Subscribe Us

header ads

பெண்கள் மஸ்ஜிதுக்கு வருவதனால் பித்னாக்கள் ஏற்படும் என்றால் பிற இடங்களுக்கு அனுப்புவதையும் தவிர்க்க வேண்டும்


பெண்கள் மஸ்ஜிதுக்கு வருவதனால் பித்னாக்கள் ஏற்படும் என்ற கருத்தினைச் சார்ந்தவர்கள், பித்னா ஏற்படும் ஏனைய இடங்களுக்கும் தமது பெண்களை அனுப்புவதிலிருந்து முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் மாளிகையான, சாதாரண ஒரு குடிமகனினதும் உள்ளத்தில் உயர்ந்த அந்தஸ்தினைப் பெற்றுள்ள பள்ளிவாயலிலும் பித்னா ஏற்படலாம் எனப் பயந்தால் பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள், வைத்தியசாலைகள், தொழிற்தளங்கள், பஸ் பிரயாணங்கள் எம்மாத்திரம்? ஆண், பெண் கலப்பு உச்ச அளவில் இடம்பெறும் பல்கலைக்கழகங்களில் முழு நேரம் தங்கி வைத்தியத் துறையில் கற்று விட்டு பள்ளியில் பித்னா வரும் என்று கருத்து சொல்லும் போதுதான் எமக்கு கடுப்பு ஏறுகின்றது.

இன்று பெண்கள் அல்லாஹ்வின் மாளிகையான மஸ்ஜிதினைத் தவிர மற்ற எல்லா பித்னாக்களுடைய இடங்களுக்கும் சர்வ சாதாரணமாக சென்று வருகிறார்கள். காலி முகத்திடல், காலி ஒல்லாந்தர் கோட்டை போன்ற இடங்களில் சாரி சாரியாக குடும்பம் குடும்பமாக அதிகம் நிற்பது முஸ்லிம் பெண்களே. அதில் முகம் மூடிய பெண்கள் கணிசமாக இருப்பார்கள். பெண்கள் பள்ளிக்கு வருவது பித்னா என்ற அதிபிற்போக்குத்தனமான கருத்தியலைக் கொண்டவர்களும் ஒவ்வொரு வாரமும் பொழுதைப் போக்க மனைவி மக்களோடு இந்த இடங்களுக்கு செல்கின்றார்கள். நாம் வேண்டாம் என்று சொல்லவில்லை, அங்கெல்லாம் செல்ல முடியுமென்றால் ஏன் பெண்களை மஸ்ஜிதுக்கு அனுமதிக்க மறுக்கின்றீர்கள்.? அந்த அதிகாரத்தை யார் உங்களுக்குத் தந்தது?


அத்தோடு, ஆண், பெண் பார்வைத் தொடர்பு மாத்திரம் தானா பித்னா? பள்ளிக்குள் எந்த நாளுமே ரகளை, இயக்கச் சண்டை, மையித்துச் சண்டை, நிர்வாகச் சண்டை (அண்மைய திஹாதி உதாரணம்). இவை பித்னா இல்லையா? இதனை அடிப்படையாக வைத்து, பள்ளியில் எந்த நாளும் சண்டை என்பதற்காக இனி வீட்டிலேயே தொழுது கொள்ளப் போகிறேன், பள்ளிக்குச் சென்றால் மற்ற சகோதரர்களோடு மனக்கசப்பும், வெறுப்பும் வருகின்றது என்று நான் முடிவெடுத்தால் அதற்கு நீங்கள் என்னை அனுமதிப்பீர்களா? தொழுது விட்டு வீடு வாசல்களுக்கு செல்லாமல் பாதைகளில் குழுமிக் கொண்டு கதையளந்து கொண்டு பாதசாரிகளுக்கு இடைஞ்சலாக இருப்பது பித்னா இல்லையா? யாரை மடையராக்க வருகின்றீர்கள்?


பெண்கள் ஆண்களைப் போன்று ஐந்து நேரமும் பள்ளிக்கு வர வேண்டும் என்று நாம் சொல்ல வரவில்லை. அது அவர்களுக்கு கஷ்டமும் கூட. மாறாக, பள்ளிவாயலை மையப்படுத்திய பெண்கள் சார்ந்த செயற்றிட்டங்கள், தஹ்வா நிகழ்ச்சிகள் ஒழுங்குபடுத்திக் கொண்டுக்கப்பட வேண்டும் என்பதைத் தான் கூறுகிறோம். கோச்சிப் பெட்டி போல நீளமாக வெறும் தொழுகைக் கூடமாக மாத்திரம் பள்ளிவாயலை அமைக்காமல் அதில் பல்வேறு பிரிவுகளை உருவாக்க வேண்டும். அங்கு பெண்களுக்ெகன்று விசேடமான பிரிவினை உருவாக்க வேண்டும். பெண்கள் அவர்களாகவே சுயமாக வாராந்தமோ அல்லது தமக்கு வசதியான வகையிலோ பள்ளியில் ஒன்று கூடி பெண்கள் சார்ந்த செயற்றிட்டங்களை, தஹ்வா நிகழ்ச்சிகளை மேற்கொள்ள முடியுமான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும். பெண்கள் சூறா அமைப்பு உருவாக்கப்படல் வேண்டும். பெண்களுக்கான வாழ்க்ைகக் கலைகள், அகீதா வகுப்புக்கள், பிக்ஹூ வகுப்புக்கள், குர்ஆன், ஹதீஸ் தப்ஸீர் வகுப்புக்கள், நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்கள் போன்றன பெண்களைக் கொண்டே பள்ளிவாயல்களில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். அவர்கள் ஆண்களோடு இரண்டறக் கலக்க வேண்டிய தேவை இல்லை. அவர்களுக்கு வருவதற்கும், போவதற்கும் பிரத்தியேகமான ஒரு வாயிலை ஏற்பாடு செய்து கொடுக்கலாம்.

இன்று எமது இளம் மாணவிகள் கம்பியூட்டர் கற்பதற்கும், தையல், சமையல் கற்பதற்கும், வழிகாட்டல் நிகழ்ச்சிகளுக்கும் சிங்கள நிறுவனங்களுக்கு சென்று வருவதனைக் காண முடிகின்றது. சில விபரீதங்களும் இதனால் ஏற்பட்டுள்ளதனை மறுக்க முடியாது. ஏன் இவற்றை எமது மஸ்ஜிதை மையப்படுத்தி மேற்கொள்ள முடியாது.? இவற்றை மஸ்ஜிதில் நடாத்த அல்லாஹ்வோ, நபியவர்களோ தடுத்தார்களா? இல்லை, நீங்கள் தான் தடுக்கின்றீர்கள்.

முஸ்லிம் பெண்களுக்கு தமது மதக்கிரிகைகளைக் கூட அவர்களது பள்ளியில் செய்வதற்கு இந்த முஸ்லிம் ஆண்கள் அனுமதிப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை அந்நிய மதத்தினர் அடிக்கடி முன்வைப்பர். எனது அலுவலகத்திலுள்ள சிங்களவர்களுக்கு நான் தஹ்வா செய்ய முற்பட்டால் " போதும் உங்கட மார்க்கத்துட பெரும. பெண்களைப் பள்ளிக்ேக அனுமதிக்காத உங்கள் மார்க்கம் பற்றி எமக்கு தெரிந்து கொள்ள எந்தத் தேவையும் இல்லை என சிங்கள சகோதரிகள் முகத்திலடித்தால் போல் சொல்லி விடுவார்கள். இஸ்லாம் முழு உலகத்துக்குமான பொதுவான மார்க்கம், பிறக்கின்ற ஒவ்வொரு ஆன்மாவும் முஸ்லிமாகவே பிறக்கின்றது என்றிருக்க, மார்க்கத்தை ஒரு சில முல்லாக்களின் பரம்பரைச் சொத்தாக விடுவதற்கும் அவர்கள் சொல்வது மாத்திரம் தான் மார்க்கம் என்ற நிலை தோன்றுவதற்கும் இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இவர்களா எம்மை மறுமையில் சுவர்க்கத்துக்கு அழைத்துக் கொண்டு போகப் போகிறார்கள்?

இன்னும் எழுதலாம். பதிவு அனாவசியமாக நீளும் என்று அஞ்சுகிறேன். எமது கருத்துக்களை நாம் தொடர்ந்து பொதுவெளியில் முன்வைப்போம். யாரையும் அஞ்ச வேண்டிய தேவை இல்லை. எண்ணக்கருக்களை முன்வைத்தவுடனேயே அவை செயலுருவம் பெறுவதில்லை. அப்படி செயலுருவம் பெற்றால் உலகம் ஒரு மினி சுவர்க்கமாக மாறிவிடும். எண்ணக்கருக்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு, அவ்வெண்ணக்கருக்களுக்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கும் அதிகார வர்க்கத்தின் சகல எதிர்ப்புக்களுக்கும் முகம் கொடுத்த பின்புதான் அவை செயலுருவம் பெறும்.

கடைசியாக, பீ.ஜே. யின் சிந்தனைகளை முன்னெடுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், சிரிலங்கா தவ்ஹீத் ஜமாஅத் போன்ற அமைப்புக்களுடன் தான் எமக்கு அதிக முரண்பாடுகள் இருந்தாலும், பெண்கள் சார்ந்த விடயங்களில் தமது கருத்துக்களை மிக தைரியாமாக, எந்த முல்லாக் கூட்டத்துக்கும் அஞ்சாமல் முன்வைப்பதனோடு நின்று விடாமல் உடனடியாக அவற்றுக்கு செயலுருவமும் கொடுக்கும் அவர்களின் தைரியத்தை மனம் திறந்து பாராட்டுகிறேன். நாம் பலமாக ஆதரிக்கும் அமைப்பில் உள்ள சில சகோதரர்கள் (எல்லோரும் அல்ல) பிரச்சினையான கருத்தாடல்களின் போது தலையையும், கால்களையும் இழுத்துக் கொள்ளும் "ஆமை வழிமுறை" யினைப் பின்பற்றும் நேரத்தில் எஸ்.எல்.டீ.ஜே. சகோதரர்கள் மிக தைரியமாக பொது வௌியில் எவருக்கும் அஞ்சாமல் கருத்தாடல் செய்கிறார்கள். அதனை மனம் திறந்து பாராட்டாவிட்டால் நான் ஒரு இஹ்லாஸான தாயி ஆக இருக்க முடியாது.

-Rasmy Galle-


Post a Comment

0 Comments