Subscribe Us

header ads

மொஹமட் நிஷோஸின் (த ஹிஸ்ட்ரி ஒப் பேக் ஐடி) கவிதை தொகுப்பு.


Mohamed Nizous


கழிவறையில் தொடங்குகிறது
இந்தக்
கன்றாவி வரலாறு.
பப்ளிக் கழிவறையுள்
பக்கம் பார்த்து நுழைந்து
கதவைப் பூட்டி
கரித் துண்டெடுத்து
மரைக்காரு பள்ளியில்
சிரைக்காரா என்று
மார்ஜினும் இன்றி
மண்ணாங்கட்டியும் இன்றி
பிழையான எழுத்துக்களில்
பெரிதாக எழுதியபின்
கரி முடிஞ்சு போக
கல் துண்டு ஒன்றெடுத்து
குத்துக் கத்தி படமொன்றை
கோடு நெளிஞ்சு கீறி
'உளக புறட்சி இயக்காம்' என
ஓரத்தில் எழுதி
உள்ளிருந்து வெளி வரு முன்
ஓட்டையால் பார்த்து
யாரும் இல்லையென
ஏழுதரம் உறுதி செய்து
வெளியே வந்து
வியர்வையைத் துடைத்ததில்
பேக் ஐடி வரலாறு
பிறந்தது அன்று.

பரிணாம வளர்ச்சியில்
பப்ளிக் கழிவறையில்
உருவான பேக் ஐடி
ஓரளவு வளர்ந்தது.
ரோணியோ இயந்திரங்களால்
ஆணியைப் புடுங்க என
விலை குறைந்த பேப்பரில்
தலையங்கம் பெரிதாயிட்டு
ஹாஜியார்மார்க்கெதிராய்
ராஜியம் தொடங்கியது.
வெள்ளிக் கிழமை
பள்ளிக்குள் தொழும் போது
வீரம் கொண்ட ஐடி
ஓரமான இடமொன்றில்
கட்டு நோட்டீஸை
இட்டு விட்டு செல்லும்.
எல்லா நோட்டிசும்
இறுதி வரியில்
'வோம்' என்றே முடியும்.
ஆம் அது ஏனென்றால்
பன்மையில் போட்டால்தான்
பயப்படுவாங்களாம்.
வெள்ளி தொழுதிட்டு
வீடு போய் உண்ணக்க
முட்டைப் பொரியல் ஒற்ற,
கட்டு நோட்ஸ் பயன் படும்.

அக்காலம் சென்று
ஐடி காலம் உருவாக
சிக்கலான பேக் ஐடி
சிலிர்த்து வெடித்திருக்கு.
உண்மையில் நன்மை செய்ய
உருவாகும் ஐடீக்கள்
கண்மூடித் தனமாக
கம்பு சுற்றும் ஐடீக்கள்
தன்னுடைய எதிரியினை
தரம் தாழ்த்தும் ஐடீக்கள்
அடுத்தவன் மானத்தை
கெடுத்து விடும் ஐடீக்கள்
சிறு பாவம் தடுப்பதற்காய்
பெரும் பாவ ஐடீக்கள்
ஒரு ஹறாத்தை தடுக்க
மறு ஹறாத்தை செய்கின்ற
பேக் ஐடி பல இன்று
பேஷ் புக்கில் வருகிறது.

இந்த ஐடீக்களால்
இத்தனை காலத்துள்
எத்தனை நன்மைகள்
ஏற்பட்டன எனப் பார்த்து
தொடர்வதா இல்லையா என
உடனடியாய் முடிவெடுப்பீர்.
கழிவறைக் கரிமுதல்
கலிகால ஐடி வரை
ஒழிவிலே செய்த புரட்சி
ஓஹோண்ணு பலன் தந்ததாய்
கடந்து போன வரலாற்றில்
காணக் கிடைக்கவில்லை..!

Post a Comment

0 Comments