“கடினமான வேலைகளை செய்து முடிப்பதற்கு ஒரு சோம்பலான மனிதனையே நான் தேடுவேன். ஏனென்றால், அவனால் மட்டுமே அந்த வேலையை செய்துமுடிப்பதற்கு எளிமையான வழியைக் கண்டுபிடிக்க முடியும்” – இப்படிச் சொல்வது உலகின் மிகப்பெரிய பணக்காரர் பில் கேட்ஸ்.
8.30க்கு அம்மா வந்து, “டேய் மணி பாத்தியா? 9 மணிக்கு போகணும் என்றதும்” 30 நிமிடங்களிலேயே எல்லாவற்றையும் முடித்துவிட்டு கல்லூரியிலோ அலுவலகத்திலோ ஆஜர் ஆகிறவர்கள்தான் நம்மில் அதிகம். தன்னை யாராவது வந்து எழுப்பும் வரையிலும் காத்திருக்கும் தன்மை, தனக்கான வேலைகளைக்கூட பிறர் செய்துமுடிக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்கும். இவர்களைத்தான் உலகம் சோம்பேறிகள் என்கிறது.
அனைத்துக்கும் ஒரு தினம் வைத்து கொண்டாடும் இந்த உலகம், சோம்பலை மட்டுமா விட்டு வைக்கும்? உலக சோம்பல் தினம் ஆகஸ்ட் 10-ம் தேதி கொண்டாடப்படுகிறது. சோம்பேறிகளுக்கான தினம் என்பதால் இதையும் அவர்கள் ஆர்பாட்டமாய் கொண்டாடுவதில்லை என்பது வேறு விஷயம்.
சோம்பல் என்பது என்ன?
“சோறு கண்ட இடம் சொர்க்கம்
திண்ண கண்ட இடம் தூக்கம்”
என்பது பழமொழி. சோம்பேறிகள் பொதுவாக சொகுசு வாழ்க்கையை விரும்புபவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் எந்தச் சிந்தனையும் இல்லாமல், தூங்குவதிலேயே பாதி நேரத்தைக் கழிப்பார்கள். கனவு காண்பது இவர்களுக்கு மிகவும் பிடித்தமான வேலை. சோம்பேறித்தனம் என்பது நம் ஆற்றலை மழுங்கடிக்க செய்யும் செயல் என விளக்கம் சொல்கிறார்கள்.
வாரம் முழுவதும் வேலை செய்யும் ஒருவர் ஞாயிற்றுக்கிழமையில் எந்த வேலையும் செய்யாமல் உண்பது, உறங்குவது என வீட்டிலேயே இருந்துவிடுவார். அதையே ஒருவர் தினமும் செய்தால் “தண்டச்சோறு “, “சோம்பேறி” என்ற பெயர் கிடைக்கும்.
ஓடிக்கொண்டிருக்கும் நீர் ஓரிடத்தில் சிறிது நாள்கள் தேங்கிவிட்டால் பாசி பிடித்துவிடும். ஓடும் கடிகாரம் வெகு நாள்களாக வேலை செய்யாவிட்டால் அதனால் பலன் என்ன? ஒரு வேலையை உங்களிடம் சொல்லும்போது, எதுவும் செய்யாமல் எனக்கு அசதியாக இருக்கிறது? எனக்கு இதையெல்லாம் செய்யத் தெரியாது? உடலில் உற்சாகமே இல்லை? என் உடலில் செய்வதற்குரிய சக்தி இல்லை என்று கூறுபவர்களா நீங்கள்? இதுவே வேலை செய்யாமல் இருப்பதற்கு சோம்பல்காரர்கள் சொல்லும் சாக்கு.
சோம்பலை போக்க சில எளிய வழிகள்:
சோம்பல் என்பது ஒரு வியாதியல்ல. சோம்பலை, சில எளிய வழிகளை கடைப்பிடிப்பதன் மூலம் மாற்றிவிடலாம்.
1. உடற்பயிற்சி:
தினமும் காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. இது உடலை சுறுசுறுப்பாக மாற்ற உதவும். (இதெல்லாம் ஒரு வழியாங்க எனக் கேட்க வேண்டாம். சோம்பலை விரட்ட நினைத்தால் செய்துதான் ஆக வேண்டும்)
2.ஊக்கம்:
சோம்பலில் இருந்து விடுபட ஊக்கமளிப்பது போன்ற வசனங்களை சொல்லிக்கொள்ளுங்கள். Never… Ever… give up….
3. ஒரே வேலையை செய்துகொண்டிருப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படும். எனவே, பிடித்தமான விஷயங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். இதனால் மனம் புத்துணர்ச்சி பெறும்.
4.உணவு முறையை மாற்றிக்கொள்ளுங்கள். அதிகப்படியான கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகளை குறைத்துக்கொள்ளுங்கள்.
0 Comments