Subscribe Us

புத்தளம் கால்பந்தாட்ட லீக்குக்கு 2017 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு! கற்பிட்டி பேர்ல்ஸ் அணியின் ஆசிக் உப தலைவராக தெரிவு...


புத்தளம் கால்பந்தாட்ட லீக்குக்கு புதிய நிர்வாகிகளை தெரிவு செய்வதற்கான அதன் வருடாந்த பொதுக்கூட்டம் சனிக்கிழமை (17) இரவு 8 மணி அளவில் புத்தளம் போல்ஸ் வீதியில் அமைந்துள்ள குளிர் களி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் தலைவரும், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.எஸ்.எம். ரபீக் தலைமையில் நடைபெற்ற இந்த வருடாந்த பொதுக்கூட்டத்தில் புத்தளம் கால்பந்தாட்ட லீக்கில் பதிவாகியுள்ள த்ரீ ஸ்டார்ஸ், விம்பிள்டன், போல்டன், லிவர்பூல், நியூ ஸ்டார்ஸ் , நியூ பிரண்ட்ஸ், பேர்ல்ஸ், யுனைடெட், ஒடிடஸ், ட்ரிபள் செவன் ஆகிய பத்து கழங்களிருந்து தலா மூவர் வீதமாக 30 பேர் கலந்து கொண்டிருந்தனர்.
பொதுக்கூட்டத்தை கண்காணிக்கும் பொருட்டு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரதிநியாக அதன் மத்தியஸ்த்தர் சபை உறுப்பினர் எம். சி. ஜமால்தீன் கலந்து கொண்டார்.
புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் செயலாளர் எஸ்.ஆர்.எம். ஆஸாத் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனதுரையில், கால்பந்தாட்டம் என்பது பல துறைகளை கொண்டதாகும். நிர்வாகம் என்பது வேறு, விளையாட்டு என்பது வேறு, மத்தியஸ்தம் என்பது வேறு என பல கூறுகளை கொண்டதாகும். நாம் அவைகளை ஒரே கோட்டுக்குள் வரையறுத்து விடாமல் பல துறைகளோடு அவைகளை நோக்கும்போது இலங்கையில் கால்பந்தாட்டத்தை மேலும் முன்னெடுத்து செல்லமுடியும் எனக்கூறினார்.
செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட வருடாந்த பொதுக்கூட்ட அறிக்கை சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு பொருளாளர் எஸ்.எம். ஜிப்ரியினால் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு அறிக்கை திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2017 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத்துக்கு வேட்பு மனுத்தாக்கல் ஏற்கனவே கோரப்பட்டிருந்த நிலையில் செயலாளர் பதவிக்கு மாத்திரம் நான்கு பேர் விண்ணப்பித்திருந்ததால் அந்த பதவிக்காக வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. தேர்தல் ஆணையாளராக எம். சி. ஜமால்தீன் கடமையாற்றினார்.
முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.எம். ஆஸாத், புத்தளம் மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம். ஹிஷாம், எம்.எஸ்.எம். சதாம், எம்.எஸ்.எம். அஹ்சம் ஆகியோர் செயலாளர் பதவிக்காக வேட்மனுத்தாக்கள் செய்திருந்தனர்.
இவர்களில் எம்.எஸ்.எம். அஹ்சம் வருகை தராமையினாலும், எம்.எஸ்.எம். சதாம் போட்டியிலிருந்து விலகி கொண்டதாலும் எஸ்.ஆர்.எம். ஆஸாத் மற்றும் பீ.எம். ஹிஷாம்ஆகியோருக்கிடையில் போட்டி நடாத்தப்பட்டது.
30 அங்கத்தவர்கள் வருகை தந்திருந்த போதிலும் புத்தளம் லிவர்பூல் கழகம் குறிப்பிட்ட தினத்துக்கு முன்பு வேட்பு மனுதாக்கல் செய்யாத காரணத்தினால் அந்த கழக அங்கத்தவர்களுக்கு வாக்களிப்பு தடை செய்யப்பட்டிருந்த நிலையில் 27 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
செயலாளர் பதவிக்கு நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் எஸ்.ஆர்.எம். ஆஸாத் 20 வாக்குகளையும், பீ.எம். ஹிஷாம் 07 வாக்குகளையும் பெற்றுக்கொண்டதால் 13 மேலதிக வாக்குகளால் எஸ்.ஆர்.எம். ஆஸாத் புதிய செயலாளராக தெரிவு செய்யப்பட்டார்.
புதிய தலைவராக முன்னாள் தலைவர் எம்.எஸ்.எம். ரபீக், உப தலைவர்களாக எம்.ஐ.எம். ஹலீம்தீன், ஜே.எம். லிப்டி, வை.எம். நிஸ்தாத், எச்.எம். முளப்பர், சி.எஸ்.எம். ஆசிக் ஆகியோரும், உதவி செயலாளராக ஜே.எம். முஸ்தாக் அஹமதும், பொருளாளராக எஸ்.எம். ஜிப்ரியும், உதவி பொருளாளராக எம்.டீ. ரினாஸ் அஹமதும் தெரிவாகினர்.
புதிய தலைவர் எம்.எஸ்.எம். ரபீக் அங்கு உரையாற்றுகையில், கடந்த வருடத்தை போன்று இவ்வருடமும் சகல கழகங்களுக்கும் 10 ஆயிரம் ரூபாவை வழங்க உள்ளோம். புத்தளம் நகரில் திறமைமிகு ஒரே அணிக்குள் திறமைகளை காட்டும் புதிய கால்பந்தாட்ட கழகம் ஒன்றினை தோற்றுவிக்க உள்ளோம். எதிர்காலத்தில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படும் எப்.ஏ. கிண்ண தொடர் மற்றும் ப்ரிமியர் லீக் தொடர்களில் இந்த ஒரு அணி மாத்திரமே கலந்து கொள்ளும். புத்தளம் நகரின் கால்பந்தாட்டத்தை பொழுது போக்கு விளையாட்டாக அல்லாமல் தொழில் துறை விளையாட்டாக மாற்றி அமைக்க உள்ளோம். அதற்கான அனுசரணையாளர்களையும் நாம் இனங்கண்டுள்ளோம். எமக்கு தரப்பட்டுள்ள இந்த பொறுப்புகளை நாம் மிக அவதானமாக கையாள்வோம் எனக்கூறினார்.
இந்த பொதுக்கூட்டம் இரவு 09.30 அளவில் இரா போசனத்தோடு நிறைவடைந்தது.

 -Mohamed Sanoon-





Post a Comment

0 Comments