ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் அல்லது தம்மை எதிர்க்கட்சி வரிசையில் அமர அனுமதிக்க வேண்டும். இல்லையேல் இந்த அரசாங்கத்திலிருந்து நிரந்தரமாக வெளியேறவேண்டி ஏற்படுமென ‘ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான அருந்திக்க பெர்னாந்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இது குறித்து தெரிவித்துள்ளதாகவும் தமது கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காதவிடத்து அமைச்சர் கள் மற்றும் பிரதியமைச்சர்கள் அடங்கிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த 18 பேர் அரசாங்கத்திலிருந்து வெளியேறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 18 பேர் அரசிலிருந்து வெளியேறி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தீர்மானித்திருக்கிறோம் அது தொடர்பாக கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதியிடம் தெரிவித்தோம். அதற்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை அந்த யோசனையை கைவிடுமாறு ஜனாதிபதி எம்மிடம் கோரினார்.
தொடர்ந்து இந்த அரசாங்கத்தில் இருப்பதற்கான உத்தேசமில்லை. ஆகையால் இந்த விசயம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு வழங்கினால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கினால் அதற்கான மாற்று ஏற்பாடு என்னவென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்முடனான கலந்துரையாடலின் போது கேட்டதாகவும் அதற்கு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க தமது குழு விரும்புவதாகவும் பெரும்பான்மையானோரது விருப்பமும் அதுவே என ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் டி.பி.ஏக்கநாயக்க, நிமால் லான்ஸா, துலிப் விஜேசேகர, சுமேதா ஜயசேன, சுசந்த புஞ்சிநிலமே, லக்ஸ்மன் வசந்த பெரேரா, தாராநாத் பஸ்நாயக்க, இந்திக்க பண்டாரநாயக்க, நிசாந்த முத்து ஹெட்டி கம, பியங்கர ஜயரட்ன, சுசில் பிரேம் ஜயந்த, டபிள்யூ.டி.ஜே செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா, ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா உள்ளிட்டோரே இவ்வாறு அரசிலிருந்து வெளியேறவுள்ளதாகவும் மேலும் பலருடன் கலந்துரையாடிவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


0 Comments