இந்த சமூகத்தின் உளவியலில் தாழ்வு மனப்பான்மை எல்லா மட்டங்களிலும் திணிக்கப்பட்டுள்ளது.
அரசியல், சிவில், சன்மார்க்க மற்றும் அறிவுசார் தலைமைகள் ஒரு சில பிரபலங்களின் ஏகபோகம் என்றும் ஏக காலத்தில் மாத்திரமன்றி பல தலைமுறைகளுக்கு தலைமைத்துவ வெற்றிடம் ஏற்படும் அளவிற்கு ஆழமாக தாழ்வு மனப்பான்மை கட்டமைக்கப் பட்டுள்ளது.
இந்த உளவியல் தடைச் சுவருகளை தகர்த்தெரிந்து கொண்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும், புத்திஜீவிகள் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
ஒவ்வொரு ஊரிலும் மாற்றத்தை விரும்பும், தூர நோக்குடன் சிந்திக்கக் கூடிய 100 இளைஞர்களை இனம் காணுங்கள், பலர் களநிலவரங்கள் கண்டு அதிருப்தியும், விரக்தியும் கொண்டு ஒதுங்கி இருக்கின்றார்கள்.
இன்னும் பலர் எங்கிருந்து, எவ்வாறு ஆரம்பிப்பது என்ற குழப்ப நிலையில் இருக்கின்றார்கள், எல்லோரும் ஏதோ ஒரு நியாயத்தைக் கூறி ஓரமாகி நின்றால் அல்லது வரலாற்றுக் கடமையில் இருந்து தப்பித்துக் கொள்ள நினைத்தால் நிச்சயமாக ஒவ்வொருவரும் நாளை அல்லாஹவிடம் பொறுப்புகூறியே ஆக வேண்டும்.
இந்த வரலாற்றுப் பணியில் சம அந்தஸ்துள்ள முன்னோடிகளாக இணைந்த செயற்பட முன்வாருங்கள், இது உங்கள் யுகம், உங்களிற்கான களம்.
மாற்றம் என்பது வானில் இருந்து வருவதில்லை, வானவர்கள் கொண்டு வருவதுமில்லை. ஒவ்வொரு ஊரிலும் சிறந்த ஆளுமைகள் இருக்கிறார்கள், அவர்களை இனம் காணுங்கள்.
இறையச்சம், உயர்ந்த குணங்கள், சன்மார்க்க அறிவு, சமூக உணர்வு, கல்வியறிவு, அரசியல் ஞானம், பொது அறிவு, சிறந்த தொடர்பாடல் பண்புகள், பேச்சு எழுத்து ஆற்றல் உடைய இளம் தலைவர்கள் உங்கள் மத்தியில் இருக்கிறார்கள்.
அவர்கள் உங்களை தேடி வரும்வரை காத்திராது நீங்கள் அவர்களை இனம் கண்டு அரங்கிற்கு அழைத்து வாருங்கள்.
ஒவ்வொரு தலை முறையினரும் நூதனமான புதுப்புது சவால்களிற்கு முகம் கொடுக்க வேண்டும் என்பது இறைநியதி, சவால்கள் கண்டு விரண்டோடும் ஒரு உம்மத்து அல்ல நாங்கள், ஒன்று பட்டால் சவால்கள் யாவும் சந்தர்பங்களாக மாறிவிடும் இன்ஷா அல்லாஹ்.
இஸ்லாத்தை தவிர முஸ்லிம்களுக்கு விமோசனம் தர வல்ல மார்க்கம் வேறு ஒன்றும் இல்லை.
அடுப்பங்கரை முதல் அரசாட்சி வரை அத்தனை விவகாரங்களும் குரான் ஸுன்னஹ்வின் வெளிச்சத்தில் இருந்தால் மாத்திரமே முஸ்லிம்கள் வெற்றிபெற முடியும்.
தனி மனிதர்களோ குழுக்களோ தமது தலைகளில் தான் சமுதாயத்தின் தலையெழுத்து தீர்மானிக்கப் படுகின்றது என்று நினைத்தாலோ அல்லது மக்கள் அவ்வாறு குருட்டு நம்பிக்கை வைத்தலோ கைசேதமே, நாங்கள் வழி தவறிபோவோம்.
நூஹு (அலை) அவர்களது சமூகத்தினர் : நீர் எங்களை போன்ற மனிதர் தான், உம்மோடு இருப்பவர்கள் எங்களில் மிகவும் சாமானியர்கள், அவர்கள் சாதாரணமாக சிந்திப்பவர்கள் தான், நீங்கள் பொய்யர்கள் என நினைக்கிறோம் என்று கூறினர்.
யா நூஹு, நீர் வாதிடுகிறீர், உமது வாதம் அதிகரித்து விட்டது, போதும், நீர் வாக்களித்த வற்றை கொண்டு வாரும் எனக் கேட்டார்கள்.
அதற்கவர்: என்னிடம் அல்லாஹ்வின் கஜானாக்கள் இருப்பதாக நான் சொல்ல வில்லை, எனக்கு மறைவான விடயங்கள் தெரியாது, நான் வானவரும் இல்லை, நீங்கள் குறைத்து மதிப்பிடுவோருக்கு அல்லாஹ் நல்லதை வழங்க மாட்டான் என்றெல்லாம் நான் கூறவில்லை.
ஸுரத் ஹூதில் வரும் இந்த வசனங்களை பாருங்கள், சமூகத்தில் எழுச்சியை கொண்டுவருபவர்கள் சாமானியர்கள் தான், அவர்கள் பெரும் ஞானிகளாகவோ, வானவர்களோ, தீர்க்க தரிசிகளோ, அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரங்கள் கொண்டவர்களோ அல்லர்.
அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் மீதும் ஆழமான விசுவாசம் கொண்டு வழிப்படுவோரை அல்லாஹ் நேர்வழி செலுத்துவான், அவர்கள் மூலம் சமூகத்திற்கும் தேசத்திற்கும் மனித குலத்திற்கும் நன்மையை விமோசனத்தை வழங்குவான்.
இன்று பாமர மக்களின் மனநிலை மாத்திரமன்றி படித்தவர்கள் கூட எழுச்சி மாற்றம் விமோசனம் என்பவை அதிகாரம், செல்வம், செல்வாக்கு படைத்தவர்களிடமிருந்து தான் வர வேண்டும் என எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
பொய்யர்கள், தஜ்ஜால்கள், ஊழல் மோசடி பேர்வழிகள், மது மாது என பஞ்சமா பாதகங்களை செய்வோர், சத்தியத்தை கேடயமாக எடுத்துக் கொண்டு உலகை ஏமாற்றிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டு தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டிருப்பார் பின்னால் சமூகம் சென்று கொண்டிருக்கிறது.
குறிப்பு: இருக்கும் இடத்தில் இருந்து உங்கள் பங்களிப்பை செய்யுங்கள், ஒவ்வொருவரும் தனித்தனியாகவே அழைக்கப்படுவோம், விசாரிக்கப்படுவோம்.
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
0 Comments