நமது நாட்டில் நடைமுறையில் இருக்கின்ற தேர்தல் முறையினை விகிதாசார தேர்தல் முறை என அழைப்பர். இந்த விகிதாசார தேர்தல் முறையின் தனி மாற்று வாக்கு முறை என அழைக்கப்படும் ஒரு முறையில்தான் நம் நாட்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம் எண்னெவெனில் ஜனாதிபதி தேர்தலில் கூட நாம் விருப்பு வாக்குகளை அளிக்கலாம்.
(படத்தில் வாக்களிக்கும் முறை காட்டப்படுகிறது.)
ஏன் இந்த விருப்பு வாக்கு முறைமையை இவ்வளவு காலமும் பேசாமல் தற்போது பேசுகிறோம் என நீங்கள் சிந்திக்கலாம். அதற்கு காரணம் இவ்வளவு காலமும் சம பலம் பொருந்திய இரண்டு பேர் மாத்திரமே போட்டியிட்டு வந்துள்ளனர். இதனால் இந்த விருப்பு வாக்கு முறைமை பெரிதாக தாக்கம் செலுத்தவில்லை. ஆனால் இன்று நமது நாட்டில் உருவாகி இருக்கும் அரசியல் நெருக்கடி நிலமையால் சம பலம் பொருந்திய பலர் போட்டியிடலாம் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். எனவே சம பலம் வாய்ந்த பலர் போட்டியிடுகின்ற பொழுது நாம் அளிக்கும் இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகள் ஜனாதிபதி தேர்தலில் மிக மிக முக்கிய இடத்தை பெறப்போகின்றது என்பதே உண்மை.
இலங்கை அரசியல் அமைப்பில் உறுப்புரை 94 ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக குறிப்பிடுகின்றது. இதில் தெளிவாக கூறப்படும் விடயம் என்னவெனில்
#. ஜனாதிபதி தேர்தலில் எந்த ஒரு வேட்பாளர் 50.01% வாக்கை பெறுகிறாரோ அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.
ஆனால் அந்த தேர்தலில் யாரும் 50.01% பெறவில்லை எனின்
#. போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிக வாக்குகளை பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் தவிர மற்ற அனைவரும் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்.
#. இவ்வாறு நீக்கப்பட்ட வேட்பாளர்களின் வாக்கு சீட்டில் உள்ள இரண்டாம் விருப்பு வாக்கு முதல் இரண்டு வேட்பாளர்களுக்கும் அளிக்கப்பட்டு இருந்தால் அது அவர்களின் வாக்குகளோடு கூட்டப்படும்.
#. அவ்வாறு கூட்டப்பட்டும் யாரும் 50.01% அடையவில்லை எனின் நீக்கப்பட்ட வேட்பாளர்களின் வாக்குச் சீட்டில் உள்ள 3ம் விருப்பு வாக்கு முதல் இரண்டு வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்டு இருந்தால் அது அவையோடு கூட்டப்படும்.
#. இவ்வாறு அனைத்தும் கூட்டப்பட்ட பிற்பாடு யார் அதிக வாக்கு எடுத்து உள்ளாரோ அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். ஆகவே மூன்றாம் சுற்றில் வ்வேட்பாளர்கள் யாரும் 50% பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை மாறாக அதிக வாக்குகள் பெற்றவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.
எனவே நாம் இந்த முறை கட்டாயம் நமது விருப்பு வாக்கை ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.
மு.இ. இயாஸ்தீன்
சட்டமானி (சிறப்பு) கொழும்பு
சட்டத்தரணி
0 Comments