பெண் சமூகத்தில் அங்கம் வகிக்கும் முக்கியதொரு கதாபாத்திரம், அவ்வாறே இஸ்லாமிய எழுச்சிக்கும் அதன் முன்னேற்றப் பாதைக்கும் சிறந்த பங்களிப்புகளை வழங்கியவள் அவள் என்றால் மிகையாகாது, இத்தகைய சாதனைகளுக்கு பெயர்போன பெண், இன்று அவற்றை சீர்குலைக்கும் வண்ணம் செயற்படுவது தான் கவலைக்கிடமான விடயமாகும்.
மென்மை என்பதற்காகவே பெண் பூக்களைக்கொண்டு ஒப்புவமை கூறுமளவு தகுதிபெறுகிறாள், பெண்ணில் மென்மை இல்லையெனில் அவளை சார்ந்த உறவுகளுக்கு நிச்சயம் பேராபத்து சூறாவளியாக வந்தமையும், இதனால் தான் என்னவோ நபியவர்கள் உலகத்தோடு பெண்ணையும் சேர்த்து பயப்படுமாறு கூறியிருக்கிறார்கள், அவ்வாறெனில் இதன் பிண்ணனி மிகவும் விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதை எம்மால் உணரமுடிகின்றது.
பெண் தாயாக, பாட்டியாக, சகோதரியாக,மகளாக,மனைவியாக,சித்தியாக, பொரியம்மாவாக, ஓர் ஆணுக்கு பல வகையிலும் உதவியும் ஒத்தாசையுமாக இருப்பதோடு பக்கபலமாகவும் இருக்கின்றாள் என்றால் பெண் உண்மையில் போற்றப்படத்தக்கவள் தான். எனினும் இஸ்லாம் எதிர்பார்க்கும் சிறந்த பெண்ணாக திகழவேண்டுமெனில் மேற்குறித்த பெண்கள் குறைந்தபட்சம் இஸ்லாத்தின் அடிப்படைகளை திறம்படக் கற்று அவற்றை நடைமுறைப்படுத்தினால் தான் முடியும்.
உலகில் மனித நாகரீகங்கள் தோன்றி அவற்றை பறைசாற்றும் இடங்களாக இருக்கலாம், பொருளாதாரத்தில் தன்னிறைவடைந்த சர்வதிகார நாடுகளாக இருக்கலாம், உலகளவில் பெரும்பான்மையாக வியாபித்திருக்கும் வேற்று மதங்களாக இருக்கலாம்,பண்டைய மரபுகளையும் வழக்காறுகளையும் சித்தாந்தங்களையும் தன்னகத்தே கொண்டு பெருமை பேசும் சமூகங்களாக இருக்கலாம்,இவற்றில் எதுவாக இருப்பினும் ஒன்றுமே பெண்ணுக்குரிய முழுமையான சுதந்திரத்தையும், உரிமையையும் சரிவர கொடுக்கவில்லை என்று கூறுவது தான் பொருத்தமாகும்.
அடிமைப்பட்டிருந்த பெண்ணை சுதந்திரப் பெண்ணாக மாற்றிய பெருமை இஸ்லாத்திற்கு மாத்திரமே உரித்தாகும். சகல வசதிகளுடன் கூடிய உரிமைகளைக் கொடுத்து பெண்ணைக் கண்ணயப்படுத்திய ஒரேயொரு மார்க்கம் இஸ்லாம் என்றால் மிகையாகாது. பெண் வெளியில் செல்லும் பொழுது ஆடையின் விதிமுறைகளை ஒழுங்காகப் பேணி தன்னை மறைத்து செல்ல வேண்டுமென வலியுறுத்துவதை தரக்குறைவாக நினைக்கும் ஒருசிலர் இஸ்லாம் பெண்ணை அடிமைப்படுத்தி உரிமைகளைக் கொடுக்காது அவளை அடக்கியொடுக்குவதாக தப்பபிப்பிராயத்தை மக்கள் மன்றத்தில் பரப்பி அவர்களை அதன் பால் மூளைச்சலவை செய்வதை கண்கூடாக இன்று காண முடிகின்றது.
மேற்குறித்த வாதம் பிழையானது என்பதை பின்வரும் சில விடயங்களின் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவு பெறமுடியும். மாற்று மதங்கள் பெண்ணுக்கு சொத்துரிமையில் பங்கு கொடுக்காத போது இஸ்லாம் மாத்திரம் தான் அவளை மதித்து சொத்துரிமையில் நீதமான அளவு பங்கை வழங்கியிருக்கின்றது, வயதுவந்த ஆண்கள் இறைவனைத் தொழுவேண்டுமென பணித்திருக்கும் இஸ்லாம், பெண்களது மாதவிடாயின் பொழுது அவர்களுக்கு தொழுகை, நோன்பு போன்றவற்றை விடுவதற்கு பூரண சலுகையை வழங்கியிருக்கின்றது.மேலும் பிள்ளை பெற்ற ஒரு தாய் தனது குழந்தைக்கு பால் கொடுப்பதாக இருப்பினும் அவளுக்குரிய உணவு ஆடை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதை இஸ்லாம் கணவனுக்கே கடமையாக்கியிருக்கின்றது, அவ்வாறெனில் இஸ்லாம் பெண்ணை கௌரவப்படுத்தியிருக்கின்றது என்பதே உத்தமமாகும், அத்தோடு திருமண வேளையில் மஹர், வலீமா போன்ற கடமைகளையும் அதன் பின்னர் மனைவி பிள்ளைகளுக்கான சகல செலவுகளையும் இஸ்லாம் கணவனுக்குக் கடமையாக்கி பெண்ணுக்கு இவ்வாறான செலவுகளை சுமத்தாது அவளை மேன்மைப்படுத்தியிருக்கின்றது. உண்மையைக் கூறுமிடத்து மனைவிக்கு சமைத்தல், ஆடை துவைத்தல் என்பன போன்ற கடமைகளும் கடமைகளே அல்ல!!!(ஆனாலும் அவள் இவற்றை செய்வதால் தரம் குறைந்தவளும் அல்ல)
இவையன்றி இஸ்லாம், கருத்து தெரிவிக்கும் உரிமை, கல்வியுரிமை, தொழில் புரியுமுரிமை, சிறந்த மணவாளனைத் தெரிவுசெய்யும் உரிமை,எழுத்துரிமை, விவாகரத்துப் பெறும் உரிமை, உரிமைகளைப் பெற்றெடுக்க (காழி) நீதிபதியை நாடும் உரிமை மற்றும் மஹ்ரமானவருடன் நடமாடும் உரிமை போன்ற இன்னோரன்ன உரிமைகளை பெண்ணுக்கு வழங்கி அப்பெண்ணை கண்ணியப்படுத்தி உயர்த்தியிருக்கின்றது.ஆதலால் பெண்ணுக்குரிய சம உரிமைகளை வழங்கி அவளை மதித்து கௌரவித்த தனித்த ஒரே மார்க்கம் புனித இஸ்லாம் மாத்திரம் தான்.
எனவே பெண்களும் தமது கடமைகளை சரிவர செய்வதோடு வினைத்திறனுள்ள சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு உந்துகோளாக அமையவேண்டும், இதுவே காலத்தின் கட்டாயத் தேவையுமாகும், இல்லையேல் பிள்ளைகளின் ஆரம்பக்கல்விப் பாசறை சீரற்றுப் போகும் பொழுது சிறந்ததொரு எதிர்கால சந்ததியினரை கட்டியெழுப்புவது சாத்தியமற்றுப்போய்விடும். பெண், இஸ்லாத்தில் அநியாயமற்ற முறையில் நீதமாக உரிமைகளும் சலுகைகளும் கொடுக்கப்பட்டிருப்பதை நினைத்து பெருமைப்படுவதோடு இஸ்லாத்தின் சட்டதிட்டங்களைப் பேணி அவற்றிற்கிணங்க வாழ்வைக் கொண்டுசெல்வது தான் பொருத்தமாகும்.
ஆகவே அனைத்துப் பெண்களும் மார்க்கத்திற்கு முன்னுரிமை கொடுத்து அதன் கடமைகளை சரிவர செய்து, மார்க்கப் பற்றுள்ளவர்களாக திகழ்வதோடு, நற்குணங்களின் ஊற்றுக்கண்களாகவும் விளங்க வல்லவன் அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.
நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
04/09/2016
0 Comments