இரண்டிலும் தலைவர்கள் தப்பியோடினார்கள்.
மற்றது இலங்கையில் ஆளும் அரசியல்வாதிகள் வீடுகள் மே 9 இல் எரிக்கப்பட்டன. ஜுலை 9ல் கோட்டாபய துரத்தப்பட்டார். பங்காளிகள் எதற்கு இரண்டு செலவு என்று இரண்டையும் ஒரே சமயத்தில் செய்தார்கள்.
பங்காளிகள் முந்நூறு பேரைப் பலிகொண்டு பெற்ற வெற்றி இது. இதனால் தான் ஹசீனா போன பின்னர் பொலிஸ்காரர்களே ஸ்ட்ரைக் போடுமளவுக்கு வன்முறை கட்டுக்கடங்காமல் போனது. நான்கில் மூன்று பெரும்பான்மையோடு பொஹட்டு கட்சியை விடப் பிரம்மாண்ட பலத்துடன் இருந்த ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் உறுப்பினர்கள் ஓரிரவில் தலைமறைவானார்கள். அவர்களின் உடமைகளும் வீடுகளும் கடைசியில் கட்சித் தலைமையகமும் தீக்கிரையானது.
மற்றப்படி இருநாடுகளினதும் மக்கள் எழுச்சி ஆரம்பமான விதத்திலும் சரி, தலைவர்கள் ஓடிப் போனதன் பின்னர் நடந்த நிகழ்வுகளும் சரி ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவை.
பங்களாதேஷிற்கும் ரணில் விக்ரமசிங்க தேவை என்று மனுஷ நாணயக்கார என்ற குரங்கு வித்தை அதிபதி கருத்துத் தெரிவித்து இருந்தார்.
ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக் கும்பலுடன் டீல் அரசியல் செய்வதற்கா அல்லது மிச்சமிருக்கும் அரச சொத்துக்களை எல்லாம் எதாவது வெளிநாட்டுப் பினாமிகளுக்கு விற்றுத் தீர்க்கவா என்று தெரியவில்லை.
பங்களாதேஷில் மக்கள் மண்ணென்ணெய்க்கும் பெட்ரோலுக்கும், வக்கற்ற நிலையில் வீதிக்கு வரவில்லை.அவர்களுக்கு சுதந்திரத்தைத் தவிர அங்கே எல்லாம் தாராளமாய்க் கிடைத்ததன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
ஐந்தாம் திகதி ஹசீனா இந்தியாவுக்குத் தப்பியோடிய பின்னர் ராணுவம் இடைக்கால நிர்வாகத்தைக் கையில் எடுத்தது. ஆனால் இப்புரட்சியின் காரணகர்த்தாக்களான மாணவர்களோ ராணுவ ஆட்சிக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து மறுநாள் மூன்று மணிக்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாய் அறிக்கைவிட்டார்கள்.
வேறு வழியின்றி ராணுவமும், சிவில் அமைப்புக்களும், மாணவ தலைவர்களும் மணிக்கணக்கில் உட்கார்ந்து பேச வேண்டிய நிலமை ஏற்பட்டது.
முடிவில் மாணவர்களின் வேண்டுகோளின் படி ஹசீனாவின் அவாமி லீக்கைத் தவிர மற்றக் கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு ஒரு இடைக்கால நிர்வாகத்தைத் தொடரவும், அதன் தலைவராக 2006ம் ஆண்டு அமைதிக்காக நோபல் பரிசு பெற்றவரும் ஹசீனாவின் பரம வைரிகளில் ஒருவருமான முஹம்மத் யூனிஸ் தலைமையிலான அரசை ஏற்படுத்தவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
பிரான்ஸில் இருந்து யூனுஸ் அழைத்து வரப்பட்டார். பாராளுமன்றமும் கலைக்கப்பட்டு இருக்கிறது.தேர்தல் நடந்து புதிய கட்சி ஒன்று ஆட்சிக்கு வரும் வரை யூனிஸ் தலைமையில் நாடு இயங்கும்.
சரியோ, தவறோ, சாத்தியமாகுமோ இல்லையோ பங்களாதேஷ் மாணவர்கள் தம் சக்திக்குட்பட்டவகையில் செய்திருக்கும் சிஸ்டம் சேஞ் இது.
இலங்கையில் என்ன நடந்தது என்று சொல்லத் தேவை இல்லை. போராட்டத்தில் இருந்த புல்லுருவிகள் எல்லாம் கோட்டாபய பதவி விலகி ஓடியதும் மொத்தமாய்க் குழப்பியடித்தார்கள். சபாநாயகர் தலைமையில் அனைத்துக் கட்சிகளையும் கொண்ட ஒரு நிர்வாகத்தை ஏற்படுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தூக்கி எறியப்பட்டது.சதி வென்றது. கடைசியில் போராட்டக்காரர்கள் அடித்துத் துரத்தப்பட்டார்கள்.
ஒரு சாதாரண அரச சொத்துக்குச் சேதம் விளைவித்தால் ஐந்தாறு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படும் நாட்டில் பல பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தி மொத்தமாய் நாட்டை திவாலாக்கிய கோஷ்டியுடன் அமோகமாய் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நாடு பயணித்தது
ஹசீனாவை பங்களாதேஷுக்கு அனுப்பிவைக்குமாறு பங்களாதேஷ் சட்டத்தரணிகள் சங்கம் இந்திய அரசைக் கேட்டு இருக்கிறது.இதுவே புதிய அரசு வேண்டுகோள்விடுத்தால் இந்தியாவால் தட்ட முடியாது போகும்.
இந்நிலையில் பதறியடித்துக் கொண்டு 'நமது அரசியல் வகிபாகம் முடிந்தது' என்று அமெரிக்காவில் இருந்து அறிக்கைவிட்டு இருக்கிறார் ஹசீனாவின் மகன்.
பங்களாதேஷில் ஹசீனாவுக்கோ, அவர்களின் பிள்ளைகளுக்கோ இனி எந்தவித அரசியல் எதிர்காலமும் இருக்காது. கோட்டாபய போல மாலைதீவு, சிங்கப்பூர் என்று சுற்றிவிட்டு கொல்லைப்புறத்தால் நாட்டுக்குள்ளே புகுந்து கொள்ள அங்கே இப்போதைக்கு டீலர்கள் யாருமில்லை.
இன்று இலங்கை உச்ச நீதிமன்றம் பொருளாதாரக் குற்றவாளிகள் என்று அறிவித்த ராஜபக்சே குடும்பத்தின் குத்துவிளக்கு நாமல் ராஜபக்சே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார். கோல் ஃபேஸ் புரட்சியாளர்களின் அபிலாஷைப்படி 'இதோ இளம் தலைவர் ' என்கிறார் மகிந்த. இதற்கு மேல் பங்களாதேஷையும் எம்மையும் ஒப்பிடத்தான் வேண்டுமா...
-zafar ahmed-
0 Comments