இராஜினாமா போன்ற ஏமாற்று நாடகங்களால் பொதுமக்களை முட்டாளாக்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் நிதியமைச்சராகவும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சராகவும் இருந்த ரவி கருணாநாயக்க, மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸின் பெர்பெசுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பில் வீடொன்றைக் கொள்வனவு செய்துள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதன் காரணமாக அவர் தனது அமைச்சுப் பதவியில் இருந்தும் கடந்த 10ஆம் திகதி இராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில் ரவி கருணாநாயக்கவின் இராஜினாமா குறித்து முன்னாள் ஜனாதிபதி சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அதனை ஏமாற்று நாடகமாக சித்தரித்துள்ளார்.
அத்துடன் ரவி கருணாநாயக்கவின் விவகாரத்தில் மேலும் பலர் பின்னணியில் மறைந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ள மஹிந்த, பொதுமக்கள் முன்னை விட விழிப்புணர்வு பெற்று விட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் நீதிமன்றங்களிலிருந்து எவரும் தப்பித்து விட முடியாது. அதே போன்று பொதுமக்களும் தற்போது ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டார்கள். அதன் காரணமாக பொதுமக்களை ஏமாற்ற முடியாது என்றும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
0 Comments