கத்தார் மன்னர் அல்-தானி கத்தார் நேரப்படி நேற்று இரவு 10 மணிக்கு கத்தார் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு சிறப்புரை நிகழ்த்தினார்.அப்போது நிபந்தனைகளுடன் பேச்சு வார்த்தைக்கு தயார் என்று மன்னர் அறிவிப்பு வெளியிட்டார். இதில் 15 முக்கிய கருத்துக்களை அவர் முன்வைத்தார் என்று தெரிகிறது.
தனது நாட்டின் இறையாண்மை மதிக்கப்படும் என்கிற நிலையில் பேச்சு வார்த்தைக்கு கத்தார் தயார் என்று அதன்மன்னர் அறிவித்துள்ளார்.
மன்னர் அல்-தானி, “ நாங்கள் இறையாண்மைக்கான மரியாதை மற்றும் ஒவ்வொரு நாடும் பரஸ்பர உறுதிமொழிகள், பொறுப்புகளை கடைபிடிப்பது என்கிற வரையறைகளுக்குள் தற்போது இருந்து வரும் பிரச்சினைகளுக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண தயாராகவுள்ளோம்” என்றார்.
அவர் மேலும், “கத்தார் தீவிரவாதத்திற்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வருகிறது. இதை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன” என்றார். சவுதி உட்பட நான்கு நாடுகள் கத்தாருடனான தூதரக உறவுகளை கடந்த ஜூன் 5 ஆம் தேதி முதல் துண்டித்தன. கடந்த பல ஆண்டுகளில் வளைகுடா பகுதியில் நிகழ்ந்த பெரிய சிக்கல்களில் மோசமானதாக இந்த விவகாரம் காணப்படுகிறது. நான்கு நாடுகள் கத்தார் மீது தடைகளையும் விதித்துள்ளன.
அவை கத்தாரிடம் 13 அம்ச கோரிக்கையை முன் வைத்து அவற்றை தீர்க்கும்படி கோருகின்றன. ஆனால் இக்கோரிக்கைகள் கத்தாரின் இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக அந்நாடு கூறுகிறது. குவைத், அமெரிக்கா மற்றும் துருக்கி ஆகியவை இந்த விவகாரத்தை அமைதியாக தீர்க்க முயற்சி செய்கின்றன.
0 Comments