யுக முடிவின் அடையாளங்கள் தெரிகின்றன, தஜ்ஜாலின் வருகை அண்மிப்பதனை உலகில் மிகைத்துவிட்ட அராஜகங்கள் அக்கிரமங்கள், கோலோச்சும் போலிகள் உணர்த்துகின்றன.
எனக்கும் எனது மனைவி மக்களுக்கும் சந்ததிகளுக்கும் சொல்லுகின்ற வஸிய்யத்துக்களையே உங்களுக்கும் சொல்லுகின்றேன்.
படைத்த றப்புடன் நெருக்கமாக இருங்கள். (தொழுகை, குரான், திக்ரு) எங்கிருந்தாலும் எல்லா நிலையிலும் அவனை அஞ்சி தக்வாவுடன் வாழுங்கள்.
ரஸுலுல்லாஹ் (ஸல்) மீது அன்பு காட்டுங்கள் ஸலவாத் சொல்லுங்கள், அஹலுல் பைத்களை ஸஹாபாக்களை நேசியுங்கள், நபி வழி நடவுங்கள்.
பெற்றவர்கள் மீது அன்பு காட்டி பணிவிடை செய்யுங்கள், பெற்றார் திருப்தியில் அல்லாஹ்வின் திருப்தி இருக்கிறது, அவர்களது கோபத்தில் அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது.
மனைவி மக்களிற்கு சிறந்தவர்களாக இருங்கள். உறவுகளை உடன் பிறப்புக்களை, அண்டை அயலவரை சேர்ந்து வாழுங்கள். நீண்ட ஆயுளும், இரண விஸ்தீரணமும் கிடைக்கும்.
தேவையுடையாருக்கு கை கொடுங்கள் சதகா செய்யுங்கள். அல்லாஹ் உங்கள் துணைக்கு இருக்கின்றான். எந்தவொரு சிறிய நற் செயலையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.
உண்மை நீதி நேர்மை அமானிதம் பேணி தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும் நடந்து கொள்ளுங்கள்.
உயரிய குணங்கள் பண்பாடுகள், பொறுமை, நிதானம், பெரும் தன்மைகள் எப்பொழுதும் உங்கள் அணிகலன்களாக இருக்கட்டும்.
பெருமை, பொறாமை, பேராசை, அகங்காரம், கருமித்தனம், சுயநலம், கோழைதனம் போன்ற பலவீனங்களில் இருந்து உள்ளத்தை தூய்மையாக வைத்திருங்கள், எண்ணங்கள் போன்றே வாழ்வு அமைகிறது.
அறிந்தவர் அறியாதார் மீதும் ஸலாம் சொல்லுங்கள். முஸ்லிம் அல்லாதோருக்கும் வாழ்த்து சொல்லுங்கள், மனித நேய உதவிகளை செய்யுங்கள். மலர்ந்த முகத்துடன் அடுத்தவரை சந்தியுங்கள்.
கற்பு நெறி பேணுங்கள், அது பெண்களுக்கு மாத்திரம் உரியதல்ல.
பேசினால் நல்லதை பேசுங்கள் அல்லது வாய் மூடி இருங்கள். கோல் புறம், கேலி செய்தல் என்பவற்றை தவிர்ந்து கொள்ளுங்கள், வாதப் பிரதிவாதங்களை, குதர்க்க வாதங்களை விதண்டா வாதங்களை தவிர்ந்து கொள்ளுங்கள், எங்கள் நீதி நியாயங்களை, மனச்சாட்சிகளை, நியாயப்படுத்தல்களை, நோக்கங்களை அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
நல்லவற்றிற்கு தூண்டுதலாகவும், தீயவற்றை தடுப்பவர்களாகவு இருந்து கொள்ளுங்கள், குறிப்பாக சமூக ஊடகங்களில் எமது பதிவுகளும் பகிர்வுகளும், அங்கீகாரங்களும், ஊக்குவிப்புக்களும் எமது ஈருலக வாழ்விலும் எம்மை தொடர்கின்றன என்பதை மனதில் கொள்ளுங்கள்.
பெரியவர்களை, உலமாக்களை, ஆசான்களை மதித்து கண்ணியம் செலுத்துங்கள் சிறியோர் மீது அன்பு காட்டுங்கள், இயன்றவரை பொதுப் பணிகளில் ஈடுபாடு காட்டுங்கள், குடும்பம், ஊர்மக்கள், சமூகம், தேசம் என உங்கள் கடமைகளை இனம் கண்டு இயன்றதை மாத்திரமல்ல செய்ய வேண்டிவற்றை ஆர்வத்துடன் செய்யுங்கள், நாங்கள் சோதிக்கப்பட்டுக் கோண்டிருக்கிறோம்.
ஹலால் ஹாராம் பேணி வாழுங்கள்.
செல்வம் அதிகாரம் செல்வாக்கு பிரபல்யம் போன்ற போலிக் கவர்ச்சிகளுக்கு பின்னால் அள்ளுண்டு சென்று விடாதீர்கள், தஜ்ஜாலும் அவனது பட்டாளங்களும் போலிகளும் பொய்யர்களும் தான்.
ஆழமான இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கே வாழ்வில் உண்மையான தன்னம்பிக்கை இருக்க முடியும், கொடிது கொடிது வறுமை கொடிது, அதனிலும் கொடுமை ஆன்மீக வறுமை.
எங்கிருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள், ஐவேளையும் தொழுகையை உணர்வு பூர்வமாக நிதானமாக திருப்திகரமாக நிறைவேற்றுங்கள்.
எப்போதாவது திருந்தி வாழ்வோம் என்றெண்ணி பொடுபோக்காக இருந்து விடாதீர்கள், தொழுகை எங்களை திருந்தி வாழச் செய்யும், குறை குற்றங்களுக்கு மன்னிப்புத் தேடிக் கொள்ளுங்கள்.
இன்றைய பொழுது புலர்ந்திருக்கிறது, நாளைய பொழுது உத்தரவாதமற்றது, யார் எங்கு எப்போது எப்படி எந்ந நிலையில் அல்லாஹ்விடம் அழைக்கப்படுவோம் என்பதை நாம் அறியோம்.
சுபஹு தொழாமல் இன்றைய நாளை துவங்கி விடாதீர்கள், ஸுபஹு தொழாத பொழுதுகள் விடிவதில்லை; எமது தொழுகையும், எமது ஒதலும், எமது நற்கருமங்களும், எமது பண்பாடுகளும் எமது மறுமை வாழ்வை மாத்திரமன்றி இன்மை வாழ்வையும் வசந்தமாக்குகின்றன, நாம் விட்டுச் செல்லும் சந்ததிகள் வாழ்வில் வளம் சேர்கின்றன.
அல்லாஹ் அல்லாத எவராலும் எதனாலும் எமது ஈருலக வாழ்வு குறித்த எந்த உத்தரவாதத்தையும் தரவே முடியாது, உலகமே ஒன்று சேர்ந்தாலும் அவன் தர நாடியதை தடுத்துவிடவோ, தடுத்துவிட்டதை தந்து விடவோ முடியாது.
யா அல்லாஹ் எங்கள் பாவங்களை, குற்றம் குறைகளை மன்னித்து உன்னை தொழுது வழிபட்டு நல்லடியார்களாக வாழ எமக்கும் எமது அன்பிற்குரியோர் அனைவருக்கும் அருள் புரிவாயாக.
யா அல்லாஹ், எங்கள் பெற்றார்கள் உடன்பிறப்புக்கள், மனைவி மக்கள், உற்றார் உறவுகள் அனைவர் பாவங்களையும் மன்னித்து கருணை கொண்டு ஈருலக ஈடேற்றத்தையும் சௌபாக்யங்களையும், சம்பத்துக்களையும் அருள்வாயாக.
உங்கள் பெறுமதியான துஆக்களில் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இனிய மார்க்கம் காட்டித் தரும் அழகிய வாழ்வு நெறி.. எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவர்க்கும் கிருபை செய்வானாக..
(உடனடியாகவே ஒரு நல்ல காரியத்தை செய்து இன்றைய பொழுதுகளை நன்மைகள் நிறைந்த பொழுதுகளாக்குவோம்..SHARE பண்ணுங்கள்..)
-Inamullah Maihudeen-
0 Comments