திருமணத்திற்கு நாள் குறித்த நிலையில், விபத்தில் சிக்கி படுகாயமடைந்த தாதி மாணவி ஒருவர், தனது விருப்பத்தின்படி திருமணம் குறிக்கப்பட்ட அதே நேரத்தில் தனது காதலனை மருத்துவ ஊர்தியில் இருந்தபடி திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா - கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் தாதி டிப்ளமோ படித்து வந்தவர் நேத்ராவதி. இவர், குருசாமி என்ற இளைஞரை காதலித்து வந்தார்.
சித்ரதுர்காவில் உள்ள முருகராஜேந்திர ப்ரிஹான் என்ற மடத்தில் ஒரே நேரத்தில் பல ஜோடிகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்து கொண்டு தாங்களும் திருமணம் செய்ய நேத்ராவதியும், குருசாமியும் தங்களது பெயரை பதிவு செய்து கொண்டனர்.
இந்நிலையில் காதல் ஜோடியான நேத்ராவதியும், குருசாமியும் சித்ரதுர்கா கோட்டையை சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக நேத்ராவதி, கால்தவறி கீழே விழ, அவரது முதுகெலும்பில் அடிபட்டது. உடனடியாக அவரை பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 5 ஆம் திகதி பல ஜோடிகளுக்கு திருமணம் நடக்கும் அதே நாளில், தங்களது திருமணமும் நடக்க வேண்டும் என்ற நேத்ராவதியின் விருப்பத்துக்கு, மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு அளித்தது.
அதன்படி, திருமணம் நடைபெறும் இடத்துக்கு, மருத்துவ ஊர்தியில் அழைத்து செல்லப்பட்ட நேத்ராவதிக்கு, காதலன் குருசாமி அனைவர் முன்னிலையில் தாலி கட்டினார்.
திருமணத்திற்கு பின் மணமகள் நேத்ராவதி கூறும்போது, 'நான் ஒரு தாதி மாணவி. நாங்கள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காதலித்து வந்தோம்.
நாங்கள் இருவரும் அன்று கோட்டையை சுற்றிப்பார்த்து கொண்டு ஒரு இடத்தில் தனிமையில் பேசிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் நான் கால் தவறி கீழே விழுந்துவிட்டேன்.
அதன்பின் எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. என்னை சந்தோஷமாக பார்த்துக் கொள்வார் என்று அவர் மீது நம்பிக்கை உள்ளது' என்றார்.
'நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்தோம். எங்கள் விருப்பப்படியே தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளோம். நான் தற்போது மகிழ்ச்சியாக உள்ளேன். நேத்ராவதியை நான் பத்திரமாக பார்த்துக்கொள்வேன்' என்கிறார் மணமகன் குருசாமி.
திருமணம் முடிந்த பின், நேத்ராவதி மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இன்னும் ஒரு சில மாதங்களில் அவர் குணமடைந்துவிடுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.



0 Comments