Subscribe Us

header ads

கல்முனை நகர அபிவிருத்தியும் 1000 மில்லியன் பணமும்.


கல்முனை, சம்மாந்துறை நகர அபிவிருத்திக்கு இவ்வருடம் 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஹக்கீம் அவர்கள் தெரிவித்திருந்த செய்தியொன்று இன்றைய ஊடகங்களில் முக்கிய இடத்தை பிடித்திருந்தது.
ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் எதிர்கொள்ளும் மிக முக்கியமானதும், சவால் நிறைந்ததுமான காலப்பகுதிகளில் இவ்வாறான ''பெரும் பொய்கள்'' கட்சித்தலைவராலோ அல்லது அதன் பாராளுமன்ற உறுப்பினர்களாலோ அவிழ்த்து விடப்படுவது இதுவொன்றும் முதல் முறையல்ல இதற்கு முதலும் இவ்வாறான ''பெரும் பொய்கள்'' கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன என்பதற்கு வரலாறு சாட்சி.
ஹக்கீம் தலைமையேற்ற காலம் தொட்டு இற்றை வரைக்கும் அம்பாறை மாவட்டத்திலுள்ள எந்தவொரு ஊரும் ஒரு இஞ் சரி வளர்ச்சியடைந்ததாக சரித்திரமில்லை ஆனால் அது 
இருந்த நிலையில் இருந்து பல கிலோமீற்றர்கள் பின்னோக்கி சென்றுள்ளதை அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநித்துவ படுத்தும் தொகுதிகளில் காணலாம்.

இது ஒரு புறமிருக்க கடந்த காலங்களில் கல்முனை நகர அபிவிருத்திக்காக முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் அவரது குழுவினரும் ஒதுக்கிய நிதியொதுக்கீடுகளையும் நாம் சற்று பின்னோக்கி பார்ப்பது சாலவும் சிறந்தது.
25 - 09 - 2015 : அன்று கல்முனை மாநகர சபை கட்டிடத்தில் ஹக்கீமின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில், 2016 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் கல்முனையின் நகர அபிவிருத்திக்காக பெருமளவு நிதி ஒதுக்கப்படவிருப்பதாகவும் இதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடன்பட்டிருப்பதாகவும் ஹக்கீம் கூறியிருந்தார், 800 ஏக்கர் காணி பெறப்பட்டு புதிய நகரம் உருவாக்கப்பட போவதாக நிசாம் காரியப்பர் கூறியிருந்தார், இந்த கூட்டத்தில் ஹரீஸ், மன்சூர், அலிசாஹிர் மெளலானா, ஆரிப் சம்சுதீன், கல்முனை பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ. மஜீத், மாநகர ஆணையாளர் ஜே. லியாகத் அலி ஆகியோர் பங்கேற்றிருந்தனர், இந்த அபிவிருத்திக்கு இதுவரையிலும் என்ன ஆனது என்று தெரிந்தவர்கள் யாருமிருந்தால் கூறலாம்.
13 - 05 - 2016 : கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் ஹரீசின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் வரவு செலவுத்திட்டத்தில் கல்முனையின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி பிரயோசனமான முறையில் செலவு படவிருப்பதாக கூறியிருந்தார், இரண்டு வருடங்கள் அண்மிக்கும் நிலையில் அந்த நிதி எங்கு பிரயோசனமான முறையில் செலவு செய்யப்பட்டது என்பதை தெரிந்தவர்கள் கூறலாம்.
01 - 07 - 2016 : வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 40 கோடி ரூபாய் கல்முனை அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டதாக நிஷாம் காரியப்பர் தெரிவித்திருந்தார் அந்த நிதி எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை தெரிந்தவர்கள் கூறலாம்.
16 - 07 - 2016 : மீண்டும் இரண்டாம் கட்டமாக கல்முனை மற்றும் அதனை அண்டிய ஊர்களின் அபிவிருத்திக்காக மேலும் 50 கோடி ஹக்கீமினால் ஒதுக்கப்பட்டுள்ளது என நிசாம் காரியப்பர் தெரிவித்திருந்தார், அத்துடன் மேலும் 60 கோடி ஒதுக்கப்படவிருப்பதாகவும் கூறியிருந்தார்.
கடந்த காலங்களில் கல்முனையின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளுக்கு என்ன நடந்தது அது எவ்வாறு செலவிடப்பட்டது, இந்த நிதிகளின் ஒதுக்கீடு மூலமாக கல்முனை மாநகரம் எவ்வாறான வளர்ச்சிகளையும் அபிவிருத்திகளையும் கண்டிருக்கின்றது என்கின்ற ஒரு விபரமும் தெரியாத நிலையில் மீண்டும் ஹக்கீம் அவர்களினால் 1000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் எவ்வாறு நம்ப முடியும் ?
கரையோர மாவட்டத்தின் தலைநகரம் என்று வர்ணிக்கப்படும் ஒரு நகரம் சீரழிந்து போய் கிடப்பதை அங்கு சென்று நோக்கும் எவரொருவரும் கண்கூடாக கண்டு கொள்ளலாம்.
இந்த 1000 மில்லியன் நிதியொதுக்கீடு என்பதும் கல்முனை மாநகரத்தின் அபிவிருத்தி என்பதும் பிச்சைக்காரன் பழைய புண்ணை கிண்டி மீண்டும் பிச்சையெடுப்பதற்கு ஒப்பான ஒரு செயல் என்பதை அறிவுள்ள எவரும் உணர்ந்து கொள்ள முடியும்.
அம்பாறை மாவட்டத்தின் உள்ளூராட்சி தேர்தல் நிலைமை முஸ்லீம் காங்கிரசினருக்கு எதிராக செல்வதை உணர்ந்த ஹக்கீம் தூண்டிலில் அபிவிருத்தி எனும் புழுவை போட்டு வெற்றி எனும் மீனை பிடிக்க வகுக்கும் திட்டமே அதுவன்றி வேறு எதற்கும் இல்லை. அம்பாறை மாவட்ட மக்களுக்கு ஹக்கீம் வழங்கும் வாக்குறுதிகள் காற்றில் பறக்கும் ஒரு கடதாசி போன்றது என்பதை தென்னிலங்கையில் வாழும் ஒருவரிடம் கேட்டாலும் அவர் சொல்வார்.
ஆயிரம் மில்லியனின் கதையை இன்னும் மக்கள் நம்ப தயாராக இல்லை ஹக்கீமே வேறு புதிதாக ஏதுமிருந்தால் சுவாரசியமாக அவிழ்த்து விடுங்கள்.

-Razana Manaf-

Post a Comment

0 Comments