Subscribe Us

header ads

சிராஜ் மஷ்ஹூரின் ரோஹிங்யாவின் சின்ன மகள்! ( நெகிழ வைக்கும் வரிகள்)


நாப் நதியில் மிதந்து வரும் 
என் சின்ன மகளே,
இறந்த பின்னும்
உன் உதடுகள் ஒட்டவில்லை.
சின்ன வாய் திறந்திருக்கிறது.
இப்போதும் நீ நியாயம் கேட்கிறாய்.


துடிக்கத் துடிக்கப் பேசினாயே
சின்னதாய் சில வார்த்தைகள்,
உன் கடைசிச் சொற்கள்-
கூழாங்கற்களைப் போல அதைப்
பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்.
அபாபீல் பறவைகளிடம் சென்று நான்
அதைக் கொடுப்பேன்.

காற்றைக் கிழித்துக் கொண்டு வரும்
உன் கடைசிக் குரலால்
அதிர்ந்த மனச்சாட்சி 
இன்னும் அடங்கவில்லை.
இனியும் அடங்கப் போவதில்லை.
செய்திகளுக்கும் படங்களுக்கும் 
கவிதைகளுக்கும் முன்னால்
கையாலாகாத கோழைகளாய் 
நாம் தலைகவிழ்ந்திருக்கிறோம்.

கண்மூடியிருக்கும் உன்னை
இனி மண் மூடி விடலாம்.
இந்த ஆற்றங்கரையில்,
எங்கோ வனாந்தரத்தில், புற்தரையில்,
இல்லாவிட்டால் ஒரு மண்திட்டில் 
உன் உடல் புதைக்கப்படலாம்.

அதனாலென்ன?
மனிதம் கசியும் மனங்களில் 
உன்னைப் புதைக்க முடியாது.
பதைக்கப் பதைக்கப் பேசத் துடிக்கும்
உன் குரல்வளையை 
அமுக்கி விடமுடியாது.
ஈரம் கசியும் உன் சொற்களைக்
காய வைக்க முடியாது.

நாப் நதியின் இடத்தில் எனக்கு
நந்திக் கடல் தெரிகிறது.
அய்லான் குர்தியின் அதே குழந்தை முகம்,
அதே காட்சிகள், அதே கண்ணீர்...
எதை யாரிடம் சொல்லியழுவது?
கோழைகளின் உலகத்தில்
நாம் கொள்ளி பொறுக்குகிறோம்.
பொறுக்கிகளின் உலகத்திலிருந்து
போய்விட்டாயடி என் சின்ன மகளே,
சுவனத்தின் வாசலில்
உன் காலடியோசை கேட்கிறது.

யுக முடிவு வரை
நீதி கேட்டுக் கொண்டே இருக்கும்
என் சின்ன மகளே,
நீ இறந்து விட்டாய் என்றா நினைக்கிறாய்?

---------------
சிராஜ் மஷ்ஹூர்
30.08.2017



Post a Comment

0 Comments