வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனைப் பகுதிகளில் வழிப்பறிக்கொள்ளைச் சம்பவங்கள் புதிய புதிய யுக்தியுடன் அன்றாடம் அரங்கேறி வருகின்றன.
அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெள்ளவத்தை பெனிக்குயிக் லேனில் வைத்து பெண் ஒருவரின் ஒரு சோடி தங்க வளையல்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
குறித்த பெண் அருகிலிருந்த தேவாலயம் ஒன்றுக்கு சென்று வழிபாடுகளில் கலந்து கொண்டுவிட்டு நண்பகல் 1 மணியளவில் பெனிக்குயிக் லேன் ஊடாக நடந்து வந்துள்ளார். அச்சமயம் அவரை எதிர்கொண்ட மற்றொரு பெண், “அம்மா உங்கட கையிலிருக்கும் தங்க வளையல்கள் இரண்டையும் கழற்றித் தாருங்கள்” என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்தப் பெண்ணோ “அதனை என்னால் கழற்ற முடியாது அதை எவ்வாறு உங்களுக்கு கொடுப்பது” என்று மறுக்கவே, உடனே வழிப்பறியில் ஈடுபட்ட குறித்த பெண் எதிர்பாராத வகையில் அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதனால் நிலைகுலைந்து போயுள்ளார் அவர்.
இதை சரியான சமயமாகப் பயன்படுத்திக் கொண்டு அங்கு வந்த இருவர் " சத்தம் போடக்கூடாது " என்று கத்தியை காட்டி மிரட்டி கையிலிருந்த இரண்டு தங்க வளையல்களையும் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.
பெண் ஒருவரும் இரு ஆண்களுமே திட்டமிட்டு இந்த வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளவத்தை பகுதியில் தேவாலயங்கள் மற்றும் சன நடமாட்டம் குறைந்த பகுதியில் நடமாடும் புது முகங்கள் விடயத்தில் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.
இவர்கள் வங்கிகள், ஆலய வாசல்களில் நின்றவாறு அங்கு வந்து செல்வோரை அவதானித்திருந்து இவ்வாறு வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபடுவதாகவும் , எனவே தனியாக செல்லும் பெண்கள் மற்றும் வயோதிபர்கள் அவதானமாக இருக்க வேண்டுமென்றும் அவர்கள் அழைத்தாலோ அல்லது கேள்வி கேட்டாலோ அதற்குப் பதிலளிக்கும் வகையில் அவர்களுடன் அநாவசியமாக அளவளாவக் கூடாது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயத்தில் பொலிஸாரும் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்து வதுடன் வீதிகளில் தேவையின்றி சந்தேகத்துக்கிடமாக அலைந்து திரிவோரை கைது செய்யவேண்டும் என்று இப்பிரதேச வாசிகள் கோருகின்றனர்.


0 Comments