சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு இறையச்சம், இம்மை மறுமை, உண்மை, நேர்மை, பொறுமை, தாய் தந்தையரை ஆசிரியர்களை பெரியவர்களை மதித்தல், உறவுகளை சேர்ந்து நடத்தல் போன்ற பண்புகளை கற்றுக் கொடுத்தல்..
பிறருக்கு உதவ கைகொடுக்க கற்றுக் கொடுத்தல், அழகாக அளவாக தெளிவாக பேசக் கற்றுக் கொடுத்தல், அவர்களது வளர்ச்சியிற்கு ஏற்ப சிறு சிறு வேலைகளை பொறுப்புக்களை கற்பித்தல், சுயமாக கர்மமாற்ற பழக்குதல், நேர முகாமை செய்தல் என்பவற்றை எல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
குறிப்பாக பிஞ்சு மனதில் நன்றியுணர்வை வளர்த்தலும் கட்டாயமாகும்!
பொய், களவு, உருட்டு புரட்டு வஞ்சனை, அநீதி அக்கிரமம், அடுத்தவரை காயப்படுத்தல், கோல், புறம், அபாண்டம் போன்ற இழி குணங்கள், சிறுவர் மாதர் துஷ்பிரயோகங்கள், தீய நட்பு, போதை வஸ்துகள் பற்றிய எச்சரிக்கைகளை சொல்லிக் கொடுத்தல் கட்டாயமாகும்!
குறிப்பாக ஸைபர் போதை; சமூக ஊடகங்கள், இன்டர்நெட் போன்றவற்றால் ஏற்படும் தீமைகள், சக்தி, பண நேர விரயங்கள், உடல் உள உபாதைகள் என்பவை குறித்த விளிப்புணர்வை ஏற்படுத்தல் கட்டாயமாகும்.
இதெல்லாம் ஒரு காலத்தில் குடும்ப சூழலில் இயல்பாகவே கற்றுக் கொள்ளும் சமூக அமைப்பு இருந்தது, இப்பொழுது சொல்லப்பட்ட ஒவ்வொரு விடயத்திற்கும் அழுவதற்கும் சிரிப்பதற்கும் கோர்ஸ் (கற்கை) முடிக்க வேண்டியிருக்கிறது...
ஆளும் அறிவும் வளர்ந்தாலும் ஆன்மீகமும் பண்பாடுகளும் வளர்வதில்லை, ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்பது போல் பதின்ம வயது இருபது முப்பதுகளிலும் திருந்தாது திருமணம் குடும்பம் பிள்ளை வளர்ப்பு எல்லாமே சீர்கெட்டு உளவள ஆலோசனைக்கும் சுகர் பிரஷருக்கும் வரிசையில் நிற்கும் நிலை..
பிறப்பு அல்ல வளர்ப்பு சரியில்லாதவர்களால் பலரது ஆரோக்கியமும் கெட்டு ஆயுளும் குறைந்து போகும் நிலை..!
இனி மணமகன் மணமகள் தேடும் பொழுது உளவள ஆரோக்கியம் குறித்த சான்றிதல் பெற வேண்டிய நிலை வரலாம்!
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
09.05.2023

.png)
0 Comments