கட்டுநாயக்க விமான நிலையத்தை விற்க அரசு ஏற்பாடு செய்து விட்டது என பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு தெரிவிக்கையில்,
கட்டுநாயக்க விமான நிலையம் தற்போது விற்பனை செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதனை வாங்கப்போகும் பிரதான நபர்களில் மூன்றாம் இடத்தில் அர்ஜுன் அலோசியஸ் இருக்கின்றார்.
அவரே அதனை வாங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நாட்டில் கொள்ளையிட்டு நாட்டையே வாங்கும் நடைமுறை தொடர்கின்றது.
மைத்திரிக்கு உதவி செய்த காரணத்தால் அவர் ரணிலுக்கு உதவி செய்கின்றார். அர்ஜுன் அலோசியஸ் திருட ரணில் உதவி செய்த காரணத்தினால் அர்ஜுன் ரணிலுக்கு உதவி செய்கின்றார்.
இப்படியான ஓர் முறைகேடான ஆட்சியே தொடர்ந்து கொண்டு வருகின்றது. இவை மாற்றியமைக்கப்படவேண்டும்.
எதிர்காலத்தில் மனிதாபிமானம் மிக்க நல்ல தலைவர் ஒருவர் நாட்டுக்கு நியமிக்க வேண்டியது அவசியமானதாகும்.
வாழ்வாதார விலைவாசி உயர்வடைந்து விட்டது. ஆனாலும் சாப்பிட உணவு இல்லாவிட்டாலும் கூட கால்வாய் தண்ணீரைப் பருகிக் கொண்டாவது இந்த அரசை வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என்பது நிச்சயம்.
விமல் வீரவங்சவை அரசியல் ரீதியில் பழிவாங்கினார்கள். ஆனால் இந்த சபையில் இருக்கும் 224 உறுப்பினர்களை விடவும் நாட்டின் மீது அதிக பற்று கொண்ட ஒருவர் விமல் மட்டுமே எனவும் நிரோஷன் தெரிவித்தார்.
அவருடைய உரைக்கு எதிர்க்கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா,
பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு பிழையான செய்திகளை பாராளுமன்றத்தில் கூறவேண்டாம். அது பிரச்சினையை ஏற்படுத்தக் கூடும்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை விற்பதற்கோ அல்லது குத்தகைக்கு விடுவதற்கோ எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதே போன்று உங்களை விடவும் நாட்டின் மீது பற்று கொண்டவர் விமல் எனக் கூறி உங்களை நீங்களே தாழ்த்திக் கொண்டீர்கள் என பதில் அளித்தார்.
அவரது இந்த பதிலால் வாக்குவாதம் ஏற்பட்டு அமைதியற்ற நிலை தொடர்ந்தது. நிரோஷன் பிரேமரத்ன ஆசனத்தில் இருந்து எழுந்து தொடர்ந்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதன் காரணமாக இது பிரதேசசபை அல்ல பாராளுமன்றம். உறுப்பினரைப் போல நடந்து கொள்ளுங்கள். முறைகேடாக நடந்து கொள்ள வேண்டாம் எனவும் ஹர்ச டி சில்வா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments