இந்தியாவின் அமைச்சர் ஒருவர் மதுபோதையில் வீடு திரும்பும் கணவர்களை அடித்து துவைப்பதற்தற்காக மணமகள்களுக்கு பலகையிலான துடுப்புகளை வழங்கியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தின் சாகர் நகரில் அக் ஷய திரிதியையை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை 700 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடைபெற்றது.
விமரிசையாக நடைபெற்ற இத் திருமணத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இத்திருமணங்களை மாநில கிராமப்புற வளர்ச்சி அமைச்சர் கோபால் பார்கவா நடத்தி வைத்தார்.
அப்போது மணமகள்கள் அனைவருக்கும் பலகையிலான பலகைத் துடுப்புகளை அமைச்சர் கோபால் பார்கவா வழங்கினார். பொதுவாக சலவை செய்யப்படும் ஆடைகளை அடித்துத் துவைப்பதற்காக பயன்படுத்தப்படும் துடுப்பு இது.
“குடித்துவிட்டு வரும் கணவனை இதனால் அடியுங்கள்” என அத்துடுப்பில் எழுதப்பட்டும் இருந்தது.
“கணவன் குடித்துவிட்டு வந்தால் மர பேட்டால் அடிக்க வேண்டும் எனவும், இதுகுறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்ய மாட்டாது” எனவும் அமைச்சர் கோபால் பார்கவா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மதுபோதையில் வரும் கணவர்களை மணமகள்கள் முதலில் பேசி திருத்த முயற்சிக்க வேண்டும்.
அதற்கு அவர்கள் செவிமடுக்காவிட்டால் துடுப்புகள் பேசட்டும். தமது கணவர்கள் குடித்துவிட்டு வந்தால் வன்முறையாக நடந்துகொள்கிறார்கள் எனவும், தான் சேமித்த பணத்தையெல்லாம் எடுத்துக்கொள்கிறார்கள் எனவும் பெண்கள் கூறுகின்றனர்.
பெண்களை வன்முறையில் ஈடுபடத் தூண்டும் நோக்கம் எனக்கில்லை. வன்முறைகளை தடுப்பதற்காகவே இத்துடுப்புகள் வழங்கப்படுகின்றன” என அமைச்சர் கோபால் பார்கவா தெரிவித்தார்.
புதிதாக திருமண மாகும் பெண்களுக்கு வழங்குவதற்காக சுமார் 10,000 துடுப்புகளுக்கு அவர் கட்டளை கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



0 Comments