Subscribe Us

கற்பிட்டி செம்மல் எம்.ஏ.எம். செல்ல மரைக்கார் - மண்ணின் மணம் மறவா கலையொளி

(M.Faizur Rahman)
1 “கற்பிட்டி நகர் தனிற்பூத்து
கவினார் குத்தளம் மணந்து
கற்பிக் கும்பணிக் காசானாய்
கனியும் இசையில் வல்லோனாய்ப்
பொற்பூ றும்நல் லோவியனாய்
பொலியும் தோழர் மரிக்கார் தான்
கற்பரசி யவர் கதைப் பாடிக்
கவிஞரு மானார் வாழ்த்துகிறேன்”

2. “முத்தாம் பாத்திமா அன்னை
முன்மா திரியாம் சரிதத்தை
சத்தாம் தமிழில் சுவைமல்கச்
சிறப்பாய்த் தந்தார் கவிதையிலே
நித்தம் தாய்க் குலம் கற்றதினை
நிறைவாழ் வுறுக நலம் பெறுக
வித்தகர் செல்ல மரைக்காரும்
விளங்குக! மேலும் இறையருள்க! “

(கவிமணி “நஜ்முஸ் சுஹ்ரா” எம்.சி.எம். சுபைர் – வாழ்த்து “சொர்க்கதுக்கரசி பத்திமா (ரலி) , 1995 ப . 1

அ.) அறிமுகம்

“ ... எம்.ஏ.எம். செல்ல மரைக்கார் அவர்களை மிக நீண்ட காலமாக அறிவேன். நான் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பட்டதாரி மாணாவனாகப் பயின்ற காலப் பிரிவில் ஆசிரியர்களுக்குப் பட்டப் படிப்பை பயில வழங்கப்படும் விடுமுறையில் பல்கலைக் கழக பட்டப் படிப்பை மேற்கொண்டார். இக் காலப் பிரிவில் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அப்போது அவரின் கலை ஆர்வமும் இலக்கியப் பற்றும் மிகச் சிறப்பாகக் காணப்பட்டன. ஆனால் அந்தக் கலை ஆர்வத்தில் ஒரு தெளிவும் பரிமாணமும் காணப்படவில்லை. பல்கலைக்கழக பட்டதாரி வாழ்வின் பின்னர் அவரை நான் சந்திக்கவில்லை. அவருடைய சந்திப்பு ஏறக்குறைய முப்பது ஆண்டுகளின் பின்னர் இந்த கவிதைத் தொகுதியின் மூலம் நிகழ்கிறது ... ”
(கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள், 1995 மே)

கற்பிட்டியை பிறப்பிடமாகவும் புத்தளத்தை வாழ்விடமாகவும் (‘ஆஷியானா’ 41, போல்ஸ் வீதி) கொண்ட ஆசான் செம்மல் எம்.ஏ.எம் செல்ல மரைக்கார் அவர்கள் 1931 ம் ஆண்டு பிறந்தார்கள். பெற்றோர் – அருமை tthaaaaதாயார் நெய்னா முஹம்மது நாச்சியா ; அன்புத் தந்தை முஹம்மது அலி மரைக்கார் மதார் சாஹிபு ஆவர்கள். 1954.08.29 ல் புத்தளத்தில் விவாகம். பிள்ளைகள் ஐவர் இரண்டு ஆண்கள் மூன்று பெண்கள்

ஆ) கல்வி

கல்பிட்டி அல் – அக்ஸாவில் தனது பாடசாலை கல்வியைப் பூர்த்தி செய்தார். அப்பாட சாலையில் முதன் முதலாக ஐவர் எஸ்.எஸ்.சி பரீட்சைக்கு தோற்றினர். இவர்களில் நால்வர் பூரண சித்திப் பெற்றனர். அதில் நம் செல்ல மரைக்கார் அவர்களும் இடம் பிடித்து தனது திறமையை நிரூபித்தார்கள்.

உதவி ஆசிரியராக நியமனம் பெற்று தொடர்ந்து அளுத்கம அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று தொழில் வாண்மையைப் பெற்றார். ஆசிரியர் சேவையின் போது கலைப் பட்டப் படிப்பினை பூர்த்தி செய்த அன்னார் ஹபுகஸ்தலாவ முஸ்லிம் மகா வித்தியாலயம், புத்தளம் சாஹிரா கல்லூரி, கொழும்பு ஹமீட் அல் – ஹுசைனியா, புத்தளம் அசன் குத்தூஸ் வித்தியாலயம் (வெட்டாளை) ஆகியவற்றில் சேவை புரிந்தார்கள். உதவி ஆசிரியராகத் தனது வாழ்தொழிலை ஆரம்பித்த செம்மல் செல்ல மரைக்கார் அவர்கள் அதிபராக சுமார் 15 வருடங்கள் நற்சேவை ஆற்றி ஓய்வு பெற்றார்கள். 08. 02. 2001 ம் ஆண்டு இவ்வுலகில் இருந்து விடைபெற்றார்கள்.

இ) இசைத் தென்றல்

கற்கும் பள்ளிப் பருவத்திலேயே தமது கலைத்திறனை வெளிப்படுத்தி பலரின் பாராட்டினைப் பெற்றார். கானம் பாடி தனது இனிய குரலினால் பார்வையாளர்களை மெய்மரக்கச் செய்தார் செல்ல மரைக்கார் அவர்கள். 1956 ம் ஆண்டில் கலை இலக்கியத் துறை பொது வாழ்வில் காலடி எடுத்துவைத்த அவர் அதன் பன்முகப் பரிமாணங்களைத் தரிசித்தார்.

முஸ்லிம் சேவைப் பிரிவில் தமது வானொலி பங்களிப்புகளினூடாக அக்காலப் பகுதியில் நன்கறியப்பட்ட ஆளுமைகளில் ஒருவராக மிளிர்ந்தார் என்பதை தேடல்களினூடாக அறிய முடியுமாயுள்ளது. இஸ்லாமிய கீதங்கள் இசைப்பதில் ‘ஏ” தரம் பெற்ற கலைஞராகத் தெரிவு செய்யப்பட்டு சுமார் 20 வருடங்கள் இஸ்லாமிய விழுமியங்களையும் நினைவின் தடங்களையும் இஸ்லாமிய பாடல்களினூடக \ இசைச் சித்திரங்களினூடாக வெளிப்படுத்தி மக்களைப் பரவசப்படுத்தி சிந்திக்கத் தூண்டியவர்களில் ஒருவரே “இசைத் தென்றல்” செல்ல மரைக்கார் ஆவார்.

ஈ) நினைவின் தடம்

ஆசான் செல்ல மரைக்கார் அவர்களுடனான தொடபாடல்கள் சலாம் மற்றும் எனது தந்தைப் பற்றிய நலம் விசாரித்தல் என்பதோடு மட்டு படுத்தப்பட்டிருந்தன. பல்கலைக் கழகத்திற்கு தெரிவானது பற்றி என்னிடம் விசாரித்து மகிழ்சியைப் பகிர்ந்து கொண்டமை நினைவிற்கு வருகிறது இக்காலப் பகுதியிலும் அவரின் திறமைகள் எனக்குத் தெரியாது. செல்ல மரைக்கார் அவர்களின் புதல்வரான இஹ்தியாஸ் அவர்களும் நானும் சம காலத்தவர்கள். சாஹிராவில் ஒரே வகுப்பு மாணவர்கள். அவரும் பாடசாலை மன்றங்களில் இனிமையாய் இசைத்துப் பாராட்டுகள் பெற்றமை ஞாபத்திற்கு வருகிறது. .

1) தமது வாழ்வின் தடமாக “சொர்க்கத்து நாயகி பாத்திமா” (மே , 1995) என்ற கவிதையை எழுதியதோடு மாத்திரமன்றி அதனை மக்கள் மருமக்கள் பங்களிப்போடு நூலாக வெளியீடு செய்து தனது அருமை பெற்றோருக்கே அதனை அர்ப்பணம் செய்திருப்பது போற்றத்தக்கதாகும். ஆசிரியர் “கற்பிட்டி எம்.ஏ.ஏம் செல்ல மரைக்கார்” என நூலில் குறித்திருப்பது அவரின் – “பிறந்த மண்ணின் மணம் மறவா தன்மை” யைப் பறைசாற்றுகிறது.

இக்கவிதை ஆக்கத்தை பற்றி அணிந்துரையில் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள் இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்கள்

“ ... நபி (ஸல்) அவர்களின் அருமைப் புதல்வி பாத்திமா (ரலி) அவர்களின் பெரு வாழ்வை உணர்வும் உயிரோட்டமும் உள்ள கவிதை வடிவில் அவர் படைத்துள்ளார். பாத்திமா (ரலி) அவர்களின் வாழ்வோடு தொடர்புடைய முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் இலக்கியச் சுவை மிக்க கவிதைகளாக வடிக்கப்பட்டுள்ளன ... ‘யாசின் முத்து’ என வர்ணிக்கப்படும் நபி (ஸல்) அவர்களின் அருமைப் புதல்வி மாதர் திலகம் பாத்திமா (ரலி) அவர்ளின் வாழ்வையும் ஆளுமைச் சிறப்பையும் ,குண நலன்கள் மிகச் சிறப்பாக இலக்கிய சுவைமிக்க நடையில் கவிதை உருவில் தந்துள்ள நண்பர் செல்ல மரைக்கார் அவர்களின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது ... “

2) ஆசான் செல்ல மரைக்கார் அவர்களின் பாடல் மற்றும் ஏனைய வானொலிப் பங்களிப்புகளை கருத்திற் கொண்டு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் 1993 ம் ஆண்டு ‘மூஷிக் நூரி’ (இசையொளி) பட்டமும் பொற்கிழியும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்

3) அவரின் பாடல் இயற்றும் திறனுக்கு செம்மல் செல்ல மரைக்கார் அவர்களினால் 1988 ல் இயற்றப்பட்டு 25 வருடங்களாக மாணவிகளினால் பாடப்பட்டு வரும் புத்தளம் பாத்திமா கல்லூரியின் தற்போதய பாடசாலை கீதமே இதற்கு வலுவான ஆதாரமாகும் (இக்கீதம் ‘இன்சாபுக மன்சில் என்ற ஹிந்திப் பாடல் இராகத்தைத் தழுவி எழுதப்பட்டதாகும்) அறிவாய் உணர்வாய் சிறிதாய் மிளிரும் அப்பாடலை நாமும் பாடுவோமே! (சொர்க்கத்து நாயகி பாத்திமா (ரலி) கவிதை புனைந்த செல்ல மரைக்கார் அவர்கள் ‘புத்தளம் பாத்திமா கல்லூரி’ க்கும் பாடல் எழுதியமை அல்லாஹ் அன்னாருக்கு அளித்த பாக்கியமே.)

“கலையோங்கி வளம் காண வழி அருள்வாய் இறைவா
நிலையாகி பாத்திமா வளர அருள்வாய் இறைவா
பார் புகழும் புத்தளத்தின் உயர்ந்த பீடமாய்
சோர்வறியா புகழ் நிலைக்கும் கல்விக் கூடமாய்
நாம் உயர்ந்திடவே
நீ அருள் புரிவாய்
ஏக நாயனே (கலையோங்கி)

அன்னை தந்தை ஆசான் புகழ் ஓங்கி வாழவே
அருங்கலையும் , இறை நெறியும் சேர்ந்து சிறக்கவே
நாம் உழைத்திடவே
நீ துணையருள்வாய்
ஏக நாயனே (கலையோங்கி)

வளம் நிலவும் எழில் விளங்கும் எங்கள் நாட்டிலே
வளர் பிறைபோல் கலை பலவும் சேர்ந்து சிறக்கவே
நாம் உழைத்திடவே
நீ துணையருள்வாய்
ஏக நாயனே”

யா அல்லாஹ் செல்ல மரைக்கார் அவர்களின் சமூக மற்றும் அறிவுப் பங்களிப்புகளை ஏற்று நல்லடியார்களில் ஒருவராக அங்கீகரித்துக் கொள்வாயாக!

Post a Comment

0 Comments