முந்தைய பதிவு : http://www.kalpitiyavoice.com/2017/07/blog-post_187.html
காலாகாலமாக முஸ்லிம் காங்கிரசினை
எதிர்க்கின்றவர்களின் வாக்குகளும், பேரியல் அஷ்ரப், மயோன் முஸ்தபா மற்றும்
சம்மாந்துரையில் நௌசாத், அமீர் டீஏ போன்றவர்கள் தேர்தல் களம் இறங்காததனால்
இவர்களின் வாக்குகளும், மற்றும் முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற
பிரமுகர்களின் சில நூறு வாக்குகளும் ஒன்று சேர்ந்தே மொத்தமாக கடந்த பொது தேர்தலில்
அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அணிக்கு 33 ஆயிரம் வாக்குகள் கிடைக்கப்பெற்றது.
இதில் அவதானிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் மேலே
கூறப்பட்ட பிரமுகர்களான பேரியல் அஸ்ரப், மயோன் முஸ்தபா, நௌசாத், அமீர் டீஏ
போன்றவர்கள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. இவர்கள்
எதிர்வரும் தேர்தல்களில் ரிசாத் அணியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவதற்குரிய
சாத்தியப்பாடுகளும் தென்படவில்லை.
இதனால் இந்த பிரமுகர்களோ அல்லது இவர்கள்
சார்ந்தவர்களோ எதிர்வரும் தேர்தலில் களம் இறங்கினால், தற்போது ரிசாத்தின் அணியில்
இருக்கும் இவர்களது கடந்தகால ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் குறிப்பிட்ட இந்த
பிரமுகர்களுக்கே ஆதரவளிப்பார்கள். இதன்காரணமாக அதிகம் வாக்குகளை இழக்கப்போவது அமைச்சர்
ரிசாத் பதியுதீன் அவர்களே.
எனவேதான் இந்த வாக்குகள் எதிர்காலத்தில்
நிலையானது அல்ல என்பது அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு நன்கு தெரியும். அதுமட்டுமல்லாது
அமைச்சர் ரிசாத்துடன் இன்று இருக்கின்ற முக்கிய பிரமுகர்களில் பலர் முஸ்லிம்
காங்கிரசில் இணைவதற்கு அதன் தலைவர் ரவுப் ஹக்கீமிடம் தூது விடுவதனை அமைச்சர்
ரிசாத் அவர்கள் அறிந்துவைத்துள்ளார்.
எனவேதான் தன்னுடன் இருக்கின்ற பிரமுகர்களோ,
அல்லது கடந்த தேர்தலில் களம் இறங்காத மாற்றுக் கட்சி பிரமுகர்களின் ஆதரவாளர்களோ தன்னைவிட்டு
விலகிச்சென்றால் அந்த இடத்தினை நிரப்பி, தனது நிலையை ஸ்திரப்படுத்தும் பொருட்டு அதாஉல்லாவின்
வாக்கு வங்கியில் குறி வைத்தே இந்த கூட்டணி அமைப்பதற்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன்
ஆர்வம் காட்டியுள்ளார்.
அதேநேரம் அதாஉல்லாஹ் அவர்களுக்கு அக்கரைப்பற்றை
தவிர வேறு எந்த பிரதேசத்திலும் செறிவான வாக்குகள் இல்லை. இதன்காரணமாகத்தான் கடந்த
தேர்தலில் அதாஉல்லாஹ் தோல்வி அடைந்தார். அவரது தோல்விக்கும் அமைச்சர் ரிசாத்
பதியுதீனின் வரவே காரணமாகும்.
அமைச்சர் ரிசாத் அவர்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு
எதிரான சக்திகளுக்கும், அதிலிருந்து விலகியவர்களுக்கும் பணமும், பதவியும் வழங்கி ஒன்று
சேர்த்துவைத்துள்ளர். எனவே ரிசாத்துடன் கூட்டணி வைப்பதன் மூலம் முஸ்லிம்
காங்கிரசுக்கு எதிரான இந்த வாக்குகளை எதிர்வரும் தேர்தலில் சுவீகரித்து தனது இழந்த
செல்வாக்கினை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா என்று அதாஉல்லாஹ் அவர்கள் ஆராய்ந்து கொண்டிருப்பதனை
காணக்கூடியதாக உள்ளது.
எது எப்படி இருப்பினும் இந்த கூட்டணி
சாத்தியமானால் இதனால் அதிகம் நன்மை அடையப்போவது ரிசாத் பதியுதீன் மட்டுமே, ஏனெனில்
செரிவானதும், நிலையானதுமான வாக்குகள் அம்பாறை மாவட்டத்தில் அதாஉல்லாவிடம் மட்டுமே இருக்கின்றது.
அதனை குறிவைத்தே தான் எதிர்வரும் காலங்களில் இழக்கப்போகும் வாக்குகளை ஈடு செய்யும்
பொருட்டு அமைச்சர் ரிசாத் பதியுதீன் காய்நகர்த்துகின்றார் என்பது அரசியல்
அவதானிப்பாகும்.
இந்த கூட்டணியை அமைப்பதில் ஆர்வம்
காட்டுகின்றவர்களில் சிலர் மு.கா. தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு நோன்பு
பெருநாள் வாழ்த்து தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்கள். அதில் எங்களை
முறைப்படி அழைத்தால் தாங்கள் வந்து இணைந்துகொள்ள தயாராக இருப்பதாகவும் அந்த
செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இங்கே “முறைப்படி” என்பதன் பொருள் தாங்கள்
எதிர்பார்க்கின்ற பதவி என்பதனை குறிக்கின்றது. எனவே இவர்கள் அனைவரும் ஒருகாலத்தில்
முஸ்லிம் காங்கிரசில் ஒன்றாக இருந்தவர்கள்தான். எதிர்பார்த்த பதவிகளை இவர்களுக்கு தலைவர்
ஹக்கீம் வழங்காததனால் முரண்பட்டுக்கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் பிரிந்து
கிடக்கின்றார்கள்.
என்ன நோக்கத்துக்ககா இவர்கள் பிரிந்தார்களோ,
அந்த நோக்கத்தினை தலைவர் ஹக்கீம் நிவர்த்தி செய்தால் உடனே தலைவர் ஹக்கீமின்
காலடியில் மண்டியிட ஆயத்தமாக உள்ளார்கள். இதனை அறிந்ததனால்தான் தலைவர் ஹக்கீம்
அவர்கள் இந்த கூட்டணி பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.
எனவே தேர்தல் ஒன்று நெருங்குகின்றபோது முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்கள் நகர்த்துகின்ற அரசியல் காய்நகர்த்தல்கள் மூலமாகத்தான்
இந்த கூட்டணியின் சாத்தியமும், அதன் எதிர்காலமும் தங்கியுள்ளது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
0 Comments