Subscribe Us

header ads

நன்றியுள்ளவர்கள் யாரென்றால் அது நாம் தான் – நல்லத்தம்பி

[எம்.ஏ.பீ. வசீம் அக்ரம் - புத்தளம்]


தெருவோரங்களின் செல்வாக்கில் இவருக்குத்தான் முதலிடம். கொஞ்சம் ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட இவரைப்பார்த்தால் எல்லோருக்கும் கொஞ்சம் பயம்தான்.நல்லத்தம்பி எனும் நாயிடம் ஒரு நேர்க்காணல்.

நல்லத்தம்பி என்ற பெயர் எப்படி உங்களுக்கு..

ஓ, அதுவா நான் ஒருவீட்டில் வளர்க்கப்பட்டேன். அவருக்கு ஒருமகன். அவனுடைய பெயர் செல்லத்தம்பி. நானும் அவர்களில் ஒருவனாக இருந்ததால் எனக்கு நல்லத்தம்பி.

அப்படியென்றால் வீதியில் என்ன பண்ணுகிறீர்.

வீடு இல்லாதவர்களுக்கு வீதியில் தான் தஞ்சம். மரத்தின் கீழ், கடைவாசல்கள் என்று போகுது வாழ்க்கை. தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு என்று பாடிட்டு போகவேண்டியதுதான்.

வீட்டில் வளர்ந்தேன் என்றீர்களே..!

மனிதர்களின் குணங்கள் தான் தெரியும் தானே..புதிதாக ஒன்று வந்தால் பழசை மறந்து விடுவார்கள். அப்படிதான் நானும், புதிதாக அல்சேசன் ஒன்று உள்ளே வர நான் வெளியே வர வேண்டியதாயிற்று.

அல்சேசன் என்று சொல்லும்போதுதான் ஞாபகம் வருகிறது. அதென்ன உங்கள் இனத்தில் ஒவ்வொரு விதமாக தரம் பிரிக்கப்பட்டுள்ளது.

என்ன சின்ன பிள்ளைத்தனமாக இருக்கிறது. உங்களுடைய இனத்தில் தரம் இல்லாமலா இருக்கிறது. ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு எல்லா இடத்திலும் இருக்கத்தான் செய்கிறது. நான் செல்வந்த வீட்டில் வளர்ந்தால் நானும் உயர்ந்தவன்தான்.

நீங்கள் இப்போது என்ன செய்துக் கொண்டிரிக்கின்ரீர்.

இதோ..இதுதான் நான் வளர்ந்த வீடு. இன்றும் இந்த வீட்டின் காவலாளியாக நான்தான் இருக்கிறேன். நன்றியுள்ளவர்கள் யாரென்றால் அது நாம் தான்.

நன்றிக்கு மட்டுமில்லையே உங்களை உதாரணமாகக் கூறுகின்றனர்.

நீங்கள் சொல்வது சரிதான். கோபம் வந்தாலும், உதவி செய்யாவிட்டாலும் எங்களை தான் உதாரணமாக சொல்லி திட்டுறாங்க. சொறிநாயே, நாய்ப்பழக்கம் அப்படி இப்படின்னு. தேவைக்கு தேடுகிறார்கள். தேவை முடிந்தவுடன் துரத்துகிறார்கள். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
ரொம்ப கோபமோ..

பின்ன என்ன. அவர்கள் செய்வதை எல்லாம் செய்வார்கள். செய்து விட்டு 

எமது பெயரை நாசூக்காக சொல்லிவிடுவார்கள். ஒன்னு தெரிஞ்சிக்கோங்க நன்றியை எங்களிடமிருந்து நீங்கள் படிக்க வேண்டும்.

ஆமாம், சொறிநாய் பற்றி..

எல்லோரும் இப்படி இருக்க மாட்டோமே. நோய் வரும். சாவும் வரத்தான் செய்யும். சொறி வந்தால் சொறிநாயாக கூப்பிடுகிறார்கள். நோய் முத்திபோனால் விசர் நாய் என்கிறார்கள். நோய்க்கு அரசு தகுந்த வைத்தியங்கள் செய்து தருகிறார்கள். ஆனால் உங்களில் சிலர் வீணாக எங்கள் கோபத்தை சீண்டுவர்களும் உண்டு. இப்போது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறோம்.

வீணாக என்றால்..

நோன்பு காலங்களில் நீங்கள் பார்க்கலாம். எமக்கு நிம்மதியே இருக்காது. சின்ன சின்ன பொல்லுகளும் கல்லுகளும் கொண்டு வந்து நாய் வேட்டை என்று எமக்கு துன்பம் கொடுக்க சில கூட்டம் புறப்பட்டு வந்துவிடும். இரவும் நிம்மதியில்லை, பகலும் நிம்மதில்லை.

அப்படியென்றால் நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியதுதானே.

சத்தம் கேட்டாலே எச்சரிக்கையாக தான் இருப்போம். இருந்தாலும் பொறுமைக்கும் எல்லை உண்டு அல்லவா. கொஞ்சமாக கோபத்தை காட்டினால் போதும். வைத்தியசாலையில் வரிசையாக படுத்து கிடப்பார்கள். ஊசி, மருந்து என்று செலவு வைக்கப்படும்.

வைத்தியசாலை என்று சொல்லும்போது ஒன்று கேட்கதோனுகிறது. உங்களுக்கும் மோட்டார் வண்டி விபத்துக்கும் நிறைய தொடர்பு இருக்கிறதே.

என் மீது குற்றம் சொல்லாதீங்க. இது இறைவனின் படைப்பு. இன்னுமொன்றையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது அநேகமானோர் என்னை கண்டதும் மோட்டார் வண்டியை மெதுவாக ஓட்டிசெல்கின்றனர்.

எப்போதும் கேட்கின்ற கேள்விதான். சரி கடைசியாக என்ன கூற விரும்புகின்றீர்கள்.

அனாவசியமாக விலங்குளை துன்புறுத்தாதீர்கள். உப்பிட்டவரை உள்ளளவும் நினையுங்கள். நன்றி மறவாதீர்கள். ஏழை எளியவர் என்றில்லாமல் எல்லோரையும் ஒன்றாக பாருங்கள். இக்கருத்தை நாய் என்றில்லாமல் நல்லதம்பியின் நல்ல கருத்தாக எடுங்கள்.




Post a Comment

0 Comments