புகைப்படம் – ஹஸ்னி அஹ்மத்
நன்றி: PuttalamOnline
கொழும்பு
கொலன்னாவ குப்பை கூளங்களை புத்தளம் அருவக்காடு பிரதேசங்களில் கொட்டுவதால்
புத்தளம், வண்ணாத்திவில்லு, கரைதீவு மற்றும் கல்பிட்டி பிரதேசங்களை சேர்ந்த
16000 குடும்பங்கள் வெகுவாக பாதிக்கப்படவுள்ளதாக ஓய்வு பெற்ற ஆசிரியரும்,
சூழலியலாளருமான எஸ்.எம். முபாரக் தெரிவித்தார்.
குப்பை கூளங்களை புத்தளத்துக்கு கொண்டு
வருவது தொடர்பாக வெள்ளிக்கிழமை (14) புத்தளத்தில் நடைபெறவுள்ள பாரிய
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களை தெளிவு படுத்தும்
செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புத்தளம் பொது நூல் நிலைய கேட்போர்
கூடத்தில் வியாழக்கிழமை (13) காலை நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டினை
புத்தளம் சர்வதமத ஒன்றியம் மற்றும் இளைஞர் அமைப்புக்களை உள்ளடக்கிய
கொழும்பு புத்தளம் குப்பை திட்டத்துக்கு எதிரான மக்கள் இயக்கம் ஏற்பாடு
செய்திருந்தது.
இந்த செய்தியாளர் மாநாட்டில் புத்தளம்
மக்கள் குரல் அமைப்பின் தலைவர் சமந்தா கோரலாராட்சி, புத்தளம் பெரிய
பள்ளியின் தலைவர் பீ.எம். ஜனாப், புத்தளம் ஜம்மியத்துல் உலமா தலைவரும்,
புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரி அதிபருமான அஷ்ஷெய்க் அப்துல்லாஹ்
மஹ்மூத் ஆலிம் (மதனி), ஓய்வு பெற்ற புத்தளம் கரைத்தீவு முஸ்லிம்
மஹாவித்தியாலய அதிபர் அப்துல் அஸீஸ், தழுவ ஸ்ரீ சுமனாராம விகாராதிபதி, சென்
கியூமேன்ஸ் அருட்தந்தை கே. வரதராஜன், இடம் பெயர்ந்த மக்கள் சார்பாக சாரா
கல்வி நிலைய செயலாளர் அஷ்ஷெய்க் அப்துல் மலிக் ஆகியோரும் பங்கேற்று தமது
கருத்துக்களை முன் வைத்தனர்.
ஓய்வு பெற்ற ஆசிரியரும், சூழலியலாளருமான
எஸ்.எம். முபாரக் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மேற்
குறிப்பிட்ட இந்த நான்கு கிராமங்களும் விவசாயம், உப்பு உற்பத்தி, இறால்
வளர்ப்பு போன்றவற்றுக்கு பிரதான பங்கு வகிக்கின்ற பிரதேசங்களாகும்.
இத்தகைய குப்பை கூளங்கள் குறித்த இந்த பிரதேத்தில் புதைக்கப்படும்போது
பாரிய வெள்ளத்தினால் இந்த பிரதேசங்கள் பாதிக்கப்படுகின்கிற போது இந்த
பிரதேசங்களில் அத்தகைய கால பகுதியில் இந்த குப்பைகளினால் நீர்
நச்சுத்தன்மை ஏற்பட்டு காலாவி ஆற்றின் மூலமாக அது கடலில் கலக்கும்போது இந்த
அத்தனை உற்பத்திகளும் அழிவடையும் நிலை தோன்றுகிறது.
இந்த பிரதேசங்களில் அதிகமாக காணப்படும்
ஆழ் கிணறுகளும் இதனால் நச்சுத்தண்மை அடைய உள்ளன. இது தவிர அந்த குப்பைகளை
புத்தளத்துக்கு கொண்டு வர அரசுக்கு நாளொன்றுக்கு 41 இலட்சம் ரூபாய்
செலவாகிறது. இதனை தவிர்த்து இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து கூளங்களை
பிரித்தெடுக்கும் புதிய ரக இயந்திரங்களை அரசுக்கு கொள்வனவு செய்யலாம்.
குப்பைகளின் வாசனையால் வில்பத்து
சரனாலயத்திலுள்ள யானைகள் ஈர்க்கப்பட்டு ஐந்து கிராமங்களை ஊடறுத்து இந்த
பிரதேசத்துக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் பிரதேச மக்களுக்கு
அல்லது மின்சார வேளிகளினால் யானைகளுக்கு உயிராபத்துக்கள் வரலாம்.
உள்ளூராட்சி சட்ட திட்ட பிரகாரம் அந்தந்த பிரதேசங்களில் சேர்க்கப்படும்
குப்பை கூளங்கள் அந்தந்த பிரதேசங்களிலேயே கையாளப்படவேண்டும் என்ற நியதியும்
உள்ளது. 1992 ம் காலம் முதல் ஏற்பட்ட இந்த பாரிய சிக்கலை அந்தந்த
காலப்பகுதியில் சூழல் அமைச்சர்களால் தீர்க்கப்படாமல் ஆகியதே
இப்பிரச்சினைக்கு மூல காரணமாகும் எனக்கூறினார்.
புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரி அதிபர்
அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் (மதனி) இங்கு உரையாற்றுகையில், மனித
நேயம் என்பது ஒரு மனிதனை இன்னொரு மனிதன் கஷ்டத்துக்கு உள்ளாக்காமல்
இருப்பதாகவும். ஒவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதனுக்கு எவ்வேளையிலும் உதவி
செய்யக்ககூடியவராக இருக்க வேண்டும். இதைத்தான் சகல மதங்களும்
வலியுறுத்துகிறது. கொழும்பு மாவட்டம், குப்பைகளிலிருந்து
பாதுக்கப்படவேண்டும் என்பதில் எமக்கு எவ்வித மாற்று கருத்தும் கிடையாது.
அதுக்காக புத்தளம் மக்களை பாதிப்புக்குள்ளாக்குவதை அனுமதிக்க முடியாது.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையினால் நாம் அரசுக்கோ அல்லது கொழும்பு மக்களுக்கோ
எதிரானவர்கள் அல்ல. இலங்கை நாட்டில் ஒரு நல்லாட்சி அமைவதற்கு புத்தளம்
மக்கள் பாரிய பங்களிப்பை நல்கியுள்ளனர். அரசுக்கு நாம் ஆதரவளிக்கின்றோம்.
ஆலோசனை வழங்குன்றோம்.
எனவே அரசாங்கம் உடனடியாக இதனை கவனத்தில்
எடுத்து குப்பைகளை புதிய தொழில் நுட்பங்களின் மூலமாக பயன்படுத்தி மீள்
சுழட்சி மூலம் மாற்று ஏற்பாடுகளை செய்யலாம். கொழும்பிலிருந்து மட்டுமல்ல
நாட்டின் எப்பகுதியில் இருந்தும் புத்தளத்துக்கு குப்பைகளை கொண்டு
வரக்கூடாது என்பதில் நாம் கவனமாக உள்ளோம். மாறாக அரசுக்கு நாம் எந்த வித
எதிரானவர்களும் அல்ல எனக்கூறினார்.
0 Comments