழங்குவதற்கு மேலதிகமாக அரசாங்கம் வேறு பல வழிகளிலும் கல்விக் கட்டமைப்புக்கு பெருமளவு நிதியை செலவழிக்கின்றது. ஒவ்வொரு ஊருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன, இவற்றிற்கு மத்திய, மாகாண அரசாங்கங்கள் கட்டிடங்கள் மற்றும் தளபாடங்களை அவ்வப்போது வழங்கிக் கொண்டிருக்கின்றது, இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் நியமனம் பெற்றுள்ளதுடன் மாதாந்தம் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது. இவ்வற்றுடன் தொடர்புபட்ட ஏனைய செலவினங்களுக்கும் சேர்த்து அரசாங்கம் பல பில்லியன் ரூபாவை வருடாந்த வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்குகின்றது.
மறுபுறத்தில் நமது நாட்டின் கல்வி நிலை குறித்தும் எழுத்தறிவு வீதம் குறித்தும் நாம் கர்வம் கொள்கின்றோம். இந்நிலையில் சில காலத்திற்கு முன்பு வரைக்கும் கொழும்பு மற்றும் நகர்ப்புற பாடசாலைகளில் பரவியிருந்த ஒரு வகை ‘காய்ச்சல்’ இப்போது கிராமங்களிற்கும் பரவிக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம்.
 
பரவும் காய்ச்சல்
 
கொழும்பில் உள்ள பெயர் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கல்லூரிகளுக்கு பிள்ளைகளை சேர்க்கின்ற போது பல ஆயிரம் ரூபாவை அன்பளிப்பாக பெற்றுக் கொள்கின்ற நடைமுறை காணப்படுகின்றது. பால்மாக்களுக்கு சொல்லாமல் கொள்ளாமல் விலையேற்றி விடுவது போன்று, ஆயிரங்களாக இருந்த இந்த அன்பளிப்புத் தொகை என்பது இலட்சமாக உயர்த்தப்பட்டு விட்டது. இதனால், திறமையுள்ள மற்றும் தகுதியுள்ள எல்லா மாணவர்களுக்கும் நினைத்த மாத்திரத்தில் பிரபல பாடசாலைகளில் அனுமதி கிடைப்பது முடியாத காரியமாகி நெடுங்காலமாயிற்று.
 
தலைநகரிலோ புறநகரிலோ வசிக்கின்ற அல்லது தொழில்செய்யும் நோக்கில் அங்கு நீண்டகாலமாக தங்கியிருக்கின்ற குடும்பங்கள் தமது பிள்ளைகளை இவ்வாறான பாடசாலைகளில் சேர்ப்பதை பெரிதும் விரும்புகின்றன. அப்பாடசாலைகளில் தம்முடைய பிள்ளைகள் கற்றால் சிறந்த கல்வியைப் பெற்றுக் கொள்வார்கள் என்பதுடன் எதிர்காலத்திலும் அவர்களுக்கு ஒரு பிளஸ் பொயின்டாக அது அமையும் என்று கருதுகின்றார்கள். நடைமுறை யதார்த்தத்தின் பிரகாரம் அது உண்மையும்தான். ஆனால் அமைச்சரின் பிள்ளை படிக்கின்ற பாடசாலையில் எமது பிள்ளையும் படிக்கின்றது என்ற வரட்டு கௌரவத்தால் ஒன்றும் ஆகப் போவதில்லை.
 
இந்த எண்ணப்பாட்டின் காரணமாக தம்மிடமுள்ள நகைகளை அடகு வைத்து, படாதபாடுபட்டு பிள்ளைகளை தரம் 1 இற்கு அல்லது வேறு வகுப்புக்களுக்கு அனுமதிக்கின்ற பெற்றோர்கள் நிறையப்பேரை நான் கண்டிருக்கின்றேன். இவ்வாறானவர்கள் அப் பிள்ளை முன்பள்ளிக்கு செல்லும்போதே பணத்தை சேமிக்கவும் அரசியல்வாதிகளை தேடி அலையவும் தொடங்கிவிடுவார்கள். சர்வதேச பாடசாலைகளில் பிள்ளைகளை அனுமதிப்பதும் மேற்குறிப்பிட்டது போன்ற பிரபல கல்லூரிகளில் பிள்ளைகளை அனுமதிப்பதற்கான விண்ணப்பப் படிவத்திற்காக மணித்தியாலக்கணக்கில் வரிசையில் நிற்பதும் அவர்களது நகர வாழ்க்கையில் தவிர்க்க முடியாத கூறாக மாறிவிட்டது.
 
கிட்டத்தட்ட ஒரு வகையான காய்ச்சலைப் போல நகர்ப்புற சூழலையே ஆக்கிரமித்திருந்த இந்த தொற்றுநோய் இப்போது பிரபல்யம் குறைந்த மற்றும் கிராமப் புற பாடசாலைகளுக்கும் பரவ ஆரம்பித்திருக்கின்றது. தரம் 1 இற்கோ அன்றேல் வேறு ஏதாவது வகுப்பிற்கோ பிள்ளை ஒன்றை அனுமதிக்கின்ற சந்தர்ப்பத்தில் பெருந்தொகை நிதி வழங்குமாறு மறைமுகமான வற்புறுத்தல் மேற்கொள்ளப்படுகின்றது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இவ்வாறு பெறப்படும் பணத்திற்கு “அன்பளிப்பு அல்ல நன்கொடை” என்றுதான் பெயர் வைத்திருக்கின்றது பாடசாலை சமூகம்.
 
ஒரு சில பாடசாலைகளில் விண்ணப்பப்படிவ செலவுடனேயே மாணவர்களை சேர்ப்பதற்கு முடியுமென்றாலும், கணிசமான பாடசாலைகளில் நிலைமை தலைகீழாக இருக்கின்றது. உங்கள் பிள்ளையை சேர்ப்பதென்றால் இவ்வளவு அன்பளிப்பு வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. இதனை தரமுடியாவிட்டால் சேர்க்க முடியாது என்பதுதான் இதன் உள்ளர்த்தமாகும். தலைநகர பாடசாலைக்கு மட்டுமல்லாமல் கிராமப்புறப் பாடசாலைகளிலும் இன்று இதுவொரு எழுதப்படாத விதியாகிப் போய்விட்டது.
மாணவர்களை அனுமதிக்கும் போதும் பின்னர் சில தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் இவ்வாறான நிதி அறவீடு நடைபெற்றுக் கொண்டிருப்பது ஒன்றும் பரம இரகசியமல்ல. கல்வி அமைச்சுக்கும் அரசாங்கத்திற்கும் மற்றும் பொறுப்புவாய்ந்த தரப்பினருக்கும் தெரியாத விடயமுமல்ல.
 
வெளிச்சத்துக்கு வந்தவை
 
இவ்வாறான சம்பவங்கள் பல வெளிச்சத்துக்கும் வந்ததால் ஒட்டுமொத்த கல்வி சமூகமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலைமையும் பல தடவை ஏற்பட்டதை குறிப்பிட்டாக வேண்டும். குறிப்பாக, கடந்த வருடத்தில் தனது பிள்ளையை பாடசாலைக்கு சேர்ப்பதற்காக 4 ஆயிரம் ரூபா வழங்குமாறு ஒரு மீனவ தந்தையிடம் கேட்டுக் கொள்ளப்பட்ட போது, அவர் வேறு வழியின்றி தன்னுடைய வாழ்வாதாரமான படகுகளை விற்று அப்பணத்தை செலுத்தியிருந்தார்.
 
அதேபோன்று, குறித்த ஒரு பாடசாலைக்கு வர்ணப்பூச்சு பூசுவதற்காக மாணவி ஒருவரிடமிருந்து 800 ரூபா பணம் கோரப்பட்ட போது, அதனை பெற்றோரிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியாது போன மாணவி ஒருவர், தனியாருக்கு சொந்தமான தோப்பு ஒன்றிலிருந்து தேங்காய்களை திருடி விற்க முற்பட்ட வேளையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அம் மாணவி நீதிமன்றின் முன்னால் நிறுத்தப்பட்ட போது தனது களவுக்கான காரணத்தை மன்றுக்கு கூறினார். இதனைக் கேட்டு நீதி மன்றம் மட்டுமல்ல அலரி மாளிகையே ஆடிப்போய்விட்டது என்றால் மிகையில்லை.
 
நீதிமன்ற உத்தரவின் பெயரில் 50ஆயிரம் சரீரப் பிணையில் அம் மாணவி விடுவிக்கப்பட்டார். அதாவது 800 ரூபா காசுக்காக 50ஆயிரம் சரீரப் பிணை கோரும் குற்றமொன்றுக்கு அவர் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். குற்றமிழைத்தவரைப் போலவே அதற்கு காரணமாக இருந்தவர் சட்டத்தின் பார்வையில் தண்டிக்கப்பட வேண்டியவராயின், அப் பாடசாலை நிர்வாகமே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.
 
இத்தனை காலமும் மூடிய அறைக்குள் காதும் காதும் வைத்தாற்போல் நடைபெற்றுக் கொண்டிருந்த இவ்வாறான அன்பளிப்புக் கோரல்கள் மற்றும் நிதி அறவீடுகளின் பாரதூரமான பின்விளைவு குறித்து ஜனாதிபதி உடனடியாக கவனம் செலுத்தினார். இது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, இது குறித்த சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுமாறும் அறிவுரை வழங்கினார்.
 
கவனிக்கப்படாத சுற்றறிக்கைகள்
 
இதற்கமைய அடுத்தடுத்து இரு சுற்றறிக்கைகளை கல்வியமைச்சு வெளியிட்டது. மாணவர்களிடமிருந்து பணம் அறிவிடுதல் தொடர்பான 2013/11 ஆம் இலக்க சுற்றறிக்கை 2013.03.13 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தரம் 1 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான 2013/23 சுற்றறிக்கை 2013.05.23ஆம் திகதி வெளியானது. இதில் முதலாவது சுற்றறிக்கையானது இவ்விடயம் தொடர்பாக முன்னர் 1975, 1982, 2008, 2012 ஆம் ஆண்டுகளில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளை மீள வலியுறுத்தியிருக்கும் அதேவேளை பண அறவீடு தொடர்பான கண்டிப்பான வரையறைகளை விதித்துள்ளது.
 
அதன்படி – எந்த வகையிலும் பணம் செலுத்த கட்டாயப்படுத்தல் கூடாது,, பணம் செலுத்துவது அவசியமான சந்தர்ப்பத்தில் கூட கிராம அலுவலரால் சிபாரிசு செய்யப்படும் மாணவருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விடுதலை அளிக்கப்படலாம், பணம் செலுத்தாத எந்த மாணவரும் உடல் மற்றும் உள ரீதியான தாக்கங்களுக்கு உட்படுத்தப்படக் கூடாது போன்ற முக்கிய மூன்று விடயங்களை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது இந்த சுற்றறிக்கை.
 
இரண்டாவது சுற்றறிக்கை விஷேடமாக தரம் 1 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பானது. தரம் 1 அனுமதியின் போதே பெருந்தொகை நிதி அறவிடப்படுவதால் இது மிகுந்த கவனிப்பிற்குரியதாகின்றது. இந்த சுற்றறிக்கையில் மாணவர் அனுமதி குறித்து அக்குவேறு ஆணிவேறாக குறித்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 18ஆவது உறுப்புரையானது பிள்ளைகளை அனுமதிக்கையில் பணம் மற்றும் உதவிகள் பெறுவதை தடை செய்கின்றது. பாடசாலைக்கு பிள்ளைகளை தரம் 1 இற்கு அனுமதிக்கும் போது, வசதிகள் மற்றும் சேவைகள் கட்டணமும் பாடசாலை அபிவிருத்திச் சங்க கட்டணமும் தவிர்ந்த வேறு கட்டணங்களோ உதவி நிதிகளோ அன்றேல் பொருட்களோ பெற்றுக் கொள்தலும் அறவிடுதலும் முற்றாக தடை செய்யப்படுகின்றது. இது முழுமையாக சட்டவிரோதச் செயல் ஆவதுடன் கடுமையான நடவடிக்கையும் எடுக்க நேரிடும் என்று தெளிவாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
திருந்தா ஜென்மங்கள்
 
ஆனால், இந்த ஜென்மங்கள் இன்னும் திருந்தியபாடில்லை. இவ்விவகாரத்தின் பாரதூரம் குறித்து செய்திகள் வெளியாகி, அது விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு, சுற்றறிக்கைகள் வெளியாகியுள்ள போதிலும் எல்லாம் வழமைபோலவே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. கல்வியமைச்சு இது பற்றி நடவடிக்கை எடுக்கவில்லையே என்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தால், இவ்வாறான அதிபர்கள், ஆசிரியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரமில்லை. பொதுச் சேவைகள் ஆணைக்குழுவே அப் பணியை நிறைவேற்ற வேண்டும் என்று ஒரு நொண்டிச் சாட்டு சொல்லப்படுகின்றது. இதற்கு ஒன்றும் குறைச்சலில்லை.
 
பாடசாலையில் கற்கும் மாணவர்களிடம் கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. மாணவர்களை பாராட்டும் நிகழ்வுக்கு சில பாடசாலைகள் அவர்களிடமிருந்தே கட்டணங்களை கோருகின்றன. இது ஒருபுறமிருக்க, பாடசாலைக்கு மாணவரை அனுமதிக்கும் போது அன்பளிப்பு என்ற பெயரில் நிதி, பொருள் அறவிடும் நடைமுறை மிகவும் தீவிரமாகப் போய்க் கொண்டிருக்கின்றது. இது எந்தளவுக்கு என்றால் - ஒருவர் தன் பிள்ளையை பாடசாலையில் சேர்த்ததாக யாரிடமாவது சொன்னால் … அவர் கேட்கின்ற முதலாவது கேள்வி எவ்வளவு கொடுத்தீர்கள் என்பதாகத்தான் இருக்கும்.
 
இவற்றுள் அதிகமான பாடசாலைகளில் நிதியே கோரப்படுகின்றது. பெற்றோரின் சமூக அந்தஸ்து, பொருளாதார நிலைமையை முன்கூட்டியே உய்த்தறிந்து கொள்ளும் பாடசாலை நிர்வாகம் பிள்ளையைச் சேர்ப்பதற்காக வரும் பெற்றோரிடம் நீங்கள் எவ்வளவு அன்பளிப்பு அல்லது நன்கொடையை தருவீர்கள் என்று கேட்கப்படுகின்றது.
அவர் கொடுக்க விரும்பும் தொகையை வாங்கிக் கொள்ளும் பாடசாலைகள் மிகக் குறைவு என்றே கூற வேண்டும். அநேக பாடசாலைகள் தாம் விரும்பும் தொகையை பெற்றோர் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றன. என்ன செய்வது? தமது பிள்ளைகள் நன்றாக கற்க வேண்டும் என்பதற்காகவும் சில வேளைகளில் தமது அந்தஸ்து பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும் பெற்றோர்கள் தமது தலையை அடமானம் வைத்தாவது இப்பணத்தை கொடுத்துவிடும் வழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.
 
பொதுவாக நாடெங்கிலும் உள்ள இவ்வாறான பாடசாலைகளில் 1000 ரூபா முதல் 50 ஆயிரம் ரூபா வரையான தொகை நன்கொடையாக வழங்கப்படுகின்றது. அல்லது கோரப்படுகின்றது. இம்முறைகேட்டுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்ற சி.ஏ.சி. அமைப்பின் கருத்தின் பிரகாரம், சில பாடசாலைகளில் 1 இலட்சம் ரூபா கோரப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. கொழும்புப் பாடசாலைகளில் இத்தொகை இதைவிட அதிகமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது என்றாலும், இந்த கலாசாரம் கிராமப் புறங்களையும் நோக்கி பரவ இடமளிக்க முடியாது.
 
அவர்களது நியாயம்
 
உண்மையில் இவ்வாறு பணமும் பொருளும் நன்கொடையாக வாங்கப்படுவதற்கு பாடசாலை சமூகங்களும் தம்பக்கம் நிறைய காரணங்களை தயாராகவே வைத்திருக்கின்றன. பாடசாலைகளிற்கான பிரதான நிதி அரசாங்கத்திடமிருந்து கிடைக்கின்ற போதிலும் பராமரிப்பு போன்ற அன்றாடம் ஏற்படுகின்ற செலவுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிதியே கிடைக்கின்றது. எனவே நல்லதொரு சூழலில் மாணவர்களை கற்பிப்பதற்காகவே இப்பணம் அவர்களது விருப்பத்துடன் பெற்றுக் கொள்ளப்படுகின்றது என்று பாடசாலை நிர்வாகங்கள் கூறுகின்றன.
 
இதில் உண்மையில்லாமலும் இல்லை. அது தவிர கிடைக்கின்ற பணத்தை எல்லாம் நிர்வாகத்தினர் தமது சட்டைப்பைக்குள் போட்டுக் கொள்வதும் கிடையாது. குறிப்பாக, வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் சில பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் மனித மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறை இருப்பதாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெசனல் அமைப்பு அழுத்தமாக குறிப்பிட்டுள்ளதை நினைவுபடுத்த விரும்புகின்றேன். இவ்வாறான நிலைமைகள் காணப்படும் சில பாடசாலைகளில் ஒரு பிள்ளையை சேர்க்கும் போது நிதி அறவிடுவதும் கதிரை மேசைகளை அன்பளிப்பாக தரக் கோருவதும் தவிர்க்கவியலாதது ஆகுன்றது. இவ்வாறான துரதிர்ஷ்ட நிகழ்வுகள் பல கல்வியமைச்சில் ஒரு முறைப்பாடாக பதிவு செய்யப்படவில்லையாயினும் இவ்வாறு காசு கொடுத்து கல்வியை ஆரம்பித்த மாணவர்கள் தங்கள் பாடக் கொப்பிகளில் எழுதி வைத்திருக்கின்றார்கள்.
 
இந்த நாட்டின் கல்வியை மேம்படுத்துதவற்காக பல முன்மாதிரி செயற்றிட்டங்களை முன்னெடுத்திருக்கின்ற அரசாங்கமானது, இது விடயத்தில் அவசர கவனம் செலுத்த வேண்டும். கல்விக்காக வருடந்தோறும் பெருந்தொகை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்ற போதும், பாடசாலைகளில் ஏற்படுகின்ற ஒட்டுமொத்த செலவுகளுக்கும் போதாது என்றே அதிபர், ஆசிரியர்கள் கூறிவருகின்றனர். அதனாலேயே பெற்றோரிடம் பணத்தை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக விளக்கமளிக்கின்றனர். இந்த பொறிமுறையில் எங்கு தவறு நடக்கின்றது என்பதை கண்டறிதல் அவசியமானது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மேலதிக நிதியை வழங்க நடவடிக்கை எடுப்பதைப் போலவே, அது ஒரு போலியான காரணம் என்று தெரியவந்தால் நேரடியாகவோ அன்றேல் பொதுச் சேவை ஆணைக்குழு ஊடாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பின்னிற்கக் கூடாது.
பாடசாலை நிர்வாகிகளும் கல்வி அதிகாரிகளும் நிதிப் பற்றாக்குறை தொடர்பில் கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்து உத்தியோகபூர்வமான முறையில் நிதி ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்ள முனைய வேண்டும். இந்தச் சுமையை பெற்றோரின் தலையில் சுமத்துவதன் மூலம் காசு இருப்பவனின் பிள்ளைக்கு மட்டுமே கல்வி என்ற நிலையை உருவாக்கிவிடக் கூடாது. ஆக மொத்தத்தில் அமைச்சும் - பாடசாலைகளும் இப்பிரச்சினையை தமக்குள் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். பெற்றோரின் தலை வரைக்கும் செல்வது அநாவசியமானது.
 
ஒருவேளை தப்பித்தவறி, அரசாங்கத்தினால் அந்தச் செலவை ஈடுகட்ட முடியாத நிலைமைஒன்று ஏற்படுமாயின், நிர்ணயிக்கப்பட்ட ஒரு சூத்திரத்தின் அடிப்படையில் முறையானதொரு சட்டகத்தின் கீழ் பெற்றோரிடமிருந்து நன்கொடையாக, அன்பளிப்பாக சிறுதொகையை பண அறவீடு செய்வது தொடர்பில் யோசிக்கலாம். அதற்கு முன்னதாக, மேற்சொன்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது.
 
அதேவேளை, குட்டக் குட்ட குனிபவன் மடையன் என்று சொல்வார்கள். அப்படியென்றால் தாம் மடையர்கள் அல்ல என்பதை பெற்றோர் நிரூபிக்கவும் வேண்டும். எல்லாரும் எல்லா நேரங்களிலும் இழிச்சவாயர்களாக இருக்க இயலாது. கல்வியமைச்சின் சுற்றறிக்கையில் விதந்துரைக்கப்பட்டவாறு - தம்மை வற்புறுத்தியோ, ஆதாரம் எதுமின்றியோ தம்மிடம் இருந்து பாடசாலை நிர்வாகம் நிதி வசூலிக்கும் சட்டவிரோத செயலில் ஈடுபடுமாயின் அது குறித்து – கல்விப் புலனாய்வுப் பிரிவு, ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவு, லஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் இதர அதிகாரமிக்க தரப்பினர்களுக்கு அறிவிக்க வேண்டும்.
 
ஆடைக்குள் எறும்பு புகுந்துவிட்டால் - அதற்காக ஆடையைக் கழற்றிவிட்டு நிர்வாணமாக நிற்பதோ, குத்துகின்றது குடைகின்றது என்று கூறிக் கொண்டு ஓடித்திரிவதோ நல்லதற்கல்ல. அதை வெளியில் எடுத்து நசுக்கி விட வேண்டும்….
 
அதுவொன்றும் பாவமாகாது.
 

Post a Comment

0 Comments