ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய கொழும்பு தொகுதிக்கு
இணைப்பாளராக ஹிருனிக்கா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து நான்
மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஐக்கிய தேசியக்கட்சியின்
கோட்டையாக விளங்கும் மத்திய கொழும்பை நாம் இணைந்து செயற்பட்டு
வெற்றியீட்டுவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய கொழும்பு
இணைப்பாளர்களில் ஒருவரும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி
அமைச்சருமான பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
கொழும்பு, கோட்டை உலக வர்த்தக மைய கட்டிடத்தில் நடைபெற்ற
ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேலும்
தெரிவித்ததாவது:
அமைச்சர் பெளஸி முன்பு கொழும்பு மத்திய தொகுதியின் அமைப்பாளராக
கடமையாற்றிவந்தார். மத்திய கொழும்புக்கு மேலும் ஒரு அமைப்பாளர் தேவை
என்பதை உணர்ந்த ஜனாதிபதி என்னை இணைப்பாளராக நியமித்தார். கொழும்பு
ஓர் பல்தொகுதி என்பதால் இணைப்பாளராக ஹிருனிக்காகவும் இப்போது
நியமிக்கப்பட்டுள்ளார்.
இளம் தலைமுறையினருக்கு வாய்ப்புகளை வழங்கி இளம் தலைமுறையினரின்
வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை ஜனாதிபதி நன்கு
உணர்ந்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாக விளங்கும் மத்திய கொழும்பிற்கு
அக்கட்சி தேவையான அபிவிருத்திகளைச் செய்யவில்லை. பாதுகாப்புச்
செயலாளர் சுமார் 80 ஆயிரம் மக்களுக்காக வீடமைப்புத் திட்டங்களை
ஆரம்பித்துள்ளார். கண்டியில் நான் காணாத வறுமைக்கோட்டினையும் மிகக்
கஷ்டமான மக்களின் வாழ்க்கையையும் கொழும்பில் காண்கிறேன். அரசு
கொழும்பில் மேற்கொண்டுள்ள அபிவிருத்திப் பணிகள் நிச்சயம்
வெற்றிகளைப் பெற்றுத்தரும்.
நான் பிரதேச அரசியலுடன் எனது அரசியலை முன்னெடுக்கிறேன். மத்திய
கொழும்பில் என்னுடன் முன்னாள் உறுப்பினர்கள் 11 பேர் இணைந்து
செயற்படுகிறார்கள். முதலில் கட்சி, அடுத்தாக விருப்பு வாக்குகள்
என்பதே எனது அரசியல். ஆனால், கட்சியிலுள்ள சிலர் வெற்றிலையை
வெல்லுவதைவிட உறவினர்களுக்கு விருப்பு வாக்குகளைப்
பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சி மேல் மாகாண சபைத் தேர்தலில் எவரை நிறுத்தினாலும்
எமக்குப் பிரச்சினையே இல்லை. கொழும்பை வெற்றி கொள்ள முடியும் என்ற
உறுதியிலேயே ஜனாதிபதி இருக்கிறார். எதிர்க்கட்சிகள் எவரை
நிறுத்தினாலும் போட்டியை எதிர்கொண்டு வெற்றியீட்ட நாம் தயாராகவே
இருக்கிறோம்.
இன்று இனவாதிகள் அரசியலில் இலாபம் தேட முயற்சிக்கிறார்கள். தமிழீழ
விடுதலைப் புலிகளின் யுத்தகாலத்தில் அமைதியாக இருந்தவர்கள் இன்று
இனவாதம் பேசுகிறார்கள். இரத்தம் சிந்திபெற்ற வெற்றியை நாம்
பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இனவாதம் பேசுபவர்களை தேர்தலில் மக்கள்
நிச்சயம் நிராகரிப்பார்கள். இன்று முஸ்லிம்களுக்கு எதிரான
பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் ஜனாதிபதி முனைப்புடன்
இருக்கிறார்.
பௌத்தர்களில் பெரும்பான்மையானோர் கருணையுள்ளவர்கள் இனவாதம் பேசி
ஒரு போதும் வெற்றி கொள்ள முடியாது. எல்லா சமயத்திலும், அடிப்படை
வாதிகள் இருக்கிறார்கள். நாட்டில் நாமனைவரும் சகோதர பாசத்துடன்
வாழவேண்டும். இன ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்துக்கும் ஊட
கவியலாளர்கள் தமது பங்களிப்பினை நல்க வேண்டும். தேர்தலில் இனவாத
பிரசாரங்களை ஊடகங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இணையமைப்பாளர் பௌஸி பலவீனமானவர் என்று நான் ஒருபோதும்
சொல்லவில்லை. ஒருவரைத் தூசித்து அரசியல் செய்பவனல்ல நான். மத்திய
கொழும்பில் அரசியல் வெற்றிடம் ஒன்றுக்கான தேவையுள்ளது என்று நினைத்து
ஜனாதிபதி என்னை இணையமைப்பாளராக நியமித்திருக்கலாம்.
ஹிருனிக்காவையும் இணையமைப்பாளராக நியமித்தமைக்கு நான்
ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேல் மாகாண சபை உறுப்பினர்கள்,
மாநகர சபை உறுப்பினர்கள் என்று எமது கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவரும்
ஹிருனிக்காவுக்கு ஆதரவினை வழங்குவோம்.
மேல் மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனியாக போட்டியிடுகின்றமை
எமக்கு சவாலே இல்லை. எமக்கென்று ஓர் வாக்குவங்கியுள்ளது. அவர்கள் எமக்கே
வாக்களிப்பார்கள். பல அபிவிருத்திகளை இந்த அரசின் மூலம் பெற்றுக்கொண்ட
கொழும்பு மத்திய மக்கள் நிச்சயம் எம்மை வெற்றியடையச் செய்வார்கள் என்றார்.


0 Comments