1920 களில் ஜேர்மனி மிகவும் மோசமான பணவீக்க (hyperinflation) நெருக்கடியைச் சந்தித்தது. 1921 இல் ஒரு டொலருக்கு நிகரான ஜேர்மன் நாணயத்தின் (மார்க்ஸ்) பெறுமதி 90 ஆக இருந்தது. அதுவே, வெறும் இரண்டு வருடங்களில், அதாவது 1923 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், 4’210’500’000’000 ஆக வீழ்ச்சி கண்டது. ஆதலால், நகரத்திலிருந்த பாதிப்பேர் ஒரேயிரவில் ‘poverty-billionaire’ ஆக மாறிப்போனார்கள்.
அப்போது இதைத்தவிர ஏகப்பட்ட துர்மாற்றங்கள் நடந்தன. அவற்றில் பின்வரும் சம்பவங்கள் மிகவும் சுவாரஷ்யமானவை(!).
- சிறுவர்கள் தங்கள் விளையாட்டுப் பொருளாகப் (toys - building blocks) பணக்கட்டுக்களைப் பயன்படுத்தினார்கள். - toys இன் விலை அப்போது நெருப்பாகக் கூடியிருந்தது.
- மக்கள் தங்கள் வீட்டுச் சுவர்களை மறைப்பதற்கும் அழகுபடுத்துவதற்கும் பண நோட்டுக்களைப் பயன்படுத்தினார்கள். - வோல் பேப்பர்ஸ் மற்றும் வோல் பெயின்ட் போன்றவற்றை வாங்குவதற்கு மக்களிடம் வசதியிருக்கவில்லை.
- கடதாசியின் விலை உயர்ந்துவிட்டதால் பட்டம் கட்டும் விளையாட்டு சிறுவர்களுக்குப் பெரும் சவாலாக மாறிவிட்டிருந்தது. பிறகென்ன, வீட்டில் குமிந்துகிடந்த பண நோட்டுக்களைக் கொண்டு அழகான பட்டங்களைக் கட்டி விளையாட ஆரம்பித்தார்கள் சிறுவர்கள். பெற்றோருக்கும் அதுவொரு மலிவான தேர்வாக இருந்தது.
அவ்வளவுதானா? இல்லை! அத்தனைக்கும் முடி வைத்தாற்போல் இன்னுமொரு தமாசான சம்பவம் நடந்தது.
அப்போது சிறு பொருளொன்றை வாங்குவதற்குக் கூட பெரும் தொகையான பண நோட்டுக்களைக் காவ வேண்டியிருந்ததால், மக்கள் கடைகளுக்குப் போகும் போது தங்கள் பணத்தை wheelbarrow களில் வைத்துத் தள்ளிக்கொண்டு போனார்கள். அதாவது அப்போது wheelbarrow களே மக்களின் valet ஆக மாறிப்போயிருந்தது. அவ்வளவு பணத்தையும் மனிதக் கழுதைகளால் சுமக்க முடியுமா என்ன!
இதனால் மறுபக்கம் திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க ஆரம்பித்தது. மக்கள் வீட்டு வாசலைத் தாண்டிக் கால் வைப்பதற்கே பயந்தார்கள். Criminality பூதமாக தலைதூக்கியது. அங்காடிகளும், வியாபார இடங்களும் திருடர்களின் பெருங்கூடாரமாக மாறிப்போனது.
இந்தத் திருடர்கள் அதிகமாக எதைத் திருடினார்கள் என்று நினைக்கிறீர்கள்? பணத்தையா?
இல்லவேயல்லை! Wheelbarrow க்களை!
வாஸ்தவம்தான். அப்போது அந்தப் பணத்தைவிட wheelbarrow கள் பெறுமதியானவை.
திருடர்கள் பணத்தைக் கொட்டிவிட்டு wheelbarrow களை மட்டும் திருடிக்கொண்டு போவது பெரும் தேசியப் பிரச்சினையாக உருவெடுத்தது. Wheelbarrow பிரச்சனை நாடாளுமன்றம் வரை போய் ஐந்து நாட்கள் விவாதிக்கப்பட்டது. பலனில்லை.
இப்படி 1923 ஆம் ஆண்டு உலகமே கண்டிராத பெரும் வரலாற்றுச் சம்பவங்களை எதிர்கொண்டது ஜேர்மனி. அத்தனைக்கும் காரணம் நாட்டில் ஏற்பட்டப் பொருளாதாரச் சரிவு மற்றும் அது உண்டாக்கிய படு மோசமான பணவீக்கம்.
சரி, அந்தப் பெரும் பணவீக்கத்திற்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறியவும், ஆலோசனை வழங்கவும் அரசு ஐந்து ஆலோசனைக் குழுக்களைக் கூட்டியது. (அந்த ஆலோசனைக் குழுக்களுக்கு ஆலோசனை வழங்க இன்னுமொரு ஆலோசனைக் குழு அமைக்கப்படவில்லை!).
கடைசியில் அந்த நிபுணர்கள் குழு காரணத்தைக் கண்டுபிடித்து அறிக்கை வெளியிட்டது.
‘வேறொன்றுமில்லை, பொருளாதார நெருக்கடியைக் குறைக்கிறோம் என்று அளவு கணக்கில்லாமல் பணத்தை அச்சிட்டுத் தொலைத்திருக்கிறீர்கள்! அதுதான் காரணம்! உடனடியாக பிரின்டர் மெசினைத் தூக்கிக் கடலில் எறியவும்!’.
-Amal Raj Fransis-
0 Comments