முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
எந்தவொரு அரசியல் கட்சியும்
தேர்தல் ஒன்றில் போட்டியிடும்பொழுது அதிகமான ஆசனங்களை எவ்வாறு பெற்றுக்கொள்ள
முடியும் என்றரீதியில் கட்சியின் நலனை முன்னிறுத்தி அதற்கேற்றால்போல் வியூகங்களை
வகுத்துக்கொள்வது வழமையாகும்.
அந்தவகையில் முஸ்லிம்
காங்கிரஸ் கட்சியானது நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலில்
நாடுதழுவியரீதியில் தனித்தும் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டுச்சேர்ந்தும்,
வேறு சின்னங்களிலும் போட்டியிடுகின்றது.
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற
தேர்தலில் கல்முனை மாநகரசபையில் முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு போட்டியிடுவது என்பது
பற்றி ஆராயும் பொருட்டு கடந்த திங்கள் கிழமை (18.12.2017) தாருஸ்ஸலாமில்
கல்முனை தொகுதியில் உள்ள கட்சியின் முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டு மசூரா
அடிப்படையில் கலந்தாலோசனை செய்யப்பட்டது.
அந்த கூட்டத்தில் தலைவர்
ரவுப் ஹக்கீம் அவர்கள் “முஸ்லிம்களின் தலைநகரமாக பார்க்கப்படுகின்ற பிரதேசம்
என்பதனாலும், தலைவர் அஸ்ரப் அவர்களின் ஊர் என்பதனாலும் கல்முனை மாநகரசபையில்
தனித்து எமது கட்சியின் மரச்சின்னத்தில் போட்டியிடுவது சிறந்தது” என்ற கருத்தை
முன்மொளிந்துவிட்டு கூட்டத்திற்கு வருகை தந்தவர்களிடம் கருத்து கோரினார்.
அதில் ஒவ்வொரு
பிரமுகர்களும் ஒவ்வொரு கருத்துக்களை கூறியதுடன், அதற்கான நியாயமான காரணங்களையும்
குறிப்பிட்டார்கள். அந்தவகையில் பெரும்பாலான உறுப்பினர்கள், அதாவது எண்பது சதவீதமானவர்கள்
ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடுவதே சிறந்தது என்றும் அதற்கான
விளக்கத்தினையும் கூறினார்கள்.
இறுதியில் பெரும்பாலான உறுப்பினர்களின்
விருப்பத்துக்கு கட்டுப்பட்டு ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில்
போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
விடயம் அவ்வாறு
இருக்கும்போது உண்மையை திரிவுபடுத்தி ரவுப் ஹக்கீம் அவர்கள் ரணிலிடம் கட்சியை அடகு
வைத்துவிட்டார் என்றும், முஸ்லிம் காங்கிரஸ் தனித்துவத்தினை இழந்துவிட்டது என்றும்
போலிப்பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.
ஏதோ முஸ்லிம் காங்கிரஸ்
மீது தங்களுக்கு அளவுகடந்த அன்பு இருப்பது போன்று தலைவரை மட்டும் இலக்குவைத்து
விமர்சனம் செய்கின்ற எவரும் முஸ்லிம் காங்கிரஸ் காரர்கள் அல்ல.
முஸ்லிம் காங்கிரஸ் ஒரு
ஜனநாயக கட்சி என்ற ரீதியில் எந்தவொரு தீர்மானத்தினை மேற்கொள்வதாக இருந்தாலும்
கட்சி பிரமுகர்களையும், மாவட்ட குழுக்களையும், அதியுயர்பீட உறுப்பினர்களையும்
கலந்தாலோசித்த பின்பே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.
எனவே ஊடகங்களில்
கூறுவதுபோன்று தலைவர் மட்டும் தனித்தே தீர்மானங்களை மேற்கொள்ளுகின்றார் என்பது காழ்ப்புணர்ச்சி
காரணமாக தலைமைத்துவத்தின் மீது சேறுபூசும் நோக்கில் திட்டமிட்டு
மேற்கொள்ளப்படுகின்ற பொய்ப் பிரச்சாரமாகும்.
0 Comments