ஒட்டகங்கள் நுழைந்த கூடாரங்களை போல இவர்கள் நுழைந்த பிரதேசங்கள் எல்லாம் சின்னா பின்னமாகி சிதறிக்கிடக்கும் நிலையில் வெட்கம் இல்லாமல் கண்ணியம் பற்றி பேசுகிறார்கள். இவர்கள் ஆட்சி செலுத்திய பகுதிகளில் பொதுமக்கள் உயிர்களையும் உடமைகளையும் இழந்ததும், எதிர்கால சொத்துக்களான குழந்தைகள் வருடக்கணக்கில் கல்வி இன்றி, போஷாக்கு இன்றி வளர்ந்ததும், பெற்றோர்களை இழந்து அனாதைகளாக நடுத்தெருவில் விடப்பட்டதும், சமூகத்தில் விதவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதும், தொடர்ந்து நடைபெறும் வன்முறைகளால் லட்சக்கனக்கனக்கான மக்கள் உளவியல் ரீதிரியில் பாதிக்கப்பட்டு நடைபிணங்களாகவும் ஒருவேளை உணவுக்கு இன்னொருவருவரை எதிர்பார்த்து அலைந்து திரிவதும்தான் மூன்று வருட ஆட்சியில் சிரியாவிலும், ஈராக்கிலும் லிபியாவிலும் ஏற்படுத்திய கண்ணியம்.
#லிபியாவில் சிர்த்தே நகரத்தில் கூடாரம் அடித்த கருங்குஞ்சிகள் மக்களை பணய கைதிகளாக வைத்துக்கொண்டு செய்த இறுதி யுத்தத்தில் ஒட்டுமொத்த நகரமும், ஆயிரக்கணக்கான மக்களும் மடிந்து போனார்கள். மக்களை காவு கொடுத்துவிட்டு எஞ்சிய கருங்குஞ்சிகள் மத்தியதரை கடல் வழியாக தப்பியோடினார்கள்.
#சிரியாவில் இந்த வருட இறுதியில் ஐஸ்ஐஸுக்கு எதிரான இறுதி யுத்தம் தாயிஸ் சூர் மாகாணத்தில் (கருங்குஞ்சிகளின் மொழியில் விலாயத் ஹைர்) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மேற்கு சிரியாவில் லெபனான் எல்லையில் இறுதியாக எஞ்சியிருந்த தமது கட்டுப்பாட்டு பகுதிகளை மூன்று நாட்களுக்கு முன்னாள் சிரியா இராணுவத்திடமும் ஹிஸ்புல்லாவிடமும் பறிகொடுத்துவிட்டு அத்தனை பெரும் ஹிஸ்புல்லாவிடம் சரணடைந்தார்கள். (பஸ் வண்டிக்குள் இவர்கள் இருக்கும் படங்கள்). அங்கு வாழ்ந்த மக்களின் கண்ணியத்திற்கு என்னவாயிற்று ??
மக்கள் மலைகள் காடுகள் என்று அலைந்து திரிகிறார்கள். அலேப்போவை கடந்த வருடம் சிரியா போராளிகள் கையளித்துவிட்டு இத்லீப் பகுதிகளுக்கு நகர்ந்த போது நாங்களாக இருந்திருந்தால் சரணடைந்து இருக்க மாட்டோம் என்று வீரவசனம் பேசியவர்கள் இவர்கள்.
மோசுல் கைப்பற்றப்பட்ட பின்னர், #ஈராக்கில் கருங்குஞ்சிகள் வசம் எஞ்சியிருந்த ஒரேயொரு நகரப்பகுதி (Urban terrain) தல் அபார் எனும் சிறியதொரு நகரமாகும். இதற்கு மேலதிகமாக கிர்குக் நகரத்திற்கு அருகாமையில் சில கிராமங்களும், சிரியா -ஈராக் எல்லையில் சில பாலைவன பகுதிகளும் இவர்கள் வசம் ஈராக்கில் எஞ்சியிருந்தது.
ஐஸ்ஐஸின் முக்கிய தளபதிகள் இந்த ஊரை பிறப்பிடமாக கொண்டவர்கள் என்பதால், 2014 ஆம் ஆண்டு மோசுல் நகரத்தை கைப்பற்ற முன்னரே தல்அபார் நகரத்தை கருங்குஞ்சிகள் கைப்பற்றி இருந்தார்கள். மோசுளில் இருந்து தப்பியோடிய பல வெளிநாட்டு ஐஸ்ஐஸ் உறுப்பினர்கள் இந்த நகரத்திலேயே தங்கியிருந்தார்கள். இந்த நிலையில் மொசுளுக்கு பிறகு கடந்தவாரம் இந்த நகரத்தை கைப்பற்ற ஈராக்கிய இராணுவம் இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. மூத்த தளபதிகளின் ஊர், வெளிநாட்டு உறுப்பினர்கள் இருந்ததால், தல் அபாருக்காக கடுமையான சண்டைகள் நடக்கும் என்றே பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் வெறும் ஐந்து நாட்களில் பெரியளவு சண்டைகள் எதுவும் இன்றி தல் அபார் ஈராக்கிய இராணுவ வசம் வந்தது.
உள்ளேயிருந்த ஆயுததாரிகள் எங்கே என்று எல்லோரும் தேடிக்கொண்டிருந்த போது, மூத்த போராளியாவது மண்ணாங்கட்டியாவது என்று பெருமளவான ஐஸ்ஐஸ் உறுப்பினர்கள் குர்திய படைகளிடம் சென்று சரணடைந்து இருக்கிறார்கள். (வரிசையாக நிற்கும் படங்கள்). தல் அபாரில் இருந்த மக்களுக்கு என்ன நடந்தது?? காடுகள் மேடுகள், பள்ளத்தாக்குகள் என்று சுட்டெரிக்கும் வெயிலில் பிள்ளை குட்டிகளோடு அலைந்து திரிகிறார்கள்.
உலகெங்கும் முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் இல்லாமல் இல்லை, அதேநேரம் பிணங்களின் மேல் ஏறி கூத்தாடும் கருங்குஞ்சிகள் பிரச்சினைகளுக்கு தீர்வில்லை. உணர்ச்சிகள் ஊட்டி ஒரு பிரச்சினையை ஓராயிரம் பிரச்சினையாக்கிவிட்டு ஓய்ந்து போவார்கள்.
இவர்கள் சொல்லும் கண்ணியம் என்பது மட்டக்களப்பில் உள்ளவர்கள் வாகரை காடுகளுக்குள்ளும், அம்பாறையில் உள்ளவர்கள் உகந்தை காடுகளுக்குள்ளும், புத்தளத்தில் உள்ளவர்கள் வில்பத்து காடுகளுக்குள்ளும் சென்று அடைக்கலம் தேடுவதில்தான் முடியும்.
-Dilshan Mohamed-
0 Comments