கெளரவ ரணில் விக்கிரமசிங்க
பிரதமர்
அலரி மாளிகை,
கொழும்பு.
4 March 2019
ஐயா,
தீங்கு விளைவிக்கும் குப்பைத்திட்டத்தினை நிறுத்தக்கோருதல்
மாண்புமிகு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கட்கு, புத்தளத்தில் வசிக்கும் குடிமக்கள் எழுதிகொள்வது, மேற்படி பிரதேசத்தில் வசிக்கும் நாம் உங்கள் அரசாங்கத்தின் பாகுபாடு அற்ற செயற்றிட்டத்தினால் இதுவரை உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளோம். இன்னும் கொஞ்ச காலத்தில் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படவிருக்கிறோம் என்பதனை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
இதற்கு முன்னர் இருந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சீமெந்து தொழிற்சாலை, அனல் மின்நிலையம் என்பவற்றால் நாளுக்கு நாள் , சிறியோர் முதல் பெரியோர் வரை என இரக்கமில்லாது மரணம் எமை ஆட்கொண்டு வருகிறது. இதனை உங்களிடம் முறையிட்டால் அதனை நாம் செய்யவில்லையே என நழுவி விடுவீர்கள். ஆதலால் தான் உங்கள் அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த குப்பைத்திட்டத்தை நிறுத்தி தருமாறு வேண்டுகிறோம்.
ஐயா, உங்களுக்கு நன்கு தெரியும். புத்தளம் உங்கள் கட்சியின் அசைக்க முடியாத கோட்டை என்று. எங்கும் பச்சை, எம் உடலில் ஓடும் இரத்தமும் பச்சை என்று எப்போதும் உங்களுக்கு விசுவாசமாக இருந்த நாங்கள் உங்களிடம் இப்போது பிச்சை கேட்கும் நிலமைக்கு ஆளாகியுள்ளோம்.
அபிவிருத்தி அபிவிருத்தி என்று சொல்கிறீர்கள். இதில் நாங்கள் எந்த அபிவிருத்தியையும் காணவில்லை. மக்களுக்கு பயன்தராத, மக்கள் வெறுக்கின்றவை எப்படி அபிவிருத்தியாக அமையும். கொழும்பு குப்பைகளால் அம்மக்கள் பட்ட இன்னல்களை அறியாதவர்களாய் நாம் இருக்கவில்லை. ஒரு சமூகத்தை பாதிப்பிலிருந்து காப்பாற்றுவதாக சொல்லி இன்னொரு சமூகத்தை அடியோடு அழிக்கப்பார்ப்பது தர்மத்தை மீறும் செயலல்லவா..!
ஐயா, பிரதமர் அவர்களே..! இலங்கை திருநாட்டின் தலைவர் அவர்களே..! மாவட்டத்தின் தலைநகர் எங்களுக்கு ஒரு போதனா வைத்தியசாலை இல்லை, உயர்தர கல்வி பீடங்கள் இல்லை, அரச சேவைகளை பூர்த்தி செய்யும் பெரும்பாலான உப பிரிவுகள் இல்லை. இவற்றை எல்லாம் அபிவிருத்தியாக உங்களால் செய்து தரமுடியவில்லை. ஆனால் சீமெந்து தொழிற்சாலை, அனல்மின் நிலையம், குப்பை செயற்றிட்டம் என அபிவிருத்தி எனும் பெயரில் போலியை எம்மீது திணிக்கின்றீர்கள். உங்களை பிரதமராக அரியணையில் ஏற்றி அழகு பார்த்ததற்கு தரும் பரிசா இது.
இலங்கையில் 25 மாவட்டங்கள் இருக்கின்ற நிலையில் பாதிப்பை தரக்கூடிய அத்தனை திட்டங்களையும் புத்தளத்தில் நிர்மானிப்பதன் நோக்கம் தான் என்ன.? நாங்கள் மனிதர்கள் என்ற பல்வகைமைக்குள் உள்வாங்கப்பட மாட்டோமா.? ஏன் இந்த ஓரவஞ்சனை.
மாண்புமிகு பிரதம மந்திரி அவர்களே..! மக்கள் யாவரும் சமம் என்று சொல்லும் நீங்கள் இவ்வாறன திட்டங்களை மற்ற மாவட்டங்களிலும் பகிர்ந்து செயற்படுத்த முயற்சி செய்யுங்கள். நாம் இந்த சீமெந்து தொழிற்சாலை, அனல்மின் நிலையம் என இரு பெரும் திட்டங்களால் பட்ட இன்னல்கள் போதும். இனியும் எமக்கு துன்பங்களை தராதீர்கள்.
எம்மீது இரக்கம் காட்டுங்கள். நாமும் இந்நாட்டின் குடிமக்களே..! எமது சந்ததிகள் ஆரோக்கியமாக வாழ வழிவிடுங்கள். இந்த தீய செயற்றிட்டத்தை உடனடியாக நிறுத்த உத்தரவிடுங்கள். கொழும்பு குப்பைகளை அகற்றுவதற்கு மாற்றுவழிகளை கையாளுங்கள். நாங்கள் உப்பு விளையும் பூமியில் வாழ்பவர்கள். உங்களை உள்ளளவும் மறக்கமாட்டோம்.
இங்ஙனம்
உண்மையுள்ள
குடிமக்கள்
0 Comments