(KV நிருபர் )
ஸ்மார்ட் போன்கள் மூலம் தன்னைத்தானே எடுத்துக்கொண்டு
பேஸ்புக் போன்ற சமூக இணைய தளங்களில் தரவேற்றம் செய்யும் புகைப்படத்தைக்
குறிக்கும் புதிய ஆங்கிலச் சொல்லான " செல்பி" (selfie) என்ற வார்த்தையை,
ஆக்ஸ்போர்ட் அகராதிகள் இந்த ஆண்டுக்கான (2013) சொல்லாகத்
தேர்ந்தெடுத்துள்ளன.
அமெரிக்க நடிகையான மைலி சைரஸ் ஆடும் சற்று பாலியல்
கிளர்ச்சியைத் தூண்டும் நடன அசைவைக் குறிக்கும் "ட்வெர்க்" (twerk) ,
மற்றும் உயிரியல் திசுவிலிருந்து செயற்கையாகத் தயாரிக்கப்படும் ஒருவகை
இறைச்சியைக் குறிக்கும் " ஷ்மீட்" (schmeat) போன்ற பதங்களும், ஆக்ஸ்போர்ட்
அகராதிகளின் "இந்த ஆண்டுச் சொல்"லாகத் தேர்ந்தெடுக்கப்பட நெருங்கி வந்தன.
" இந்த ஆண்டுச் சொல்" விருது, உலகில் ஆங்கில
மொழியைப் பேசுவோர், சமூக, அரசியல் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை
வர்ணிக்கவும், விவரிக்கவும் எந்த அளவுக்கு கற்பனா சக்தியுடன்
இருக்கிறார்கள் என்பதை அங்கீகரிக்கும் ஒரு விருதாகும்.
இந்தப் போட்டியில் வெல்ல வேண்டுமானால், புதிய
வார்த்தை, மாதந்தோறும் இணையத்தில் பயன்படுத்தப்படும் பல லட்சக்கணக்கான
சொற்களைத் துழாவி சேகரிக்கும் ஆராய்ச்சிப் பொறி முறையால்
கணக்கெடுக்கப்படும் முயற்சியில் ஒரு ஆண்டில் அதிகம் புழங்கப்பட்ட சொல்லாக
இருக்க வேண்டும்.
0 Comments