பொலன்னறுவை மாவட்டத்தில் இனவாத அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் பிரதேச முஸ்லிம்களின் குறைகளை கேட்டறிவதற்காக அமைச்சர் ஹக்கீம் அப்பிரதேசத்துக்கு நேரடி விஜயம் செய்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை மாலை பொலன்னறுவை தம்பாளை பிரதேசத்துக்கு வருகை தந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், அண்மையில் ஞானசார தேரரின் அச்சுறுத்தலுக்கு இலக்கான தம்பாளை , சின்னவில்பட்டி பிரதேச மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசனை ஒன்றையும் நடத்தினார்.
சின்னவில்பட்டியில் முஸ்லிம்கள் சட்டவிரோதமாக குடியிருப்பதாகக்கூறி பொதுபல சேனா, சிங்கள ராவய, சிங்ஹலே அமைப்பைச் சேர்ந்த தேரர்கள் அண்மையில் ஞானசார தேரர் தலைமையில் சென்று அங்குள்ள முஸ்லிம்களை வெளியேறுமாறு எச்சரித்துவிட்டு, இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன் பிரதேச விவசாயிகளின் பண்ணைகளில் காணப்பட்ட மாட்டுத்தொழுவங்களையும் கொட்டில்களையும் உடைத்துவிட்டுச் சென்றிருக்கும் நிலையில், அங்குள்ள மக்களின் நியாயங்களை கேட்டறியும் வகையில் விசேட சந்திப்பொன்று சனிக்கிழமை தம்பாலை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் சின்னவில்பட்டியில் விவசாயம் செய்யும் தம்பாளை மக்கள் தங்களது நியாயங்களை அமைச்சரிடம் முன்வைத்தனர். அத்துடன் பழமைவாய்ந்த தங்களுடைய காணி ஆவணங்களையும் அமைச்சரிடம் கையளித்தனர்.
சின்னவில்பட்டியில் முஸ்லிம்கள் 2000 ஏக்கர் காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்பதாக்கூறி, அங்கு பௌத்த குடியேற்றங்களை நிறுவுவதற்கான ஒரு நடவடிக்கையாகவே இதைப் பார்ப்பதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், கடந்த ஆட்சியில் நடைபெற்றதுபோன்று இந்த நல்லாட்சியிலும் இவ்வாறான இனவாத பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதை அனுமதிக்கமுடியாது. அதுவும் ஜனாதிபதியில் சொந்த மாவட்டத்தில் இப்படியானதொரு இனவெறுப்பு பிரசாரம் நடைபெற்றுள்ளது.
இதுதொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்னும் ஓரிரு நாட்களில் ஜனாதிபதியை சந்தித்து இதற்கான தீர்வை வழங்குமாறு கோரவுள்ளோம் என்று உறுதியளித்துள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றவுடன் அவரது சொந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் நளகம பிரதேச முஸ்லிம்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.
அதே போன்று 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி வெற்றி பெற்றவுடன் அவரது சொந்தமாவட்டமான பொலன்னறுவையில், போகஹதமன பள்ளிவாசல் தாக்குதலுக்கு இலக்கானது. இன்று வரை குறித்த பள்ளிவாசல் சீரமைக்கப்படவில்லை.
இந்நிலையில் அண்மைக்காலமாக ஞானசார தேரர் பொலன்னறுவை மாவட்டத்தைக் குறிவைத்து களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments