Subscribe Us

header ads

மாகாண சபை தேர்தல் முறை மாற்றம், ஹக்கீம் மற்றும் ஏனையோரின் நிலை ( இஸ்லாமிய பார்வையில் ) ?


சில நேரங்களில் தவறான விடயங்களை செய்வதுண்டு. அதனை தவறென ஏற்றுக்கொள்வதென்பது மிக முக்கியமானது. மாகாண சபை தேர்தல் திருத்த சட்டத்தை பொறுத்தமட்டில் அனைவரும் அறிந்து கொண்டே பிழையை செய்துள்ளனர் என்பதில் எந்த வித சிறு ஐயமுமில்லை.

4.17 “எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடுகிறார்களோ அவர்களுக்குத் தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். “

மேலுள்ள குர்ஆன் வசனமானது ஒருவர் அறிந்துகொண்டு தீமை ஒன்றை செய்தால் அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்ற வகையில் அமைந்துள்ளது.அமைச்சர் ஹக்கீம் இது பிழையல்ல எனக் கருதி வாக்களித்து, இது பிழையானதாக எப்போது கருதுகிறாரோ அப்போது  பாவ மீட்சி செய்துகொள்வதன் மூலம் அல்லாஹ்விடத்தில் மீண்டு கொள்ள வாய்ப்புள்ளது.இது பற்றி அவர் தெளிவற்றவராக இருந்திருந்தால் அவர் வாக்களிக்காமல் இருந்திருக்க வேண்டும் என்ற விடயமும்உள்ளது.ஒருசமூகத் தலைவன் எடுத்தோம் பிடித்தோம் என செயற்படவும் முடியாது. இஸ்லாமிய மஷூர வழி காட்டல் இங்கு செயற்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.அனைத்து செயற்பாடுகளையும் உள்ளத்தில் உள்ள எண்ணத்தை கொண்டே அல்லாஹ் கணக்கிடுவான்.

அறிந்து கொண்டு வாக்களித்தவர்களின் நிலை பற்றி அல்லாஹ்வே தீர்மானிப்பான். அமைச்சர் றிஷாத் தனது ஆதரவின்றி பெரும் பான்மை உறுதி செய்த பின்பே தான் ஆதரவளித்ததாக கூறியுள்ளார். இவரின் கூற்றின் அடிப்படையில் சிந்தனையை உட்படுத்தி நோக்குகையில் இது ஒரு சிறந்த அணுகுமுறை. இருந்த போதிலும் இஸ்லாத்தின் அடிப்படையில் அது மிகத் தவறானது. ஒரு பாவம் நிகழும் போதும் எமக்கு முடியுமானளவு எதிர்க்க வேண்டும். அதன் இறுதி நிலை மனதால் வெறுத்தலாகும். இஸ்லாமிய அடிப்படையில் இந்த சிந்தனை ரீதியான அணுகு முறை தவறானதாக தோன்றுகிறது. இங்கும் ஒரு நியாயப்பாடுள்ளதால் அனைத்து செயற்பாடுகளையும் உள்ளத்தில் உள்ள எண்ணத்தை கொண்டே அல்லாஹ் கணக்கிடுவான் என்பதைநினைவூட்டிக்கொள்வதுபொருத்தமானது.

இவர்கள் செய்துள்ள தவறானது மனிதனுடன் சம்பந்தப்படும் ( ஹுகூகுல் இபாத் ) தவறு என்பதால் அதனை இலங்கை மக்கள் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்ற வகையிலும் நோக்க கடமைப்பட்டுள்ளோம். இது இலங்கை மக்களை சந்ததி சந்ததியாக பாதிக்கும் என்பதால் இச் சட்டம் மீளமாற்றம்படும் வரை உள்ள(இதற்குபல நூற்றாண்டுகள் கூட எடுக்கலாம்) எதிர்கால சந்ததிகள் கூட இவர்களை மன்னிக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளது (இது பிழையாக இருப்பின்). இது சாத்தியமற்ற விடயம். எனவே, இப் பாவத்திலிருந்து மீண்டுகொள்ள எதிர்காலத்தில் முஸ்லிம் கட்சிகள் தங்களுக்கு கிடைக்கக்கூடிய பேரம் பேசுதல் சக்திகளை கொண்டு இச் சட்டத்தை மீள வரைவதை தவிர வேறு வழி இல்லை எனலாம். இந்த வகையிலான முயற்சிகளை மேற்கொள்ள இன்றுள்ள எந்த அரசியல் வாதியும் முயன்றதாக தெரியவில்லை. வெறும் உணர்ச்சியூட்டும் பேச்சுக்களே முஸ்லிம்அரசியலை ஆண்டு கொண்டிருக்கின்றது. இது முஸ்லிம்களுடைய தனிப்பட்டதேவையாக மாற்றப்படாமல் மிகக் கவனமாக மாற்ற முயற்சிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மொரக்கொட ஆணைக்குழுவினால் முன் வைக்கப்பட்ட கரையோர மாவட்ட ஆலோசனை இன்று முஸ்லிம்களின் தேவையாக இனவாதிகளிடத்தில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளமை போன்று ஆகிவிடக் கூடாது.

இதற்கு ஆதரவளித்த பலரும் அமைச்சர் மனோ கணேசன் ( பாதகங்களை குறைத்துள்ளோம் என்றே இவர் கூறியுள்ளார். இதன் மறு வடிவம் பாதகங்கள் உள்ளது என்பதாகும். ) மற்றும்அமைச்சர்ஹக்கீம் தலைமையிலான மு.காவின் பிரதி தலைவர் ஹரீஸ் உட்பட அனைவரும்  பிழையென ஏற்றுக்கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கலந்துரையாடியே அன்று இதிலிருந்த பாதகங்களை ஓரளவு குறைக்க முயன்றதாக கூறுகின்றனர்.மு.காவின் பிரதி தலைவர் ஹரீஸ் அன்று ஹக்கீமோடு பூரணமாக நின்றவர்களில் ஒருவராகும்.இவ்வாறான நிலையில் அமைச்சர் ஹக்கீம் மாத்திரம் இதில் பெரிதும் முஸ்லிம்களுக்கு பாதகமில்லை என கூறுவதானது மக்களை ஏமாற்ற முனைகின்றாரா என்ற வினாவையே எழுப்புகின்றது.

அறிந்து கொண்டு பாவம் செய்வோருக்கு அல்லாஹ் மன்னிப்பு இல்லை என்ற போதிலும் அவனிடம் கெஞ்சி கூத்தாடுவதை தவிர வேறு வழி இல்லை. மனம் வருந்துவோர் இலங்கை மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோருவதன் மூலம் தங்கள் பவங்களை ஓரளவு குறைத்து கொள்ள முடியும். சமூதயாகத் தலைவர்களின் ஒவ்வொரு செயற்பாடுகளும் மிக அவதானமாக இருத்தல் வேண்டும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.

Post a Comment

0 Comments