மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமையால் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
எனினும் குப்பை மேடு நேற்று சரிந்து விழுந்தமை தொடர்பில் உண்மை தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தற்போது அதன் உண்மை நிலவரம் தெரியவந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக குப்பை மேட்டில் தீ பற்றியமை உட்பட பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அது தொடர்பில் எவரும் அக்கறை செலுத்தவில்லை.
இந்நிலையில் தஹம்புர பிரதேசத்தில் நேற்று குப்பை மேடு சரிந்தமையினால் 75 வீடு குப்பைக்குள் சிக்கியுள்ளன. இன்று காலை வரையிலும் அந்த வீடுகளுக்கு மேல் 40 அடி அளவிலான குப்பைகள் காணப்படுகின்றன. இந்த அனர்த்ததினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
எனினும் உண்மை அதுவல்லவென பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். “இன்று காலை வரை 10 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏழு பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 100 பேர் குப்பைக்குள் சிக்கியுள்ளதாக நம்பப்படுகின்றது.
நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது, அதிகாலை 2 மணியளவில் தான் குப்பைகளை அகற்றுவதற்கு பெக்கோ இயந்திரம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதுவரையில் அந்த பகுதி மக்கள் மற்றும் இராணுவத்தினர் மாத்திரமே தலையிட்டு குப்பையில் சிக்கிய மக்களை காப்பாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
எந்தவொரு அதிகாரியும் அங்கு வருகைத்தரவில்லை. எப்போது இருந்து இந்த குப்பையை அகற்றுமாறு நாங்கள் அதிகாரிகளிடம் கூறி வருகின்றோம். புத்தாண்டு தினத்தில் பிள்ளைகளின் சந்தோஷம் பறிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு நாள் என்பதனால் வீட்டில் இருந்த உறுப்பினர்களுக்கு மேலதிகமாக பலரும் வருகை தந்திருந்தனர். இதனால் சரியாக எத்தனை பேர் வீட்டில் இருந்தார்கள் என தெரியவில்லை. தற்போதைக்கு 10 உடல்களை மீட்டுள்ளோம். விடியும் வரையில் நாங்கள் எங்கள் மக்களை காப்பாற்றுவதற்கு முயற்சி மேற்கொண்டோம்.
இரவாகிவிட்டது என எப்படி இவர்களை விட்டு விட முடியும். இந்த குப்பைக்குள் புதையுண்டவர்கள் தினமும் இந்த குப்பையினால் துன்பத்தை அனுபவித்தவர்கள். தற்போது பலர் வருகைத்தந்து போலியாக கவலை வெளியிடுகின்றார்கள். 14ஆம் திகதி காலையிலும் குப்பை கொட்டினார்கள்.
உயிரிழந்தவர்களுக்குள் சிறு பிள்ளைகள் மூவர் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த 7 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments