Subscribe Us

header ads

பணத்துக்காக மட்டும்தான் சீசர் செய்யப்படுகிறதா? இலங்கையில் அதிகளவு சிசேரியன் மூலமான குழந்தை பிறப்புகள் இடம்பெறுவதற்கான காரணங்கள் என்ன?

- Dr Ziyad Aia -


நவீன விஞ்ஞான வளர்ச்சி பல நன்மைகளை கொண்டு வந்த அதே நேரம் பல பாதக விளைவுகளையும் ஏற்படுத்தி வருகிறது.

இலங்கையில் 99.9 வீதமான குழந்தைப் பிறப்புகள் வைத்தியசாலையில் இடம்பெறுகின்றன.

அதேநேரம் தாய் சேய் மரண வீதம் மிகக் குறைந்த மட்டத்தில் பேணப்பட்டு அபிவிருத்தி அடைந்த நாடுகளோடு ஒப்பிடும் நிலையில் உள்ளது.


பொதுவாக சிசேரியன் சத்திரசிகிச்சை பல தாய்-சேய் மரணங்கள் மற்றும் பாதிப்புகளை குறைக்கிறது.

கி. மு. Julius Caesar இம்முறையில் பிறந்ததனால் இப்பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.

தற்போது பொதுவாக நடைமுறையில் உள்ள முறை Lower Segment Caesarian Section. சுருக்கமாக LSCS எனப்படும்.


சிசேரியன் சத்திரசிகிச்சை தேவைப்படுவதற்கான காரணங்கள்:-

01. பல மணி நேரங்கள் கருப்பை சுருக்கம் இருந்தும் குழந்தை வெளித்தள்ளப்படாமை. ( Lack of Progress)

02. கழிவுகளை உட்கொண்டு பிள்ளைக்கு மூளை மற்றும் உயிர் ஆபத்து ஏட்படக்கூடிய நிலைமை. ( Muconium Aspiration )

03. கருப்பையில் பிள்ளையின் இதயத்துடிப்பு சுவாசத்திற்கு ஆபத்து ஏற்படுதல். (Foetal Distress)

04. தொப்புள்கொடி (Umbilical Cord) பிள்ளையின் கழுத்தை சுற்றி இருத்தல்.

05. நச்சுக்கொடி (Placenta) கருப்பை வாயிலில் அமைந்திருந்து (Placenta Previa) Normal Delivery இன்போது அதிக இரத்தப் பெருக்கு ஏற்படும் ஆபத்து இருத்தல்.

06. பிள்ளை வெளிவரும் வாயிலே தலை அல்லாத பிற பகுதிகள் இருந்து சுகப்பிரசவத்தை கடினமாக்கல். அல்லது உடல் ஊனம் ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்படுதல் (Abnormal Position)


07. ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை தரித்து இருப்பதோடு அவற்றில் வாயிலில் இருக்கும் குழந்தை சரியான முறையில் அமையாமை. (Multiple Pregnancies - Leading baby in abnormal position.)

08. குழந்தை வெளியாகும் வாயிலில் காணப்படும் கட்டிகள்.

09. சுகப்பிரசவத்தை மேற்கொள்ள முடியாத அளவுக்கு தாயில் காணப்படும் நோய் நிலைமைகள்.

10. பிரசவத்தின் போது (தாய்க்கு ஏற்படும் நீரிழிவு போன்ற காரணங்களால்) குழந்தையின் தலை பெருத்து வெளியாவதில் கடினமான நிலை. (Cephalo pelvic Disproportion)

இது போன்ற மேலும் பல சந்தர்ப்பங்களில் சிசேரியன் சத்திரசிகிச்சை ஒரு வரப்பிரசாதமே.

பொதுவாக இவ்வாறான நிலைமைகள் 10 வீதமான குழந்தை பிறப்பின்போது ஏற்படுவதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு WHO சிசேரியன் அளவு 10 - 15% வரைக்குள் பேணப்படவேண்டும் என வலியுறுத்துகிறது.

இருப்பினும் உலக தரவுகளை பார்க்கும்போது 2000 யிலிருந்து 2015 வரையான காலப்பகுதியில் இதன் வீதம் பாரிய அளவு அதிகரித்துள்ளது.


அதிலும் இலங்கையைப் பொருத்தவரை 2015 இல் 35 வீதமாகக் காணப்படுகின்றது.



சவூதி அரேபியாவில் கூட 2015 தரவுகளின்படி 27% ஆக காணப்படுகிறது. மக்காவில் 39% ஐ தாண்டுகிறது. (ஆதாரம் Link இல்)

இலங்கையில் அரச வைத்தியசாலையை விட தனியார் துறையிலேயே அதிக வீதத்தில் சிசேரியன் சத்திரசிகிச்சை இடம்பெறுகிறது.

பொதுவாக அரச வைத்தியசாலையை எடுத்துக் கொண்டால் சுகப்பிரசவத்துக்கு (Normal Delivery) பயிற்றுவிக்கப்பட்ட மருத்துவமாது (Midwife) அதனை மேற்பார்வை செய்யும் ஒரு வைத்தியர் இருந்தால் போதுமானது. ஆனால் சிசேரியன் சத்திரசிகிச்சையாக இருந்தால் கட்டாயம் VOG யின் மேற்பார்வை அவசியமாகிறது.

(இருப்பினும் அரச வைத்தியசாலைகளில் சிசேரியன் சிகிச்சைக்காக VOG அல்லது ஏனைய வைத்தியர்களுக்கு எந்த மேலதிக கொடுப்பனவும் வழங்கப்படுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்க.)

அப்படி இருப்பினும் சில சந்தர்ப்பங்களில் Risk எடுப்பதை தவிர்ந்து கொள்வதற்காக சிசேரியன் நாடப்படுகிறது. சிசேரியன் சிகிச்சைக்கான முடிவு பல நேரங்களில் VOG ஐ பொறுத்து Subjective ஆக அமைகிறது.

உதாரணமாக அதிகளவான மனித வளம் இல்லாத வைத்தியசாலைகளில் சுகப்பிரசவத்துக்கு விட்டு கடைசியில் அது emergency ஆக மாறினால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க Risk என கருதும் பிரசவங்களுக்கு முன்கூட்டியே சீசர் செய்யப்படுகிறது.

பொதுவாக முதல் பிரசவத்தில் சீசர் செய்தாலும் இரண்டாவது பிரசவத்தை Normal ஆக செய்யும் வாய்ப்பு உள்ளது. இதனை VBAC (Vaginal Delivery After Caesarean) என்பார்கள்.

ஆனால் இதன் போது சில வேளை கருப்பையில் ஏற்கனவே இட்ட தையல் பிரிந்து இரத்தப்பெருக்கு ஏற்படலாம். இதற்கு எந்த நேரமானாலும் அவசரமாக ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்று சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய வசதி இல்லாவிடில் முன்கூட்டியே சீசர் செல்வது பாதுகாப்பானது. (Indication - "Past Section")
Risk எடுக்கும்போது தாய் சேய்க்கு பாதிப்பு ஏற்பட்டால் ஒவ்வொரு தாய் சேய் மரணத்துக்கும் வைத்தியசாலை மட்ட , மாவட்ட மற்றும் தேசிய ரீதியில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும் நிகழ்கிறது.

இவ்வாறு பல காரணங்களுக்காக அரச வைத்தியசாலைகளில் சீசர் வீதம் அதிகரித்து காணப்படுகிறது.


ஆனால் தனியார் வைத்தியசாலைகளின் நிலையோ தலைகீழ்:-

பலரின் கருத்து தனியார் வைத்தியசாலைகளில் அதிக பணம் சம்பாதிக்க சீசர் செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள் ஆனால் அதையும் தாண்டிய 3 காரணங்கள் உண்டு.


01. பொதுவாக தனியார் வைத்தியசாலைக்கு செல்லும் மக்களின் எதிர்பார்ப்பு VOG யே பிரசவத்தையும் பார்க்க வேண்டும் என்பது.

ஆனால் இது நடைமுறைச் சாத்தியமற்றது. VOG என்பவர் அரச வைத்தியசாலையில் கடமை புரியும் அதேநேரம் மாலை நேரம் ஒவ்வொரு இடங்களுக்கு Channelling க்கு செல்வார்.

Normal Delivery இந்த நேரத்தில்தான் நிகழும் என்று சரியாக சொல்ல முடியாது. எனவே இது சாத்தியமற்றது.

அதேநேரம் சிசேரியன் என்பது தான் நினைத்த நேரத்திற்கு செய்யக் கூடியதாக இருப்பதால் அது எப்படியும் முன்னுரிமை பெறும்.

தலைநகரில் உள்ள சில பிரபல தனியார் வைத்தியசாலைகள் தவிர ஏனைய வைத்தியசாலைகளில் Normal Delivery கள் நடைபெறுவது குறைவு.

அவ்வாறு ஒருவர் Admit ஆனாலும் அதனை மேற்பார்வை செய்ய 24 மணிநேரமும் அனுபவமிக்க மருத்துவமாதுகளும் (Midwife) அனுபவம் வாய்ந்த வைத்தியரும் அவசியம். ( குஞ்சு கோழி என்றாலும் குனிந்து தான் அறுக்க வேண்டும்.)

எனவே குறைந்த அளவான தாய்மார் அங்கு செல்லும்போது அவர்களுக்காக ஊழியர்களை நியமிப்பது அவர்களுக்கு சம்பளம் வழங்குவது தனியார் வைத்தியசாலைக்கு செலவு அதிகம் என்பதும் சிசேரியன் அதைவிட இலகுவானது என்பதும் ஒரு காரணம்.


02. இலங்கையைப் பொறுத்தவரையில் பெரும்பான்மை சமூகங்கள் பொதுவாக ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுடனேயே குடும்பத்தை மட்டுப்படுத்துவதால் Normal Delivery க்கு செல்லாமல் சிசேரியன் நாடப்படுகிறது. 

இவ்வாறு தானாக விரும்பி சிசேரியன் செய்வதை diagnoses Card களில் "Elective LSCS" என குறிப்பிடப்பட்டிருக்கும்.

உடம்பை வருத்தாது இயந்திரங்களால் இலகுவாக வாழ்ந்து பழகிய தாய்மாரும் பிரசவ வலியை தவிர்க்க சிசேரியனை நாடுவதையும் அவதானிக்க முடிகிறது.

பலர் முதலாவது குழந்தை சுகப்பிரசவமாக இருந்தாலும் இரண்டாவது or 3வது குழந்தையுடன் நிரந்தர குடும்ப கட்டுப்பாடு முறையான LRT செய்ய விரும்புவதால் சிசேரியன் செய்வது பொருத்தமானது என கருதி அதற்கும் உள்ளாகிறார்கள்.


03. இன்னும் சில பெரும்பான்மை சமூகங்களிடத்தில் குறித்த தேதியில் குறித்த நேரத்தில் குழந்தை பிறந்தால் ராசியானது என எண்ணி அதற்குரிய ராசிபலனை கணித்து அந்த நேரத்தில் பிள்ளை பிறக்க வேண்டும் என்பதற்காக அனாவசிய சிசேரியன் செய்கின்றார்கள்.

அரச வைத்தியசாலைகளில் இந்த Elective LSCS குறைக்கப்பட்டு இருப்பதனால் தனியார் வைத்தியசாலைகளில் அதிக அளவில் இது இடம் பெறுகிறது.

Right to Information Act மூலமாக அரச வைத்தியசாலைகளில் சிசேரியன் பற்றிய தகவல்களை பெறக் கூடியதாக இருந்தாலும் தனியார் வைத்தியசாலைகள் அதனை வெளியிட மறுக்கவோ அல்லது குறைத்து வெளியிடவோ செய்கின்றன.


அப்படியானால் கீழே உள்ள தரவுகள் எவ்வாறு பெறப்பட்டது?

குழந்தை பிறந்த பின் வீடுகளுக்கு செல்லும் மருத்துவமாது (Midwife) மூலமாக பிறப்புமுறை, இடம்பெற்ற இடம் போன்ற தகவல்களை சரியாக பெறக் கூடியதாக இருப்பதால் அதன் அடிப்படையிலேயே அரசாங்கம் படத்தில் உள்ள தரவை வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் சிசேரியனை குறைக்க ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட Target ஐ வெளியிடுகிறது. இருந்தாலும் அதனை அடைவதில் சிக்கல் நிலவிக் கொண்டே இருக்கிறது.



எனவே சிசேரியனை தவிர்ந்து கொள்ள:-

அரச வைத்தியசாலைகளில் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகின்ற சிசேரியன் பற்றிய காரணத்தை கேட்டு அறிவதோடு அதனை இன்னுமொரு குடும்ப வைத்தியரிடம் ஆலோசனை பெறுதல்.


சுகப்பிரசவம் (Normal Delivery) செய்ய விரும்புபவர்கள் முடிந்த அளவு தனியார் வைத்தியசாலைகளை தவிர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு தனியார் வைத்தியசாலைகள் செல்வதாக இருந்தால் அவ்வைத்தியசாலைகளில் Normal delivery அதிகளவாக இருக்கிறதா? அதற்குரிய மனிதவளம் உள்ளதா? என்பதை அறிந்த பின்பே செல்வது உசிதமானது. இல்லையென்றால் அனாவசியமாக சிசேரியனுக்கு உட்பட்டு பணத்தை இழப்பதோடு மூன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெறும் வாய்ப்பை இழந்து சிசேரியனால் ஏற்படும் பாதிப்புகளையும் சந்திக்க வேண்டி ஏற்படும்.

Post a Comment

0 Comments