Mohamed Nizous
வாரும் வாத்தியாரே
சூழலை மாசு படுத்துவது
என்ன என்றீர்?
ஷொப்பிங் பேக் என்றீர்
ஷொப்பிங் பேக் என்றால்
அவ்வளவு
ஆபத்தா?
வணக்கம் முனிசிபலே
எடுக்க முடியா குப்பை
என்னவென்றீர்
ஷொப்பிங் பேக் என்றீர்
ஷொப்பிங் பேக் என்றால்
அத்தனை பிரச்சினையா?
பக்கத்தில் யாரது
பரிசர அமைச்சர்தானே!
ஷொப்பிங் பேக் இல்லாத
சூழலை என்னவென்றீர்?
சுகமான வரங்கள் என்றீர்.
ஷொப்பிங் பேக் என்றால்
அவ்வளவு சிக்கலா?
ஷொப்பிங் பேக்.
உலகின் ஒரு விசித்திரம்.
உடலின் மூன்றாம் கை.
உபயோகம் முடிவுறாத
உபகரணம்.
விரலுக்கு தூண்டில்போடும்
பிடி.
வீட்டுப் பாத்திரம் வடிவில் அதன்
அடி.
நிறம் வடியும்
வர்ணங்கள்.
பிற தரா பிரயோசனம்
பேக் தரும் எமக்கு.
பேசுபவன் உக்கினாலும்
பேக் உக்காது.
பேக்- நம்மை விட ஆயுள் கெட்டி.
ஆயுள் கெட்டியானதுடன்
அவதானமாய் இருப்போம்.
மனிதனின் சிறப்பு
மடிந்து போகும் வரைதான்.
ஷொப்பிங் பேக்
இருக்கும்வரை பட்டு மாயும்.
கிழிந்த பின்
கிராமத்துப் பையனின்
பட்டமாகும்.
வெட்டி ஒட்டினால்-பேக்
வேறு வடிவம் பெறுமே.
வெட்டி ஒட்டினால்
மனிதன் மாறுவானா?
ஷொப்பிங்கை எரித்தால்
சொற்பமேனும்
சுருண்டு மிஞ்சும்.
மனிதனை எரித்தால்
சாம்பல் கூட
சரியாய் கிடைக்காது.
ஷொப்பிங்குக்கும் சுருக்கம் விழும்
மறுபடி நேராகும்.
நமக்கோ
சுருக்கம் விழுந்தாலும்
சுவாசம் விழுந்தாலும்
ஒன்றென்றறிக.
ஷொப்பிங் பேக் இல்லையேல்
சுத்தமில்லாதவற்றை
சுற்றிப் பிடிப்பது எப்படி?
ஷொப்பிங் பேக் இல்லையேல்
மழையில் நனையாமல்
வழியில் தப்புவது எவ்வாறு?
வாங்கவும் விற்கவும்
ஷொப்பிங் பேக் உதவுவது போல்
வாழ்க்கையில் உதவுகிறோமா?
மனிதனின் முதல் நண்பன்
ஷொப்பிங் பேக்
மனிதனின் முதல் எதிரி
ஷொப்பிங் பேக்
கைகளை மனிதன்
அதிகம் பிரயோகித்தது
ஷொப்பிங் பேக் மீதுதான்.
அத்தனையும் வாங்க
அதிகம் பயன் பட்டது
இந்த ஷொப்பிங் பேக்தான்.
உண்ணும் உணவு - உடுக்கும் உடை
உடலுக்கு மருந்து - ஊற்றும் திரவம்
வாசிக்க நூல் - வைகறைக்குப் பால்
தடவத் தைலம் - தாளிக்க எண்ணெய்
எழுதக் காகிதம் - எரிக்க மெழுகு
அத்தனையும் வாங்க
அதிகம் பயன் பட்டது
இந்த ஷொப்பிங் பேக்தான்
ஷொப்பிங் தான்
ஷொப்பிங் தான்
எல்லாம் ஷொப்பிங்தான்
குப்பத்தில்
பிறந்தோர்க்கு
கொமட்டாய்
ஷொப்பிங் பேக்
எழுதினோம்
பென்சில் போடுதல்
பேக்கின் உபயம்
மணந்தோம்
மணக்கும் சமையலுக்காய்
நடக்கும் கொள்வனவு
ஷொப்பிங் பேக்.
கரு சுமந்தோம்
பயணத்தில் வாந்தி
பயன்படும்
ஷொப்பிங் பேக்.
கழுவினோம்
காயக் கட்டில் நீர் பட்டு
கழன்று போகாதிருக்க
ஷொப்பிங் பேக்
அரைத்தோம்
அங்கிங்கு சிதறாமல்
அனைத்தையும் சேர்க்க
ஷொப்பிங் பேக்
குடித்தோம்
கஞ்சிக் கலயமாய்
பிஞ்சுகள் சுமந்து வர
ஷொப்பிங் பேக்
குளித்தோம்
குட்டையில் நீர் அள்ளி
மொட்டையில் ஊற்ற
ஷொப்பிங் பேக்
கடித்தோம்
பல்லுப் படாமல்
பழத்தைப்
பாதி பிரிக்க
ஷொப்பிங் பேக்
மூடினோம்
இனிப்புப் பண்டத்தில்
ஈ வந்து விழாதிருக்க
ஷொப்பிங் பேக்
நோயுற்றோம்
குளிசைகள் மருந்துகள்
கொட்டுப் படாதிருக்க
ஷொப்பிங் பேக்
இறந்தோம்
கபன் புடவை வாங்கி
கடையிலிருந்து கொண்டு வர
ஷொப்பிங் பேக்
அடக்கப்பட்டோம்
கபுறின் மேல்
காற்றில் விழும்
கை விடப்பட்ட
ஷொப்பிங் பேக்
ஷொப்பிங் தான்
ஷொப்பிங் தான்
எல்லாம் ஷொப்பிங்தான்
டப்பிங் தான்
டப்பிங் தான் - இது
மரம் பற்றிய கவிதையின்
டப்பிங்தான்
மனிதா
சூழலைக் காப்பாற்றி
சுகமாக வாழ வேண்டுமா
ஷொப்பிங் பேக்கை விடு
மாற்று முறையை யோசி
மூத்தோர் முறையைத் தொடர்
ஒவ்வொரு ஷொப்பிங் பேக்கும்
ஒரு எதிரி
உன் வருங்கால சந்ததிக்கு..
0 Comments