புத்தளம், கற்பிட்டி, முந்தல் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகப் பிரிவுகளில் பூர்வீகமாக வாழும் மக்களுக்கு அரச காணிகள் பகிர்ந்தளிக்கப்படாமல் கொழும்பு உட்பட இதர மாவட்டங்களின் தனவந்தர்களுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அவற்றை தாரைவார்க்கும் செயலை உடனடியாக வடமேல் மாகாண சபை தலையிட்டு நிறுத்த வேண்டும் என வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் தமது ஆசனத்தின் மீது ஏறி கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்ட மற்றுமொரு சம்பவம் நேற்றைய (20.6.2017) மாகாண சபை அமர்வின் போது பதிவாகியுள்ளது.
இது போன்ற நடவடிக்கைகளை கொழும்பைத் தலைமையகமாகக் கொண்டு பிரதமர், அமைச்சர்கள், அதிகாரிகள் மேற்கொள்வதை முதலமைச்சர் உட்பட இந்த சபை பார்த்துக் கொண்டு வாளாவிருக்கப் போகிறதா என அவர் வினா எழுப்பவே சபையின் ஆளும் எதிர்க்கட்சி அங்கத்தவர்கள் அதற்கு இடமளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
மக்கள் உப்பு உற்பத்தி, விலங்கு வேளாண்மை, நன்னீர் மீன் வளர்ப்பு, சேனைப் பயிர்ச் செய்கை, உப உணவுப் பொருட்கள் உற்பத்தி, வர்த்தகம், வீடமைப்பு முதலானவற்றுக்கு காணிகளை கேட்டு மேற்படி பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விண்ணப்பித்து வருடக் கணக்கில் காத்திருக்கும் துர்ப்பாக்கிய நிலை நீடித்து வருகிறது.
வடமேல் மாகாண காணி அமைச்சர் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மாகாண காணி அலுவலகம், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தும் ஏன் இந்த நிலை எனவும் அவர் வினா எழுப்பினார்.
இதற்கு தீர்வு வழங்காவிட்டால் தமது ஆசனத்தை விட்டு கீழிறங்கப் போவதில்லை என அவர் சூளுரைத்தார்.
இதற்கு முதலமைச்சர், காணியமைச்சர் ஆகியோர் நியாயமான நடவடிக்கை எடுப்பதாக வழங்கிய உறுதி மொழியை அடுத்து சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க சபைத் தலைவர் டிகிரி அதிகாரிக்கு நியாஸ் இடமளித்தார்.
0 Comments