தன் முயற்சியால் சற்றும் மனம் தளராத சிரிசேனா மீண்டும் மத்திய வங்கியின் மதில் மேலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினார்.பின்னர் அதைத் தூக்கிக் கொண்டு கோல் பேஸ் நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து ,”ஜனாதிபதியே! பனிகொட்டும் இந்தப் பின்னிரவில் நீ ஏன் இப்படி மெனக்கெடுகிறாய்?.உனக்கு சளி, தடுமல், இருமல் வராதா? உனக்கு அவ்வாறு வந்தாலும் வைத்தியர்களின் சொகுசான கவனிப்பில் நீ மீண்டுவிடுவாய்.
ஆனால் உனது ஆட்சியில் ஒரு நகரத்தின் மக்களே அபிவிருத்தி என்ற முக்காட்டுக்குள் மூச்சித் திணறி மெல்ல மெல்லச் செத்துக் கொண்டு இருக்கிறார்கள்.அவர்கள் புத்தளம் ஊர்வாசிகள்.வரப் போகும் பேரழிவை நீ பத்திரிகை பார்த்துத் தெரிந்து கொள்ள முன்பு உனக்கு அபிவிருத்தி என்ற மாயையால் அழிந்து நமக்கெல்லாம் முன்னுதாரணமாய் விளங்கும் இந்தியாவின் போபால் நகரின் கதையைக் கூறுகிறேன்.கேள் ” என்றது..
“1979 ஆம் ஆண்டில் இந்தியாவின் இருதயம் எனப்படும் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் அமெரிக்காவின் கார்ப்பரேட் அரக்கன் ‘யூனியன் கார்பைட்’ குடியேறிய போது வறுமைக்கோட்டிற்கு நூறடி கீழே அதலபாதாளத்தில் இருந்த மக்களிடம் அழகான அபிவிருத்திக் கதைகள் சொல்லப்பட்டன. ‘இந்தா பாரு !ஒரு நாளைக்கு இருபது ரூபாய்,வாரம் ஒரு சவர்க்காரம்,நிரந்தரமாய் ஒரு தலைக்கவசம் தருகிறோம்’..எப்படி ஒரு சொகுசு என்ன ஒரு ஆடம்பர வாழ்வு? மக்கள் கூழைக்கும்பிடு போட்டு சேவித்தார்கள்.கொண்டாடினார்கள்.அமெரிக்க முதலாளிகள் கட்டை விரலை உயர்த்தி லைக் செய்து கொண்டார்கள்..பூச்சிகொல்லி மருந்துகளை தயாரிக்க உதவும் மூலப்பொருளான மீதெல் ஐசோ சயனைட்டை தயாரிக்கும் பணி யூனியன் கார்பைட்டுடையது..சுருக்கமாய் மிக்.
தொழிற்சாலை இயங்கத் தொடங்கிய போதே ஆட்டம் காண ஆரம்பித்தது..’ஒரு வல்லரசு நாடு மூன்றாம் உலகநாட்டைப் பரிசோதனைக் கீரிப்பிள்ளையாக்கிக் கொல்கிறது’ என்று சூழல் ஆர்வலர்கள் நீதி கேட்டு நெடும் பயணம் போனார்கள்.மனித வாழ்வுக்கு சிறிதும் பொருந்தாத இரசாயணம் இங்கே உற்பத்தியாகிறது என்று முழங்கினார்கள்.இந்த மிக் இரசாயணம் வெறும் ஐந்து செல்சியஸ் வெப்பநிலையில் இருக்க வேண்டிய ஒன்று..ஆனால் தொழிற்சாலையின் ஏஸி வேலை செய்யாததால் சாதாரண முப்பது டிகிரி வெப்பநிலையில் கிடக்கிறது.கடைசியில் பெரும் விஷ வாயுக்கசிவு தான் ஏற்படும் என்று ஒரு பத்திரிகை எழுதியதாம்..ஆனால் இந்திரா காந்தி அரசோ உங்களைப் போல இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கியது..
பத்திரிகை செய்தி வெளியிட்டு ஆறாவது மாதம் 1984 இல் ஒரு அதிகாலைப் பொழுதில் ஹிரோஷிமா நாகசாகியில் நடந்ததைப் போன்ற ஒரு பேரவலம் நடந்து முடிந்துவிட்டது…இறந்தவர்களின் எண்ணிக்கை முப்பதாயிரம் என்கிறார்கள்.பல இலட்சக்கணக்கானோர் கைகால் ஊனமாகி மூளை செயலிழந்து முடமாகினர்.கசிந்த விஷவாயு மண்ணிலும் தண்ணீரிலும் ஆழமாய் ஊடுருவ உடனடி லாட்டரி சீட்டுப் பரிசாய் சுவாசப் புற்றுநோய் வந்து சேர்ந்தது.உலகத்தில் இருக்கும் அத்தனைவிதமான பயங்கர நோய்களும் போபாலைப் பீடிக்க நோய்களின் கூடாரமானது போபால்.அதுமட்டுமா அப்போது நேரடியாய் பாதிக்கப்பட்டு சிறுமிகளாய் தப்பிப் பிழைத்தவர்கள் சிலர் பின்னாளில் தாய்மார்களாகி பிள்ளைகளுக்குக் கொடுத்த தாய்ப்பாலில் பாதரசம்,ஈயம்,ஆர்கன்,க்ளோரீன் எல்லாம் வந்ததாம்…இந்திரகாந்தி மட்டும் வரவில்லை..
இத்தனை அநியாயத்திற்கும் காரணமாகி ஏழுதலைமுறைகளுக்கு கையேந்தித் திட்டவைத்த யூனியன் கார்பைட்டின் அதிபதி வாரன் அன்டர்சன் மத்திய பிரதேச மாநிலத்தின் துணையுடன் டெல்லி போய் அங்கிருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றான்.திரும்ப வரவே இல்லை..இருபத்தாறு வருடங்களுக்குப் பின் போபால் நீதிமன்றத் தீர்ப்பு என்ன தெரியுமா? வார்ன் அன்டர்சன் தேடப்படும் குற்றவாளி,நிருவாக இயக்குநர்களாய் இருந்த ஏழுபேருக்கு இரண்டு வருட சிறை.ஒரு இலட்சம் அபராதம்.அவர்கள் இருபத்தையாயிரம் பிணையில் உடனே வெளிவந்தார்கள்..’விஷவாயு கசிந்த துயரத்தைவிட மகா மட்டமான கேவலம் இந்தத் தீர்ப்பு’என்று மக்கள் நீதிமன்ற வளாகத்திலேயே புழுதிவாரித் தூற்றினார்கள்".
இக்கதையைக் கூறிய வேதாளம், "ஜனாதிபதியே ,இங்கே என்ன நடக்கிறது..புத்தளத்திற்கு ஏன் இந்த ஓரவஞ்சனை? சீமெந்து தொழிற்சாலைக் கழிவுகளால் சோதனை..அனல் மின்சாரநிலையம் என்ற ஒன்றை அமைத்து ஒழுங்காய் முகாமைத்துவம் இல்லாமல் சுற்றிவர இருக்கும் கிராமங்களில் எல்லாம் காபன் படிந்து போய் உஷ்ணம் கண்டபடி எகிறி பருவப் பெயர்ச்சி மழை குழம்பி நிறையப் பேர் புற்றுநோயாளிகளாகி நிற்கையில் கொழும்பில் இருக்கும் மேட்டுக்குடி முதல் குடுகுப்பைக்காரனின் டொன் கணக்கான குப்பைகளையும் அந்த மக்கள் தான் சுமக்க வேண்டுமா?
உலகநாடுகளில் எங்காவது ஒரு நகரத்தின் குப்பையைக் கொண்டு போய் இன்னொரு நகரில் குழி தோண்டிப் போட்டு வரும் பொறுப்பற்ற ஆட்சி எங்கே இருக்கிறது?இங்கே மீள் சுழற்சியோ சிங்கப்பூர் போல எரித்து உரமாக்கும் கதைகளோ இல்லை..சும்மா வீசிவிட்டு வருவதற்கு சம்பிக்க என்ற அமைச்சன் ஏன் தேவை? நிலத்தடி நீர் மாசடைந்து பெறுமதிக்க மீன்வளம் எல்லாம் அழிந்து மக்கள் வாழ்வாதாரம் இழந்து ஒட்டாண்டியாய் போவதை ரசிக்கும் அலட்சியத்திற்குப் பெயரா நல்லாட்சி ?இப்போது என்ன நுரைச்சோலை இரண்டாம் திட்டமும் தயாராம்..நீ என்னப்பா அணுஅணுவாய் சித்திரவதை செய்து புத்தளத்திற்கு மரண சாசனம் எழுதி இன்னொரு போபால் ஆக்குகிறாயா? இந்தக் கேள்விகளுக்கு சரியான விடைகள் தெரிந்தும் நீ கூறாவிட்டால் உன் தலை வெடித்துச் சுக்குநூறாகிவிடும்” என்றது.
அதற்கு சிரிசேனா ,”எனக்கும் வேதனையாய் தான் இருக்கிறது..ஆனால் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை.நான் சொன்ன எதை செய்திருக்கிறேன்.புத்தளத்தில் மக்கள் புரட்சி வேண்டும் என்றால் வெடித்துக் கொள்ளட்டும்..அப்போது நான் மேடையேறி மக்கள் சார்பாய் பேசுகிறேன்.இப்போதைக்கு என்னைவிட்டு விடு”.சிரிசேனாவின் சரியான பதிலால் அவர் மெளனம் கலையவே வேதாளம் மீண்டும் பறந்து சென்று மத்தியவங்கியின் மதில் மேல் ஏறிக் கொண்டது.
-Zafar Ahmed-
0 Comments