2017 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கைரீதியில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய மாத்தறை, சுஜாதா வித்தியாலயம் மற்றும் மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் மாணவ மாணவியர் நேற்று (09) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தனர்.
இதன்போது மாணவர்களின் திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், அவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அவர்களது எதிர்கால கல்வி நடவடிக்கைகள் வெற்றியடையவும் ஆசீர்வாதம் வழங்கினார்.
மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தில் இம்முறை க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்ற திலினி சந்துனிக்கா பலிஹக்கார, வர்த்தக பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்ற எஸ்.ஏ. துலானி ரசந்திக்கா, கலைப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் நான்காம் இடத்தைப் பெற்ற உசினி ஷிஹாரா சூரியஆரச்சி ஆகிய மாணவிகளும் மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப்பெற்ற பாரமி பிரசாதி ரன்சிறினி ஹெட்டியாரச்சி மற்றும் உயிரியல் தொழில்நுட்ப பாடப் பிரிவில் மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற பி.ஏ. ஹசித் புன்சர ஆகியோரும் இன்று ஜனாதிபதியை சந்தித்தனர்.
இதன்போது ஜனாதிபதி அவர்கள், மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கினார்.
குறித்த பாடசாலைகளில் சேவையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்களின் சேவையையும் ஜனாதிபதி அவர்கள் பாராட்டினார்.
அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மற்றும் குறித்த மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட குழுவினரும் இதன்போது வருகை தந்திருந்தனர்.
0 Comments