முஸ்லிம்களின் காதி நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் குறித்து தகவல் வெளியிட்டிருந்த வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் ஜபார் ஃபஸீனா என்ற பெண், இன்றைய தினம் பதுளை காவல்துறை நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
காதி நீதிமன்றத்தின் பிரதிநிதி ஒருவரினால், குறித்த பெண்ணுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே காவல்துறையினர் அவரை அழைத்துள்ளனர்.
தற்போது, தனது தந்தையின் பாதுகாப்பில் வாழ்ந்துவரும் ஃபஸீனா, 10 வயதில் முஸ்லிம் ஆண் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கணவனின் முறையற்ற தொடர்பு காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, பதுளையில் உள்ள காதி நீதிமன்றில் குறித்த பெண் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இதன்போது, தனக்கு பெரும் அநீதி நிகழ்ந்தாக அவர் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.
தனது மகளின் பராமரிப்புக்காக 3000 ரூபா வழங்கப்படுகின்ற நிலையில், அதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கணவருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துவைத்தனர் என்றும் குறித்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.
தாய் இல்லாத காரணத்தினால், 10 வயதிலேயே தனக்கு திருமணம் செய்துவைத்தனர் என்று அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த தகவல் வெளியானதையடுத்து, காதி நீதிமன்ற காதி ஒருவரினால், அந்தப் பெண்ணுக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, இன்றைய தினம் வாக்குமூலம் வழங்குவதற்காக பதுளை காவல்துறைக்கு சென்றபோது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த குறித்த பெண், காதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக தனக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தனக்கு ஏற்பட்ட அநீதியையே தான் வெளிப்படுத்தியதாகவும், குழந்தையின் பராமரிப்பு செலவு உட்பட, தனது உடைமைகளைப் பெற்றுத்தருமாறே வழக்குத் தாக்கல் செய்திருந்ததாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வழக்கு, கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டபோதும், அது தொடர்பாக தனக்கு இதுவரை ஒரு கடிதம்கூட கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விவாகரத்து பத்திரத்தில் தான் கையொப்பமிடவில்லை என்றும், காதிதான் விவாகரத்தை வழங்கினார் என்றும், பெண் ஒருவரின் கையொப்பமின்றி, காதியினால் விவாகரத்து வழங்கமுடியும் என கூறப்பட்டதாகவும் ஃபஸீனா தெரிவித்துள்ளார்.
திருமணம் செய்யப்படும் போதும், விவாகரத்து பெறப்படும் போதும் பெண்களின் கையொப்பம் பெறப்படுவதில்லை.
அப்துல் கரீம் என்பவரே இந்த விவாகரத்தில் கையொப்பமிட்டுள்ளார் என்றும், குறித்த காதி கடந்த மாதம் 12 ஆம் திகதி கரீமின் இல்லத்திற்கு மதிய நேர விருந்துபசாரம் ஒன்றுக்கு சென்றுள்ளார் என்றும், திருமணம் செய்து வைக்கப்பட்டமைக்காகவே அந்த உபசாரம் வழங்கப்பட்டதாகவும் அப்துல் ஜபார் ஃபஸீனா தெரிவித்துள்ளார்.
மனைவியையும், குழந்தைகளையும் கைவிடும் நிலையே இந்தச் சட்டத்தில் உள்ளதாகவும், காதி நீதிமன்றம் தங்களுக்கு அவசியமில்லை என்றும் அந்தப் பெண் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments