வெளிவிவகார அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இன்னும் சில தினங்களில் தனது பதவியை அவர் இராஜினாமா செய்வார் என அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
அதாவது இரண்டு கட்சிகளுக்கிடையிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை கள், மற்றும் ஐக்கிய தேசியக்கட்சிக்குள்ளே ஏற்பட்டுள்ள அமைச்சர் ரவி மீதான எதிர்ப்பு மற்றும் விமர்சனங்கள் என்பவற்றின் காரணமாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியை தற்காலிக அடிப்படையில் இராஜினாமா செய்வார் என தெரியவருகிறது.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தற்காலிக ரீதியில் இராஜினாமா செய்யவுள்ளதாக தெரியவருகிறது.
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கூட்டு எதிரணியினர் கடந்தவாரம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர். இந்நிலையில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதத்தை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக நாளை வியாழக்கிழமை கட்சித் தலைவர்கள் கூடி பாராளுமன்றத்தில் விவாதிக்கவுள்ளனர்.
ஐக்கிய தேசியக்கட்சிக்குள்ளும் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான அழுத்தங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதுவரை 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகவேண்டுமென அழுத்தம் பிரயோகித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இதுதொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பெரும்பாலும் அனைத்து அமைச்சர்களும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள், அதன் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பதவி விலக்குமாறு கோரியுள்ளனர். அதுமட்டுமன்றி கூட்டு எதிரணியும் மக்கள் விடுதலை முன்னணியும் அமைச்சர் ரவி கருணாநாயக்க உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சிக்குள்ளேயே அமைச்சருக்கு எதிராக கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ, அமைச்சர் தயா கமகே, மற்றும் பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா ஆகியோர் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரைக் குறிப்பிடாமல் இந்த விடயம் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையிலேயே அமைச்சர் ரவி கருணாநாயக்க விரைவில் தனது பதவியை இராஜினாமா செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை அவசியமில்லை என்றும் அவர் சில தினங்களில் நாட்டினதும் கட்சியினதும் நலனைக் கருத்தில் கொண்டு ஒரு முடிவை எடுப்பார் என நம்புவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
0 Comments