மன்னார் நகர சபையினரால் வழங்கப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களுக்கான மீதிப்பணத்தை செலுத்தாத வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு மாநகர சபையினர் எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது,
மன்னார் நகர சபைக்கு அருகில் இயங்கி வந்த தினச்சந்தை வியாபார நிலையம் கடந்த 01-03-2012 அன்று திடீர் தீ விபத்தின் காரணமாக எரிந்து சாம்பளாகியது. இதனால் குறித்த சந்தையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த வர்த்தகர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் மன்னார் தனியார் பேருந்து தரிப்பிடத்திற்கும் மன்னார் சிறுவர் பூங்காவிற்கும் இடையில் நகர சபையினால் 27 கடைகள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டது.
அதில் 6 வர்த்தகர்கள் குறித்த கடையினை முழுத்தொகையினையும் செலுத்தி சொந்தமாக்கியுள்ளனர்.
எனினும் ஏனைய 21 வர்த்தக நிலைய உரிமையாளர்கள் 2 இலட்சம் ரூபாவினை செலுத்திய போதும் மிகுதி 3 இலட்சம் ரூபாய் பணத்தை செலுத்தாத நிலையில் அசமந்த போக்குடன் செயற்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மன்னார் நகர சபை அதிகாரிகள் இன்று காலை குறித்த சந்தை பகுதிக்குச் சென்று மிகுதி பணத்தை செலுத்தாத வர்த்தக நிலையங்களை மூட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் வர்த்தகர்களுக்கும், நகர சபை அதிகாரிகளுக்கும் இடையில் சற்று முறுகல் நிலை ஏற்பட்டது.
எனினும் குறித்த வர்த்தகர்கள் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான பதியுதீனின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மற்றும் மன்னார் நகர சபையின் அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இதன் போது மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் பிரிட்டோ சம்பவ இடத்திற்கு வந்து வர்த்தகர்களுடன் கலந்துரையாடியதோடு வடமகாண சபை உறுப்பினருடன் கலந்துரையாடினார்.
இந்த நிலையில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த வர்ததக நிலையங்களை மூடி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதோடு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.




0 Comments