பாபுல், பீடா, மாவா, ஹான்ஸ், புகையிலை தூள், இலத்திரனியல் சிகரெட் , பேன் மசாலா, குட்கா பாக்கு வகை போன்றவைகளை விற்பதற்கும் இறக்குமதி செய்வதற்குமான தடைக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியது.
மேலும் மேற்குறித்தவற்றை விற்பனை செய்தால் 2000 ரூபா தண்டபணம் அல்லது ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் புகையிலை மற்றும் மதுசார மீதான தேசிய அதிகார சபையின் ஒழுங்கு விதி சட்டமூலம் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.இது தொடர்பாக சுகாதார, போசனை, மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாதரத்ன உரையாற்றுகையில்,
நான் கடந்த அமைச்சரவையின் போது தனி சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதிக்கும் பத்திரத்தை சமர்ப்பித்தேன். மேலும் பாடசாலைகள் உள்ள பகுதியின் 500 மீற்றர் வரையான தூரத்தில் சிகரெட் விற்பனை செய்வதற்கும் மதுபானம் விற்பதற்கும் தடை செய்யும் வகையில் எதிர்வரும் அமைச்சரவையில் பத்திரம் கொண்டு வரவுள்ளோம். தற்போது இதனை ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவதானம் செலுத்தியுள்ளனர்.
அத்துடன் பாபுல், புகையிலை, பீடா, மாவா , குட்கா போன்ற போதை வஸ்துகளையும் தடை செய்வதற்கும் இறக்குமதி செய்வதற்கும் திட்டமிட்டுள்ளேன். இவற்றை விற்பதனை செய்தால் 2000 ரூபா தண்டபணம் அல்லது ஒரு சிறை தண்டனையை வழங்கவுள்ளோம். இதன் காரணமாக அதிகளவில் புற்று நோய் ஏற்படுகின்றன. மேலும் இலத்திரனியல் சிகரெட்டையும் தடை செய்யவுள்ளோம். குறித்த சிகரெட்டில் நிகடின் பதார்த்தம் உள்ளது. நிகடின் பதார்த்தம் பாதிப்பானவை .ஆகவே இதனையும் தடை செய்யவுள்ளோம்.
இதன் தாக்கத்திற்கு இளைஞர்கள் பெருமளவில் உள்ளாகியுள்ளனர். அத்துடன் வாய் புற்றுநோயினால் ஆண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் தனி சிகரெட் கொள்வனவுக்கு தடை செய்ய திட்டமிட்டமையை அடுத்து புகையிலை நிறுவனம் 5 சிகரெட் அடங்கிய பெட்டியை விற்பதற்கு திட்டமிட்டுள்ளனர். தற்போது எமது நடவடிக்கைகளை தடை செய்வதற்கு பலர் திட்டமிட்டு வருகின்றனர். எனினும் எமது பயணத்தை தடுக்க முடியாது என்றார்.
0 Comments