ஜனாதிபதி வேட்பாளராவதற்கான கனவு பீல்ட் மார்சல் சரத்பொன்சேகாவுக்கும் காணப்படுவதாகவும், இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே இராப் போசன நிகழ்வை அவர் ஏற்பாடு செய்திருந்ததாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னாசன எம்.பி.க்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னாசன உறுப்பினர்களிடம் தான் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு எதிர்பார்ப்புடன் உள்ளதாகவும் பொன்சேகா எம்.பி. கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், கட்சியுடன் இது குறித்து கலந்துரையாட வேண்டும் என ஐ.தே.க.யின் பின்னாசன எம்.பி.க்கள் பொன்சேக்காவிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாசவுக்காக சுஜீவ சேனசிங்க ஆகியோர் இராப் போசன நிகழ்வுகளை கட்சி ஆதரவாளர்களுக்கு நடாத்தியுள்ளனர். இந்த வரிசையிலேயே பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவும் அண்மையில் கட்சி எம்.பி.க்களுக்கு இராப் போசனம் வழங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.
முஸ்லிம் பயங்கரவாதத்தினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனைக் கருத்தில் கொண்டு மஹிந்த ராஜபக்ஸ பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட ஒருவரை களமிறக்கியுள்ளார்.
அவரது தெரிவைப் போன்று ஐக்கிய தேசியக் கட்சியும் தேசிய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்க வேண்டும் எனவும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா பல தடவைகள் ஊடகங்களிடம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments