யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் போன்ற உத்தமர்கள் இந்த நாட்டுக்குத் தேவையென முன்னாள் இராணுவ ஜெனரலும், பௌத்த தேரருமான புத்தன்கல ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியின் சமாதான அறையில் நேற்று காலை நீதிபதி மா.இளஞ்செழியனை சந்தித்து பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது கடந்த 22ஆம் திகதி நல்லூர் பகுதியில் வைத்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின்போது நீதிபதி இளஞ்செழியன் செயற்பட்ட விதம் குறித்து தேரர் பாராட்டியுள்ளார்.
அத்துடன், நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் மனைவியின் காலில் விழுந்து வணங்கியதன் மூலம் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு நல்லதொரு பாடத்தை புகட்டியுள்ளார் எனவும் தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நீதிபதி மா.இளஞ்செழியனின் செயற்பாடுகளை பாராட்டி புத்தன்கல ஆனந்த தேரர் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில்,
"கண்ணீருக்கு இனம் இல்லை. உணர்வுகளுக்கு இனம் இல்லை. நாம் சுவாசிக்கும் காற்றுக்கும் இனம் இல்லை. பருகும் நீருக்கும் இனம் இல்லை. சூரியக் கதிர்களுக்கும் இனம் இல்லை" என தெரிவித்துள்ளதுடன்,
அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டியதன் அவசியத்தை தேரர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, புத்தன்கல ஆனந்த தேரர் 2005ஆம் ஆண்டு வரை இராணுவத்தில் சேவையிலிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments