![]() |
2015 ஆம் ஆண்டில் லண்டன் மேயராக இருந்த போரிஸ் ஜான்சன் மிதிவண்டியில் பயணம் செய்த போது |
நீண்ட நாட்கள் வாழ வேண்டுமா ? புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும் ஆபத்துகளை குறைக்க வேண்டுமா?
அப்படியென்றால், பணியிடத்திற்கு மிதிவண்டியில் செல்லுங்கள் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இது குறித்து நடத்தப்பட்டதிலேயே மிகப்பெரிய ஆய்வு, சைக்கிளைப் பயன்படுத்துவதற்கும், புற்று நோய் மற்று இதயநோய் ஏற்படும் வாய்ப்பை பாதியாகக் குறைப்பதற்கும் இடையேயான தொடர்பை சுட்டிக்காட்டியுள்ளது.
ஐந்தாண்டுகளாக 2.50 லட்சம் பேரிடம் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில், பொது போக்குவரத்தை பயன்படுத்தி உட்கார்ந்து கொண்டே பணியிடத்துக்கு செல்வது அல்லது காரில் செல்வதைக் காட்டிலும், நடந்து செல்வதால் சில நன்மைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
தினசரி வேலையில் அங்கமான பிறகு மிதிவண்டி ஓட்டுவதற்கு மன உறுதி தேவையில்லை என்றும், அதுவே உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல மன உறுதி முக்கியம் என்று கிளாஸ்கோவில் இந்த ஆராய்ச்சியை நடத்திய விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
'சுறுசுறுப்பான பயணிகள்'
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் ஒட்டுமொத்தமாக, 2,430 பேர் இறந்துவிட்டனர். சுமார் 3,748 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. 1,110 பேருக்கு இதய நோய் பாதிப்பு இருந்தது.
ஆனால், இந்த ஆய்வின் போது, மிதிவண்டி ஓட்டும் பழக்கத்தை வழக்கமாக கொண்டிருந்தவர்கள், எந்த காரணத்தாலும் இறக்கும் அபாயத்தை 41% ஆகவும், புற்றுநோய் ஏற்படும் சம்பவங்களை 45% ஆகவும், இதய நோயை 46% ஆகவும் குறைப்பதாக தெரிய வந்துள்ளது.
வாரத்திற்கு 30 மைல், அதாவது 48.2 கி.மீட்டர் சராசரியாக மிதிவண்டி ஓட்டியவர்கள் அதற்குமேலும் மிதிவண்டி ஓட்டியபோது, அவர்களுடைய உடல் ஆரோக்கியம் அதிகமாக இருந்தது.
நடைப்பயிற்சி மேற்கொள்வதால் இதயநோய் ஏற்படும் ஆபத்துக்கள் குறைகின்றன. ஆனால், வாரத்திற்கு 6 மைல்களுக்கு மேல் அதாவது 9.6 கிலோ மீட்டர்களுக்கு மேல் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கே இந்த நன்மை கிடைக்கிறது.
''பணியிடத்திலிருந்து வீட்டிற்கும், வீட்டிலிருந்து பணியிடத்திற்கும் சுறுசுறுப்பான முறையில் குறிப்பாக மிதிவண்டி மூலம் செல்பவர்கள் குறைந்தளவிலான ஆபத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதற்கு இதுவே தெளிவான சான்று'' என்று பிபிசியிடம் கூறுகிறார் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜேசன் கில்.
அலுவலகத்திலிருந்து வீட்டிற்கும், வீட்டிலிருந்து அலுவலகத்திற்கும் மிதிவண்டி மற்றும் பொது போக்குவரத்து இரண்டையும் பயன்படுத்தியவர்களும் ஆரோக்கியமான உடல் நலத்தை பெற்றிருந்தனர்.
மூச்சிரைத்தால் நன்மையே
பிரிட்டிஷ் மருத்துவ நாளிதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு நடத்தப்பட்ட முறையை வைத்துப் பார்க்கும்போது, புற்றுநோய் ஏற்படுவதற்கான தெளிவான காரணத்தையும், விளைவுகளையும் தீர்மானிக்க முடியவில்லை.
மிதிவண்டி ஓட்டுவதால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து குறைவதற்கான காரணம் உடல் எடை குறைவதால் மட்டும் ஏற்படுகிறது என்று சொல்ல முடியவில்லை.
நடைப்பயிற்சியை விட மிதிவண்டி ஓட்டுவது மிகச்சிறந்ததாக கருதப்படுகிறது. ஏனென்றால் மிதிவண்டி பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் உடற்பயிற்சி , நடப்பதை விட, அதிக நேரம் மற்றும் தீவிரமாக செய்யக்கூடியது.
''உடற்பயிற்சியை நம்முடைய அன்றாட வாழ்வில் இணைத்துக்கொள்வதால் கிடைக்கும் சாத்தியமான நன்மைகளை சுட்டிக்காட்ட இந்த ஆய்வு உதவியதாக'' பிரிட்டன் புற்றுநோய் ஆராய்ச்சியை சேர்ந்த கிளார் ஹைட் கூறியுள்ளார்.
''உடற்பயிற்சி நிலையத்தில் நீங்கள் சேர வேண்டாம் அல்லது மராத்தானில் ஓட வேண் டாம்.
''உங்கள் உடலை சூடாக்கி மூச்சிரைக்க வைக்கும் எதுவும் மாற்றத்தை ஏற்படுத்தும்'' என்கிறார் அவர்.
-BBC-
0 Comments