அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான். அவனையே வணங்குங்கள் என்று ஈஸா (அலை) மக்களுக்குப் போதித்தார்கள்.
பனீ இஸ்ராயீலர்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைத்தூதராக வந்த ஈஸா (அலை) பல அத்தாட்சிகளை மக்களிடையே காட்டினார்கள். ஒரு பறவையின் உருவத்தைக் களிமண்ணால் உண்டாக்கி அதில் ஊதினார்கள், அது அல்லாஹ்வின் அனுமதியைப் பெற்று உயிருடைய பறவையானது.
“எனக்கு முன்பு வந்த ‘தவ்ராத்தை’ மெய்ப்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், இத்தகைய அத்தாட்சிகளை உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்காக நான் கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். அவனுடைய தூதராகிய என்னைப் பின் பற்றுங்கள். அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான். அவனையே வணங்குங்கள். இதுவே நேரான வழியாகும்” என்று ஈஸா (அலை) மக்களுக்குப் போதித்தார்கள்.
ஈஸா (அலை) “அல்லாஹ்வின் பாதையை ஏற்று, மற்றவர்களுக்கும் போதிக்க எனக்கு யாராவது உதவி செய்வீர்களா?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவருடைய சிஷ்யர்களான ஹவாரிய்யூன் “அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட நாங்கள், அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்ட முஸ்லிம்களாக, அல்லாஹ்வுக்காக உங்கள் உதவியாளர்களாக இருக்கிறோம். அல்லாஹ் அருளிய வேதத்தை நாங்கள் நம்புகிறோம். அல்லாஹ்வின் தூதரான தங்களையும் பின்பற்றுவோம்” என்று திடமாகக் கூறினர்.
நபி மூஸா (அலை) அவர்களின் காலத்தில் எப்படி சூனியக்காரர்கள் நிறைந்திருந்து, மக்கள் திசை மாறியதை மூஸா (அலை) அல்லாஹ்வின் அருளைக் கொண்டு முறியடித்தார்களோ, அதுபோல மருத்துவர்கள் நிறைந்திருந்து, குணமாக்க முடியாத நோய்களை ஈஸா (அலை) அல்லாஹ்வின் அனுமதி பெற்று குணப்படுத்திக் காட்டினார்கள். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் சுகமாக்கினார்கள், சக்தி படைத்த அல்லாஹ்வின் அருளைப் பெற்று இறந்தோரையும் ஈஸா (அலை) உயிர்ப்பித்தார்கள்.
மக்களுக்குப் பல தெளிவான அத்தாட்சிகள் காட்டப்பட்டபோதும் ஒரு சாரார் ஈஸா (அலை) அவர்களை நிராகரித்து “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை” என்று கூறினர்.
பனீ இஸ்ராயீலர்கள் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு இறைத்தூதர்கள் கொண்டு வந்த அத்தாட்சிகளை அனுபவித்தார்களே தவிர, அதனை அவர்களின் மனம் விரும்பவில்லை. அவர்கள் கர்வம் கொண்டு புறக்கணித்தார்கள்.
நிராகரித்தோர் ஈஸா (அலை) அவர்களைக் கொல்லத் திட்டமிட்டு சதி செய்தார்கள். அல்லாஹ்வும் அவ்வாறே செய்தான். அல்லாஹ் சதிகாரர்களுக்கெதிராக சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
திருக்குர்ஆன் 3:47-54, 5:110-111
- ஜெஸிலா பானு.
0 Comments