Subscribe Us

வியாபாரத்தைப் படிக்காதவர் வர்த்தகம் செய்யலாமா!

(ஹிஷாம் ஹுஸைன்)

மருத்துவம் படிக்காதவரை வைத்தியர் எனக் கூற மாட்டோம். சட்டம் படிக்காதவரை வக்கீல் என்று அழைக்க மாட்டோம். ஆனால். வியாபாரம் படிக்காதவரை வர்த்தகர் எனக் கூறுவோம். இந்த நிலை மாற வேண்டும். ஒரு நோயாளி ‘நல்ல வைத்தியரை’ நாடுவதைப் போல், ‘உருப்படியான சட்டத்தரணி’யைத் தேடுவது போல், நுகர்வுப் பொருட்களை வாங்குவதற்கும் ‘உருப்படியான நல்ல வியாபாரியிடம்’ செல்லும் கலாசாரம் நுகர்வோர் மத்தியில் உருவாக வேண்டும். அவ்வாறானதொரு நுகர்வுக் கலாசாரம் உருவாகுவதற்கு, நல்ல வர்த்தகர்கள் உருவாக வேண்டும். தவழும் வேகத்தில் நகர்ந்த இந்த ‘நுகர்வுக் கலாசார மாற்றம்’ தற்போது நடைபயில ஆரம்பித்திருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது.

Insight Business School இந்த கலாசார மாற்றத்தின் ஒரு முன்னோடியாக விளங்குகின்றது. Insight Business School நடத்தும் 3 நாள் வதிவிட Business and Marketing Workshop பயில்நெறி, இம் முன்னோடி நடவடிக்கையின் முதல் படி எனலாம். மேற்படி 3 நாள் வதிவிட பயில்நெறியை நிறைவுசெய்தவர்கள், இந்த கலாசார மாற்றத்தின் பிரதிநிதிகளாக, இலங்கை முழுவதும் விரவி இருக்கின்றார்கள். அவர்கள் தாம் வாழும் பிரதேசங்களில் Friends of insight (FOF) எனும் நண்பர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்கள். FOF – Puttalam Circle புத்தளம் வட்டம் அவ்வாறானதொரு வர்த்தக நண்பர்களின் கூட்டமைப்பு ஆகும்.

புத்தளம் FOF இன் மாதாந்த கலந்துரையாடல் 2013.10.27 ஆம் திகதி மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை DC pool இல் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக ஹில்மி சுலைமான் – insight சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி (CEO), ஹாஷிம் – செயலாளர் FOF ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வின் வளவாளர்களாக திருமதி எஸ்.எச். நஸ்லியா, சட்டத்தரணி தாவுதீன் – Change Humanitarian Organization இருவரும் வர்த்தகத்தின் சட்ட ரீதியான பண்புகளை விவரித்தார்கள்.

ஒவ்வொரு வர்த்தகத்திற்கும் அகச் சூழல் – புறச் சூழல் என இரு வகை சூழல்கள் உள்ளன. நடப்பு அரசாங்கத்தின் வர்த்தகக் கொள்கை, வர்த்தகம் தொடர்பான சட்டங்கள், வரி முறைகள், வங்கி நடவடிக்கைள் என வர்த்தகத்தின் புறச் சூழல் விரிந்து செல்கின்றது. இப் புறச் சூழல் ஏற்படுத்தும் தாக்கம் வலிமையானது. இதன் தாக்கங்களுக்கு முகம்கொடுப்பதற்கு புறச் சூழல் தொடர்பான அறிவு இன்றியமையாத தேவையாகும்’, என திருமதி நஸ்லியா குறிப்பட்டார். வர்த்தகர்களுக்குத் தேவையான சட்ட ஆலோசனைகளும் உதவிகளும் இலவசமாக வழங்கப்படும் எனக் குறிப்பிட்ட சட்டத்தரணி தாவுதீன், குறித்த சட்ட பிரச்சினையின் தன்மைக்கு ஏற்ப கிரயம் அறவிடப்படலாம் என்றும் கூறினார்.

பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஹில்மி சுலைமான் புத்தளம் FOF வர்த்தகர்களுடன் கலந்துரையாடும் போது, ‘வர்த்தக வர்த்தக உறவு’ எனும் சிந்தனையை மையப்படுத்திய ‘வியாபார வழிகாட்டி’ (Business Directory) ஒன்றைத் தயாரிக்கும் திட்டம் உள்ளதாகக் கூறினார். நாடளாவிய வர்த்தகர் வலையமைப்பொன்றை உருவாக்குவதுடன் நுகர்வோருக்கு ‘நல்ல வியாபாரி’களை அறிமுகப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்’ எனவும் அவர் குறிப்பிட்டார். இவ் வியாபார வழிகாட்டியில், மேற்படி 3 நாள் வதிவிட பயில்நெறியை நிறைவுசெய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான முன்னெடுப்புக்களினால் ‘வர்த்தகர் மைய வியாபாரம்’ என்ற ஏகாதிபத்திய மனநிலை மாறி, ‘நுகர்வோர் மைய வியாபாரம்’ என்ற கொள்கைசார் நிலைக்கு வர்த்தகக் கலாசாரம் மாற்றம் பெறும். அப்போது – இக் கலாசார மாற்றத்தின் விளைவாக – வர்த்தகருக்கும் நுகர்வோருக்கும் இடையிலான உரையாடல், ‘நம்பி வாங்க – நம்பி வந்தோம்’ என்பதாக இருக்கும்.
  



Post a Comment

1 Comments

  1. கல்பிட்டி பிரதேசத்தின் வர்த்தக வியாபாரிகளும் insight Business School இன் business and marketing workshop வியாபார பயில்நெறியை பயின்று, நுகர்வோருக்கு சிறந்த சேவையை வழங்கும் 'நல்ல வியாபாரிகளாக' மாறுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

    கட்டுரையை பிரசுரித்த Kalpitiya Voiceக்கு நன்றிகள்.

    ReplyDelete