Subscribe Us

header ads

2ஆவது இருபது20 போட்டியில் இலங்கை அணி வெற்றி

பாகிஸ்தானுடனான இரண்டாவது இருபது20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 24 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

டுபாயில் வெள்ளியிரவு நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களைக் குவித்தது.

குஷல் பெரேரா 59 பந்துகளில் 84 ஓட்டங்களையும் திலகரட்ன தில்ஷான் 33 பந்துகளில் 48 ஓட்டங்களையும் ஓட்டங்களையும் குமார் சங்கக்கார 21 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் சயீட் அஜ்மல் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

212 ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான்அணி ஆரம்பம் முதல் தடுமாறியது. 11 ஓவர்களில் 91 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்த அவ்வணி19.2 ஓவர்களில் 187 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சர்ஜீல் கான் 25 பந்துகளில் 50 ஓட்டங்களைப்பெற்றார். 13 பந்துகளில் 28 ஓட்டங்களைப் பெற்றிருந்த சஹீட் அவ்ரிடி, திசேர பெரேராவின் பந்துவீச்சில் குமார் சங்கக்காரவின் அபார பிடியொன்றினால் ஆட்டமிழந்தார்.

9 ஆவது வரிசை வீரர் சொஹைல் தன்வீர் 25 பந்துகளில் 41 ஓட்டங்களைப் பெற்று அணியை பலப்படுத்த முயன்றார். எனினும் 19 ஆவது ஓவரில் லஷித்மாலிங்கவின் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்ததையடுத்து பாகிஸ்தான் அணி மீண்டும் ஆட்டம் கண்டது.

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் சச்சித்ர சேனநாயக்க 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் நுவன் குலசேகர 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும்  வீழ்த்தினர்.

திசேர பெரேரா 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் தனது முதலாவது இருபது20 சர்வதேச போட்டியில் விளையாடிய சீக்குகே பிரசன்ன 45 ஓட்டங்களுக்கு  2 விக்கெட்டுகளையும்  லஷித் மாலிங்க 30 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான்அணி 3 விக்கெட்டுகளால் வென்றது. இதனால் 2 போட்டிகள் கொண்ட இத்தொடர் 1:1 விகிதத்தில் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இரண்டாவது போட்டியின் ஆட்ட நாயகனாக குஷல் பெரேராவும் சுற்றுப்போட்டியின் ஆட்ட நாயகனாக   சஹீட் அவ்ரிடியும் தெரிவாகினர்.

Post a Comment

0 Comments