மை தொட்டு தூரிகையினால் விளம்பரப் பதாகை, பெயர் பலகை, அறிவித்தல்களை வரைதல் என்பது தனித்துவமான ஒரு கலை. விதவிதமான எழுத்து வடிவங்களுடன் ஓவியங்களும் வரைபுகளும் வெற்றுப் பலகைகளை அழகுபடுத்தும்.
அதிலும் ஒருபடி மேல் சென்று சினிமா விளம்பர பதாதைகளில் நடிகன் நடிகையரின் உருவம் தத்ரூபமாக வரையப்பட்டிருக்கும். கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற பெரு நகரங்களில் இப் பதாதைகள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும்.
டிஜிட்டல் பிரிண்ட் (Digital Print) வருகைக்கு முன்னர், தனித்துவமான பண்புகளுடன் வளர்ந்து வியாபித்திருந்த இக் கலை, இன்று காண்பதற்கு இல்லை.
நான், பல மேடைகளிலும் வேறு சந்தர்ப்பங்களிலும் கலாபூஷணம் S.S.M. ரபீக் அவர்களைக் குறித்து, “மை தொட்டு தூரிகையினால் பதாகைகள் வரையும் தலைமுறையின் இறுதிக் கலைஞன்” என்று அறிமுகப்படுத்துவேன்.
அச் சந்தர்ப்பங்களில், ஆழ் மனதில் உறங்கிக்கிடக்கும் இனம்புரியா வேதனையுடன், “இந்தக் கலையை யாராவது கைகொண்டு வளர்க்க வேண்டும்” என்றும் கோருவேன். ஒப்பீட்டளவில் குறைந்த செலவும், நேர மீதமும், வேறு பல வசதிகளும் கொண்ட டிஜிட்டல் பிரிண்ட் இருக்கும் போது, இதனை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார் என்று முடிவுடன் இருக்கும் போது, இந்த வாலிபனைக் கண்டேன்.
லாஹிர் இம்ரான். வயது 23. புத்தளம் சாஹிரா கல்லூரியின் பழைய மாணவன் (IDORZ - O/L 2013 / A/L 2015 Batch). கலாபூஷணம் S.S.M. ரபீக் என்ற கலைஞனின் தலைமுறை தொடராக, முன்னவர் விட்டுச் சென்ற பாதையில் தன் கலைப் பயணத்தைத் மை தொட்டு முன்னெடுக்கின்றான்.
2007 இல், மர்ஹூம் ஹம்தூன் (Simco உரிமையாளர்) கலாபூஷணம் ரபீக்கிடம் இப் பணியை ஒப்படைத்திருந்தார். கலாபூஷணம் ரபீக்கும் தனது கலைத் திறமையை அப் பலகையில் காட்டியிருந்தார். மர்ஹூம் ஹம்தூன் அவர்களும் கலாபூஷணம் ரபீக்கும் நெருங்கிய நண்பர்கள். இம்ரானின் நண்பர்கள், மர்ஹூம் ஹம்தூனின் மகன் உட்பட, இம்ரானின் ஓவியத் திறமையையும் கலை ஆர்வத்தையும் நிறையக் கூறினர். கலையும் நட்பும் தலைமுறை தாண்டி தொடர்கின்றது, அல்ஹம்துலில்லாஹ்
இம்ரான் போன்ற கலைத் திறன் வாய்ந்த வாலிபர்களுக்குத் தேவையானவை, ‘சந்தர்ப்பங்களும்; சவால்களும்’. ஏனெனில் கலை ஆக்கப் பணிகளில் வழங்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களும் ஒருவகை சவால் என்பதை அறிவேன்.
சந்தர்ப்பங்கள் ஒரு கலைஞனை அறிமுகப்படுத்தும். ஆனால் சவால்கள் தான் அவனை வளர்க்கும்.
இம்ரான், சவால்களைக் கையேற்கக் கூடிய வாலிபன்; வாலிபக் கலைஞன். அவனுக்கு சந்தர்ப்பங்களை வழங்குங்கள். அவன் வளருவான், இன்ஷா அல்லாஹ்
Lahir Imran Tele: 0768550154
0 Comments