'எதிர்காலத்தில், மஹிந்த ராஜபக்ஷ என்ற பேயை, குருநாகலில் இருந்து விரட்டியடிப்போம். மீண்டும் அந்தப் பக்கம் அலைந்து திரிய இடமளிக்க மாட்டோம்' என்று, பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். 'ராஜபக்ஷ குடும்பத்தினர் இப்போது, பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குச் செல்கின்றனர்.
ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கும் சென்று வருகின்றனர். அப்பா வரும் போது, மகன் போகிறார். மகன் வரும்போது, பாட்டி போகிறார்' என்றும் ஹெட்டிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற ஐக்கியத் தேசியக் கட்சியின் அபிவிருத்திக் கூட்டமொன்றின் போது, பொன்சேகா கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கடந்த 2010ஆம் ஆண்டின் போது, ஐக்கிய தேசியக் கட்சியினர் தான், எனக்கு மலர்மாலை அணிவித்து வரவேற்றனர். அப்போது எனக்கு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்றவற்றின் ஆதரவும் கிடைத்தது' என்றார். 'யுத்தத்தின் பின்னர், ஐ.தே.க.வானது, ஆதரவற்ற நிலைமைக்கு தள்ளப்பட்டது.
ராஜபக்ஷக்களின் அடாவடி மற்றும் குண்டர் நடவடிக்கைகளுக்குப் பயந்து, அக்கட்சியிலிருந்து முன்வர எவரும் இருக்கவில்லை. அப்போது தான், நான் அக்கட்சியோடு இணைந்து அரசியலுக்குள் பிரவேசித்தேன்' என அவர் மேலும் கூறினார்.
0 Comments